சனி, 3 ஜூன், 2017

கலைஞருக்கு ஒரு உடன்பிறப்பின் வைரவிழா அழைப்பிதழ் .

பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றியவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றி, முறையான பயிற்சி அளித்தவர். குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி ஏழைகளை மாடிகளில் குடியேற்றியவர். பேருந்துகளை நாட்டுடைமையாக்கி அரசுடைமையாக்கியவர். கை ரிக் ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக் ஷாக்களைக் கொண்டு வந்தவர். ஏழை எளியோரும் உயர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தந்தவர். சாதி சமய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய சமத்துவபுரங்களை உருவாக்கியவர். தொழிலாளர் தினமான மே நாளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தவர்.
என் உயிரில் கலந்துள்ள தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வைரவிழா அழைப்பு மடல்.
நீண்டகாலம் தழைத்து நின்று நிழலும் பலனும் தரும் உறுதியான மரத்தினை வைரம் பாய்ந்த மரம் என்பார்கள். தி.மு.கழகம் எனும் ஆலமரம் பேரறிஞர் அண்ணாவின் காலத்திற்குப் பிறகும் தழைத்து, செழித்து வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணமான நம் தலைவரின் உறுதிமிக்க நிலைப்பாடு, வைரத்தின் உறுதிக்கு எந்தளவிலும் குறைந்தவை அல்ல.
நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக் கொண்டிருக்கும் பெருமை கொண்டவர் நம் உயிரினும் மேலான அன்புத்தலைவர் கலைஞர் அவர்கள். ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக தமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து, அச்சாணியாக செயல்படுபவர். இந்திய அரசியல் அரங்கில் பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றியவர். தேசிய அளவிலான அணிகளை அமைப்பதிலும், அவற்றுக்கான ஒருமித்த பொதுக்கொள்கைகளை வகுப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து நாட்டின் நலனைக் காத்திட்டவர்.
தமிழகத்தில் நிலைப்பெற்றுள்ள திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சுக் கொள்கையான சமூகநீதிக் கொள்கையை இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் ஏற்க வேண்டிய கொள்கையாக மாற்றிக் காட்டிய சாதனையாளர்.
14 வயதில் எந்தக் கையால் தமிழ்க்கொடியைப் பிடித்தாரோ அதே கையால் தமிழ் இலக்கியத்திற்கு உரமூட்டும் கருத்துகளை, தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை வழி நின்று, பத்திரிகை – நாடகம் – திரைப்படம் – தொலைக்காட்சி, கவியரங்க மேடைகள் என அனைத்து வகை ஊடகங்கள் வழியாக, பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் செயலாற்றிய முத்தமிழறிஞர்.
ஓய்வறியா உழைப்பாளி, மண்ணில் உலவும் உதயசூரியன், சுயமரியாதையையும், பகுத்தறிவையும் அரசியல் களத்தில் விதைத்து, விளைத்து காத்து வரும் சொல்லேருழவர். தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் பயன் விளைவிக்கும் மகத்தானத் திட்டங்களை செயல்படுத்திய தலைசிறந்த ஆட்சி நிர்வாகி. கலைஞர் எனும் மாபெரும் தலைவரைத் தவிர்த்துவிட்டு எதிர்காலத்தில் எவராலும் தமிழகத்தின் வரலாற்றை எழுதிவிட முடியாது.
இத்தனைப் பெருமைகள் கொண்ட தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாளில் கூடுதல் சிறப்பாக, சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா ஆண்டும் இணைந்து நம்மை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மத்தியிலும் மாநிலத்திலும் இயங்கி வருகின்றன. இதில் 60 ஆண்டுகால தொடர்ச்சியான சட்டமன்ற அனுபவமோ, நாடாளுமன்ற அனுபவமோ கொண்டவர்களைத் தேடிப் பார்த்தால், தலைவர் கலைஞர் அவர்களைத் தவிர வேறு எவரையும் அடையாளம் காட்டிட முடியாது. தமிழக வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய ஜனநாயக வரலாற்றிலும் சாதனை மிக்க தலைவராக கலைஞர் அவர்கள் இடம்பிடித்திருக்கிறார்.
எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டாரோ அதனை செயல்படுத்தும் அரசியல் பேரியக்கத்தின் சார்பாகத் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு, அனைத்து தேர்தல் களங்களிலும் வெற்றியைத் தவிர வேறெதையும் அறியாதவர் தலைவர் கலைஞர்.
1957 ல் குளித்தலை தொகுதியில் தொடங்கியது அவரது வெற்றிப் பயணம். 1962 ல் தஞ்சை, 1969, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை, 1977, 1980 தேர்தல்களில் அண்ணாநகர், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம், 1996, 2001, 2006 எனத் தொடர்ச்சியாக சேப்பாக்கம், 2011, 2016 என இருமுறை திருவாரூர் என அவரது வெற்றிப் பயணம் ஓயவேயில்லை. கடந்த 2016 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் நிகழ்த்திக் காட்டியவர் தலைவர் கலைஞர்.
ஒரே கட்சி, ஒரே சின்னம், 13 முறை தேர்தல் களத்தில் போட்டி, அத்தனையிலும் வெற்றி, 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் அந்தப் பொறுப்பினில் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் அதிககாலம் முதல்வராகப் பணியாற்றியவர் என்ற பெருமையும் தலைவர் கலைஞர் அவர்களுக்கே உரியது. சட்டமன்ற மேலவையின் உறுப்பினராகவும் அவர் திறம்பட பணியாற்றியுள்ளார். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டமன்ற செயல்பாடுகளில் வாதத் திறமையாலும், கண்ணியமான வார்த்தைகளாலும் எதிர்த்தரப்பின் இதயத்தையும் கவர்ந்தவர் தலைவர் கலைஞர்.
கழகத்தின் இளைய உடன்பிறப்புகளுக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் மூத்தோருக்கு மலரும் நினைவுகளாக அமைந்திடும் விதத்திலும் தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற வாதத் திறமையை முரசொலி இதழில் பல்வேறு கட்சியின் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் எழுதும் கட்டுரைகளில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். ஒரு சிலவற்றை இந்த மடல் வாயிலாக நானும் உங்களுக்கு எடுத்துக்காட்டிட விரும்புகிறேன்.
1974 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் சட்டப்பேரவையில் தி.மு.க அரசின் சார்பில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியினுடைய சிறந்த சொற்பொழிவாளரும், சட்டமன்ற வாதங்களில் முனைப்பாக செயல்பட்டவருமான டி.என்.அனந்தநாயகி அம்மையார் அவர்கள் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்புகிறார். தலைவர் அவர்களும், பேராசிரியர் அவர்களும் அதற்குரிய பதில்களையும், அம்மையார் பேச்சில் இடம்பெற்ற தவறான விவரங்களுக்கு விளக்கமும் அளித்தபடி இருக்கிறார்கள்.

அப்போது அனந்தநாயகி அம்மையார், தி.மு.கழகத்தினரை நோக்கி, “இவர்கள் சுதந்திர தினத்தை துக்க தினமாகக் கொண்டாடியவர்கள்’‘ என்றார்.
முதல்வர் கலைஞர்: சுதந்திர நாள் ஆகஸ்ட் 15ஆம் நாள். அதனை இன்ப நாளாக அறிவித்தவர் அண்ணா. 1947ல் அந்தநாளைத் துக்க நாளாகக் கொண்டாடச் சொன்னவர் பெரியார். அதற்குப்பிறகு, 1957லிருந்து 1967 வரையில் அந்தப் பெரியாரின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் தேர்தல்களில் நின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.
டி.என்.அனந்தநாயகி: மாநில சுயாட்சி தீர்மானத்தில் இன்டர் ஸ்டேட் கவுன்சில் அமைக்க வேண்டுமென்று கூறியுள்ளீர்கள். அது ஏற்கனவே அரசியல் சட்டத்தில் இருக்கிறது.
முதல்வர் கலைஞர்: அரசியல் சட்டத்தில் இருக்கிறதே தவிர, இதுவரையில் அப்படிப்பட்ட கவுன்சில் அமைக்கப்படவே இல்லை.
அனந்தநாயகி: அதுதான் அடிக்கடி டெல்லிக்கு காவடி தூக்குகிறீர்களே, கேட்பதுதானே?
முதல்வர் கலைஞர்: இப்போதுதான் வழிக்கு வந்தீர்கள். காவடி தூக்கும் நிலைமை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுக்கும் இருக்கிறது. அந்த நிலைமை மாற வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சி கேட்கிறோம்.
இதுதான் தலைவர் கலைஞர் அவர்களின் வாதத்திறமை. எதிர்த்தரப்பினரும் மறுக்க முடியாமல், தனது கொள்கை சார்ந்த திட்டங்களை ஏற்கும் வகையில், அவை நாகரிகத்துடன் கருத்துகளை எடுத்து வைப்பதில் தலைவர் கலைஞருக்கு நிகராக எவரையும் ஒப்பிடமுடியாது. அன்று அவர் முன்வைத்த மாநில சுயாட்சிக் கொள்கைக்கானப் போராட்டத்தை இன்றுவரை தி.மு.கழகம் தொடர்ந்து கொண்டிருப்பதையும், அதன் மீது அக்கறையில்லாத இன்றைய ஆட்சியாளர்கள் டெல்லியிடம் தமிழகத்தை அடகுவைக்கும் வகையில் தலைமைச் செயலகத்துக்குள்ளேயே ஆய்வுக்கூட்டம், அதிரடி சோதனை என மத்திய அரசை அனுமதித்திருப்பதையும் காணும்போது, தலைவர் கலைஞர் அவர்கள் எத்தகைய தொலைநோக்குடன் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்னெடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
எதையும் புள்ளிவிவரங்களுடனும், ஆதாரங்களுடனும் எடுத்து வைப்பது தலைவர் கலைஞர் அவர்களின் சிறப்பு. எதிர்க்கட்சியாக இருந்த தருணங்களில், ஆளுங்கட்சியின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை அடுக்கிய வரலாறுகள் நிறைய உண்டு. தலைவர் கலைஞர் முன்வைத்த ஆதாரங்களையடுத்து, அவருடைய நாற்பதாண்டு கால நண்பரான எம்.ஜி.ஆர் தனது ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளைத் தொடர்ந்து நடைபெறாமல் தடுத்தார் என்பதற்கு பால்டிகா – பல்கேரியா கப்பல் விவகாரம் ஒரு சான்றாகும்.
ஆளுங்கட்சியில் இருந்தால் எதிர்க்கட்சிக்கு உரிய நேரத்தை வழங்கி, பல நேரங்களில் ஆளுங்கட்சியினரை விட எதிர்க்கட்சியினருக்கு கூடுதல் நேரம் வழங்கி, அவர்களின் கருத்துகளை அனுமதித்து, அதன்பிறகு தன்னுடைய பதில்களை ஆணித்தரமான வாதங்களாலும், அசைக்கமுடியாத ஆதாரங்களாலும் முன்வைப்பார் என்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்கு வந்த அம்மையார் ஜெயலலிதா நீண்டநேரம் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியபோது, துளி அசம்பாவிதமும் நிகழாத வகையில் அவையை கண்ணியமாக நடத்திடச் செய்து, உரிய இடங்களில் அவருக்கு விளக்கங்களும் அளித்த பேரவை நிகழ்வு, தலைவர் கலைஞரின் ஜனநாயகத்தன்மைக்குச் சான்று.
எந்த ஒரு பதிலிலும் தன்னுடைய வாதத்திறமையை தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் தலைவர் கலைஞர் எடுத்துரைப்பார். அவர் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் போல ஆளுங்கட்சி உறுப்பினர்களும் நிறைய கேள்விகளைக் கேட்பது உண்டு.
ஒரு முறை கழகத்தின் சார்பில் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேள்வியினை எழுப்பினார்.
கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க): ஒரு பக்கம் மக்கள் தொகையைக் குறைப்பதற்கு அரசாங்கம் குடும்பநலத் திட்டப் பிரச்சாரம் செய்கிறது. மற்றொரு பக்கம் திருமணம் செய்து கொள்வதற்கு நிதி வசதியும் செய்து கொடுக்கிறது. இது முரண்பாடாக இல்லையா?
முதல்வர் கலைஞர்: என்ன செய்வது? கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை என்றால் கூழ் குடிக்கும்போது மீசையை ஒதுக்கிக் கொண்டுதானே குடிக்க வேண்டும்?
கழகத்தின் மற்றொரு உறுப்பினரான மயிலாடுதுறை கிட்டப்பாவும் கேள்வி எழுப்பினார்.
கிட்டப்பா (தி.மு.க): எங்கள் மயிலாடுதுறைக்கு விமான நிலையம் வேண்டுமென்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறேன். எப்போது அந்த விமான நிலையம் வரும்?
முதல்வர் கலைஞர்: கிட்டப்பா.. அது இப்போது கிட்டாதப்பா.
விமானநிலையம் கேட்டவருக்கு ரசனையான பதில் கிடைத்ததில் மகிழ்ச்சி. அதுபோல டி.என். அனந்தநாயகி அம்மையார், “பேரவை லாபிகளில் சி.ஐ.டிகள் வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்கிறார்கள். நேற்றுகூட லாபியில் சி.ஐ.டி.களைப் பார்த்தேன்.” என்றார். அதற்குத் முதல்வர் கலைஞர் அவர்கள், “நீங்கள் பார்த்துக் புரிந்துகொண்டிருக்கிற அளவுக்கு இருந்தால் அவர்கள் திறமையான சி.ஐ.டி.களாக இருக்க மாட்டார்கள்” என்றபோது அவையே சிரிப்பால் அதிர்ந்தது.
1996 ஆம் ஆண்டு நான்காவது முறையாக முதல்வரான தலைவர் அவர்கள் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றினார். பட்ஜெட் விவாதத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் எனப் பலரும் பேசினர். சட்டமன்ற உறுப்பினரான நான், “10 ஆம் வகுப்பு வரை மாணவ-மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் என்பதை 12 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கவேண்டும்’‘ என்ற கோரிக்கையை வைத்தேன்.
நிறைவாக, பதிலுரை அளித்துப் பேசிய முதல்வர் கலைஞர் அவர்கள் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போது, ‘பத்தாவது வரையிலே படிக்கிறவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பதை +2 வரையிலே ஆக்கவேண்டும் என்று உறுப்பினர் ஸ்டாலின் சொல்லி, எதிர்க்கட்சித் தலைவர் வரையில் வழிமொழிந்திருக்கிற காரணத்தால், மகனுக்காக அல்ல, மாணவர்களுக்காக, அவை உறுப்பினர்களுக்காக ஏற்று +2 வரையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்’‘, என்று நயம்படக்கூறி, கோரிக்கையை நிறைவேற்றினார்.
இத்தகைய ஆளுமைத் திறன்மிக்க சொற்களால், தமிழகத்தின் நலனையும் வளர்ச்சியையும் பேணிப் பாதுகாத்த நம் தலைவர் அவர்களுக்கு சட்டமன்ற வைரவிழா கொண்டாடப்படுகிறது. ஆட்சிக்காலம் முழுவதும் அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். அவற்றைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. எனினும், இந்தியாவுக்கே முன்னோடியாக சமூகநீதியைக் காப்பபாற்றும் வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தி, அதில் இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு என வழங்கியவர். தமிழகத்தில் சமூக நீதி தழைத்து, இன்றைக்கு 69% வரை இட ஒதுக்கீடு நிலைக்க அடித்தளம் அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றியவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றி, முறையான பயிற்சி அளித்தவர். குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி ஏழைகளை மாடிகளில் குடியேற்றியவர். பேருந்துகளை நாட்டுடைமையாக்கி அரசுடைமையாக்கியவர். கை ரிக் ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக் ஷாக்களைக் கொண்டு வந்தவர். ஏழை எளியோரும் உயர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தந்தவர். சாதி சமய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய சமத்துவபுரங்களை உருவாக்கியவர். தொழிலாளர் தினமான மே நாளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தவர்.
மெட்ராஸ் என உச்சரித்த இந்திய உதடுகளை சென்னை என உச்சரிக்க வைத்தவர். மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை அரசு வார்த்தையாக்கி, முதலமைச்சரின் அவர்களுக்கான திட்ட கண்காணிப்பை ஏற்படுத்தியவர்.
திருநங்கைகள் என மூன்றாம் பாலினருக்கு அங்கீகாரம் அளித்தவர். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்களால் பயன் கிடைக்கச் செய்ததில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் அவரது சட்டமன்ற வைரவிழாவுக்கு இந்தியத் திருநாடே திரண்டு வந்து வாழ்த்துவது போல மதசார்பின்மையிலும் சமூக நீதியிலும் அக்கறையுள்ள தேசியத் தலைவர்கள், நமது ஆரூயிர்த் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3ந் தேதி சென்னைக்கு வருகிறார்கள்.
தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் என்றால் கோபாலபுரம் இல்லத்திலும், அண்ணா அறிவாலயத்திலும் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் ஆயிரக்கணக்கில் குவிந்து, அன்புப் பரிசுகளை வழங்கி வாழ்த்துபெற்று மகிழ்வது வழக்கம். தற்போது உடல்நலன் குன்றியிருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், மருத்துவர்களின் முழுமையான கண்காணிப்பில் இருக்கின்ற காரணத்தால், அவர்களின் அறிவுரைப்படி செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
80 ஆண்டுகாலமாக தமிழ்ச் சமுதாயம் மேன்மையுற, ஓயாது உழைத்த தலைவர் அவர்கள், மருத்துவ காரணங்களுக்காக சிறிது ஓய்வெடுக்கும் நிலையில், அவரது இலட்சியங்களை நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் வழங்கும் பிறந்தநாள் பரிசாக அமையமுடியும். மருத்துவர்கள் அனுமதித்தால், பிறந்தநாள் விழாவில் உங்களுடன் சேர்ந்து நானும் தலைவரின் முகம் பார்த்து, கரம் பற்றி, அவரின் வாழ்த்துகளைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன்.
எந்த நிலையிலும் தமிழகத்தின் நலனையும், தமிழரின் உயர்வையும், தமிழின் மேன்மையையுமே சிந்திக்கின்ற தலைவரின் மனமறிந்த உடன்பிறப்புகளான நாம், அவர் நல்லமுறையில் சிகிச்சையைத் தொடரும் சூழலிலும், தலைவருடைய பிறந்தநாளையும், அவரது சட்டமன்ற வைரவிழாவையும் இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்கி, தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பெருமை சேர்க்க உழைத்திடுவோம். ஜூன் 3 அன்று சென்னை மாநகரத்தில் திரண்டிடுவோம். தமிழகத் தலைநகர் கழகத் தொண்டர்களால் கறுப்பு – சிவப்பு கடலாகட்டும். இந்தியத் தலைநகர் வரை அதன் அலை வீசட்டும்.
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை: