பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்
நினைவேந்தல் நிகழ்வு கடந்த 7 வருடங்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில் காரணமேயில்லாமல் தடைவிதிக்கப்பட்டது. நினைவேந்தல் நடத்த முயன்ற தோழர்களைக் கைது செய்துள்ளது. அவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடவில்லை. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கவில்லை ஆனால் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு தோழர்கள் மேல் போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் எந்த நிபந்தனையுமின்றித் திரும்பப்பெறவேண்டும். இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல ஜனநாயகப் படுகொலையும் கூட.
இயக்குநர் பாலாஜி சக்திவேல்
நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்னும் கேள்வி எழுகிறது. மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் இது தான் கதி என இந்தக் அரசு நம்மை எச்சரிக்கிறது. அதையே இந்த குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது காட்டுகிறது. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கின்ற செயல். இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் நாம் தமிழர்களே அல்ல.
இயக்குநர் வ.கௌதமன்
இந்தக் குண்டர் சட்டம் போடப்பட்டது தமிழக அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. இந்திய அரசு கொடுத்த பட்டியலில் உள்ளவற்றையே இங்குள்ள தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. 7 தமிழர்கள் விடுதலை, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், மீனவர் பிரச்னை, ஈழ இனப்படுகொலை ஆகியவற்றிற்கெல்லாம் போராடியதன் விளைவாகவே இந்தக் குண்டர் சட்டம் இந்தத் தோழர்கள் மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டில் லட்சக்கணக்காகக் கொன்று குவிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்காக அழுதிடக் கூட உரிமையில்லை. விநாயகர் ஊர்வலம் நடத்திக் கடலையே அசுத்தப்படுத்துவதற்குத் தடை இல்லையா? ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர்ருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்குத் தடை இல்லையா? தமிழக அரசுக்கு அதன் அமைச்சர்களுக்கு ரெய்டு வந்துவிடுமோ என்று பயம். அவர்களது பலவீனத்திற்காகத் தமிழர் விரோதச் செயல்களில் ஈடுபடும் மத்திய அரசுக்குத் துணை போகிறது. குண்டர் சட்டம் போட்டால் அவர்களை முடக்கிவிடலாம் என்று எண்ணுவது குழந்தை தனமானது. மனித உரிமை மீறல். இங்கு வந்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தேசிய விருதுபெற்றவர்கள். குரூரமான இந்தச் சட்டத்தை எதிர்க்கும் இந்தப் படைப்பாளிகளின் கோரிக்கைக்கு இந்த அரசு மதிப்பளித்து அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுதலை செய்யப்படவேண்டும். அது தான் அறம். தனி மனித வாழ்வுக்கே அறம் முக்கியம். ஒரு அரசு அறமின்றிச் செயல்படக்கூடாது. திருமுருகன் காந்தி மேல் போடப்பட்ட குண்டர் சட்டம் தொடக்கமே. தொடர்ந்து தமிழர் நலனுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மேல் அடுத்தடுத்து இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என எனக்குத் தெரியும். என் மேலும் இந்தச் சட்டம் பாயும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்.
இயக்குநர் பிரம்மா
பள்ளி மாணவனாகத் தேசப் பற்றுடன் வளர்ந்த என்னை இவர்களது இந்த அடக்குமுறை யோசிக்கவைக்கிறது. தியேட்டரில் தேசியக் கீதம் முடிந்த பின் செல்வோம் என்று எண்ணுமளவுக்கு தூண்டியுள்ளது. மக்கள் எதை உடுத்தனும், எதை உண்ணனும், எங்கு வாழனும் என்பதை அரசு முடிவு செய்யும் சூழல் நிலவுகிறது. நினைவேந்தல் என்பது இறந்தோர்களுக்கு நாம் செய்யும் ஈமக் கிரியை. கங்கை உட்பட நீர்நிலைகளின் ஓரம் செய்யும் இந்தப் பண்பாட்டு நிகழ்வுக்குத் தடைவிதிப்பது கண்டிக்கத்தக்கது.
குண்டுவீசி, அவமானப்படுத்தி, கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் இந்தச் சடங்கைத் தடுப்பது நியாயமற்றது. இதைச் செய்த எம் தோழர்களைக் கைது செய்வதும் குண்டர் சட்டம் போடுவதும் அடிப்படை உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது. இதைச் செய்த இந்த அரசு என் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கைது செய்யப்பட்ட அனைத்துத் தோழர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன்.
இயக்குநர் கமலக்கண்ணன்
வரலாற்றை மறைக்கும் வேலைகளில் இந்த அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. 2000 ஆண்டு பழமைவாய்ந்த கீழடி அகழாய்வை மூடிமறைக்கும் வேலைகளில் இறங்கியுள்ள இவர்கள் 10 ஆண்டு கூட ஆகாத தமிழினப்படுகொலையை மறைக்கும் வேலையிலும் இறங்கியுள்ளனர். இதுவரை நடைபெற்ற எல்லா நினைவேந்தலிலும் நான் பங்கேற்றுள்ளேன். மிகவும் அமைதியான முறையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெறும் இந்நிகழ்வுக்குத் தடைவிதிப்பது வேதனையளிக்கிறது. மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் மனிதாபிமானமற்றது ஏற்றுக்கொள்ள முடியாதது. எதிர்ப்பு குரலையும் மாற்றுக்குரலையும் நசுக்குவது ஜனநாயகத்திற்குப் பிரயோஜனமற்றது. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகப் போராட்டங்கள் வேறு திசைக்குச் செல்ல வழிவகுக்கும்.
இயக்குநர் வெற்றிமாறன்
சகிப்புத்தன்மையற்ற போக்கின் வெளிப்பாடு தான் இத்தகைய கைது நடவடிக்கை மற்றும் குண்டர் சட்டம் பிரயோகம். இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும். இரண்டு அவர்கள் சொல்வதையே கேட்க வேண்டும். இங்கு மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஊடகங்களில் மறுக்கப்படும் செய்திகளைச் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறோம். தற்போது இதற்கும் சென்சார் வரவிருக்கிறது. மக்களைப் பிரிக்கின்ற வேலைகளில் இவர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பொய்வழக்கு போட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட தோழர்கள் மற்றும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வருக்கும் எங்கள் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இயக்குநர் ராம்
போராடுபவர்களைத் தேசத்துரோகிகளாகச் சித்தரிக்கும் போக்கு இங்கு நிலவுகிறது. மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்களைத் தொடர்ந்து குறிவைத்து இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கான தமிழர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 7 வருடங்களாக நடைபெறுகிறது. இது போராட்டம் அல்ல நினைவேந்தல். ராம்விலாஸ் பஸ்வான் உட்படப் பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். தமிழர் கடல் என்று அழைக்கப்படுகிற மெரீனாவில் நினைவுத் தூண் எழுப்பக் கோரிக்கைகளும் எழுந்தவண்ணம் உள்ளது. வன்முறையாளர்கள் மேல் பிரயோகிக்கப்படும் இந்தக் குண்டர் சட்டத்தைத் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் மேல் இந்த அரசு பயன்படுத்தியுள்ளது. இது ஆச்சரியமானது அல்ல. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது தான். இது அவர் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியதற்கும் ரேசன் கடைகள் மூடப்படுவதைக் குறித்து முன்கூட்டியே அறிவித்ததற்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றிற்கெல்லாம் தொடர்ந்து போராடுவதற்காகவுமே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நாளை படைப்பாளிகள் தனிமனிதர்கள் யார் மேலும் இத்தகைய சட்டம் பாயலாம். இந்தியாவில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்ஸியை நான் பார்த்ததில்லை. இப்போது நடப்பவைகளை பார்த்து எமர்ஜென்ஸி இப்படிதான் இருந்திருக்கும் என உணரமுடிகிறது. மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது தான் ஜனநாயகப்பூர்வமான அரசு எனக்கூறிய ஜெயலலிதா தனது ஆட்சியில் ஆண்டுக்கு 22,000 போராட்டங்களுக்கு மேல் நடைபெறுகிறது எனக் கூறினார். ஆனால் இப்போதுள்ள அரசு போராடுபவர்களைத் தேசத் துரோகியாகப் பார்க்கிறது. ஒரு அரசைக் கேள்வி கேட்பது தான் உண்மையான தேசப் பற்று. தோழர்கள் மேல் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அரசப்பயங்கரவாதத்தைக் காட்டுகிறது.
இயக்குநர் அமீர்
ஜனநாயக நாடு என்னும் போர்வையில் உள்ள சர்வாதிகார நாட்டில் இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எது ஜனநாயகம்? எது அடிப்படை உரிமை? என்னும் கேள்வி எழுகிறது. ஊடகத்துறை தான் நாட்டை வழிநடத்தனும். சாமானியர்களுக்கும் பாமரர்களுக்கும் சொல்லவேண்டியது உங்கள் பொறுப்பு. கட்சிகள் சொல்வதை மட்டும் தான் கூறுகிறீர்கள், பின்விளைவுகளை எடுத்துக்கூறுவதில்லை. தொலைக்காட்சிகளில் நடத்தும் விவாதமே ஏமாற்று வேலையாக இருக்கிறது. ஒரு கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என மூன்று பேரைக் கூட்டி நெறியாளர் பேசுகிறார். ஆனால் எது உண்மை என்பதை மக்களுக்குக் காட்டவேண்டும்.
இங்குத் தேசப் பக்தி திணிக்கப்படுகிறது. 12 வயதில் என் தந்தையுடன் நான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு வெளிநாட்டவரின் மேல் என் தந்தையின் கால் பட்டுவிட்டது. அதற்கு உடனே அந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர் ‘ப்ளடி இந்தியன்’ என்று திட்டினார். அதற்கு என் தந்தை நான் செய்தது தவறு தான். அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். அதற்கு எதற்காக என்நாட்டை இழுக்கிறாய் என்று சண்டை போட ஆரம்பித்தார். அப்போதே என் மனதில் தேசபக்தி உருவானது. அந்த நேரம் மோடி ஆர்.எஸ்.எஸ்.-இல் சேர்ந்து எங்கோ இருந்திருப்பார். இவர்கள் எனக்குத் தேசபக்தியை ஊட்டவேண்டும் என்ற அவசியமில்லை. எங்கள் தேசப் பக்தியை நிரூபிக்க வேள்வியில் குதிக்கவா? மாட்டுக்கறி தடை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இங்கே ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நம்மைத் தள்ளுகிறார்கள். மாநிலச் சுயாட்சியை இந்தியாவிலேயே முதன்முறையாக முன்னெடுத்தது தமிழகம் தான். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாகத் தான் தமிழக அரசு ஜெயலலிதா வரைக்கும் இருந்துள்ளது. ஆனால் இந்த அமைச்சர்களின் பலவீனத்தால் மத்திய அரசு தலைமைச் செயலகம் வரை உள்ளே நுழைந்துள்ளது. ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வு, உணவு பாதுகாப்பு மசோதா போன்றவைகளுக்கு இவர்கள் போய்க் கையெழுத்திட்டுவந்தது கேவலமான செயல்.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கும் இந்த அரசு நினைவேந்தலுக்குத் தடைவிதிக்கிறது. நினைவேந்தலுக்காகத் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் கைதுசெய்யப்படவில்லை. மத்திய அரசை எதிர்த்தனாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். நான் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டு வரவில்லை. இந்த அரசை அச்சுறுத்த வந்துள்ளோம். இன்று குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தோழர் திருமுருகன் காந்தி பெரிய தலைவராக வெளியே வருவார்.
இயக்குநர் பாரதிராஜா
பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் ‘பிராது’ கொடுக்கவந்துள்ளேன். இங்கு நடைபெறும் அத்தனை சம்பவங்களுக்கும் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. இல்லையேல் விபரம் தெரியாதவர்களிடமெல்லாம் போய் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்பீர்களா? நானும் அரசியலில் இருந்தேன். இளம் வயதில் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பெருந்தலைவர் காமராஜர் தோல்விக்குப் பின் அரசியலிலிருந்து வெளியேறிவிட்டேன்.
இப்போது குண்டர் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி கொலை செய்தானா? வன்முறையில் ஈடுபட்டானா? பாம் வைத்தானா? அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியது குற்றமா? தடைவிதிக்கப்பட்ட பகுதியில் நினைவேந்தல் நடத்தியதற்காகக் கைது செய்தார்களாம். தடையை மீறுவது ஓர் அடையாளம். திருமுருகன் காந்திக்காக 8 பேர் இன்று பேசுகிறோம். நாளை 800 அடுத்து 8 கோடி பேரும் பேசுவார்கள்.
தமிழன் வேறு எங்காவது போய் அரசியல் செய்யமுடியுமா? யார் வேண்டுமென்றாலும் எம் தலையில் கொட்டலாம் என்ற நிலை உள்ளது. மொழி, இனம் விஷயத்துல தமிழனின் வீரம், அறிவு, பற்று எல்லாம் துரு பிடித்துப் போய்விட்டது.
நாங்கள் படைப்பாளிகள் எங்கள் மடியில் கணம் இல்லை அதனால் துணிந்து சொல்வோம். திருமுருகன் காந்தி உட்படச் சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அனைவரும் விடுதலைசெய்யப்பட வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியூரில் இருக்கும் இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் சத்யராஜ் இந்த சந்திப்பில் பங்குகொள்ளமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
-மதரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக