புதன், 31 மே, 2017

சென்னை சில்க்ஸ் தீ ... டீசல் பேரல்களும் கேஸ் சிலிண்டர்களும் வெடித்து எரிகிறது

ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக வைக்கப்பட்ட டீசல் பேரல்களும், சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டர்களும் சேர்ந்து எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால், இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் இருந்ததால் பிற்பகல் வரை வெளியில் நின்றவாரே தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரமும், துளையிடும் பெரிய இயந்திரமும் வரவழைக்கப்பட்டு, கட்டிடத்தில் ஆங்காங்கே துளைகள் இடப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் 150 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏன்?
10 மணி நேரம் கடந்தும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதற்கு என்ன காரணம் என்று தீயணைப்பு வீரர்களே பதில் அளித்தனர்.
''கட்டிடத்தின் கீழ் தளத்தில் ஜெனரேட்டர்கள் உள்ளன. ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக பெரிய பேரல்களில் டீசல் வைத்துள்ளனர். இதேப்போல 7-வது தளத்தில் உள்ள சமையல் அறையில் காஸ் சிலிண்டர்களும் இருந்துள்ளன. தீயில் டீசல் பேரல்களும், சிலிண்டர்களும் சேர்ந்து எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், கடை முழுவதும் ஆடைகள் இருந்ததால் அவை எளிதில் தீ பிடித்து எரிகின்றன'' என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.  tamilthehindu

கருத்துகள் இல்லை: