வெள்ளி, 2 ஜூன், 2017

நீதிதேவன் குன்ஹாவின் தீர்ப்பு... .3,000 ஏக்கர் சொத்துகள் பறிமுதல் - மூச்சுமுட்டும் கணக்கு!

சிறப்புக் கட்டுரை: 3,000  ஏக்கர் சொத்துகள் பறிமுதல் - மூச்சுமுட்டும் கணக்கு!
மின்னம்பலம்: சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு தொடங்கிவிட்டது. இதுபற்றி ஏற்கெனவே நமது மின்னம்பலம் இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்படும் சொத்துகளின் மதிப்பு எவ்வளவு என்ற கணக்கு, அதிகாரிகளைத் தலைபிய்த்துக் கொள்ளவைக்கும் அளவுக்கு இருக்கிறதாம்.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு நடந்தபோது ஜெயலலிதா உள்ளிட்டோரின் 128 சொத்துகள் அட்டாச் செய்யப்பட்டன. அதாவது நீதிமன்றத்தால் கையகப்படுத்தப்பட்டன. இதில் 68 இடங்களில் சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம் என்று 2௦14ஆம் ஆண்டு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார். இதை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.


நால்வருக்கும் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜெயலலிதா உயிரோடு இல்லை. அதனால் மற்ற மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேநேரம் தண்டிக்கப்பட்டவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது பற்றி விசாரணை நீதிமன்றம் என்ன உத்தரவிட்டதோ அதை உறுதி செய்திருந்தது உச்ச நீதிமன்றம்.
ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை எவ்வாறு கருதுவது என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தபோது... ‘ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்க இயலாது. அதேநேரம் சசிகலா மற்றும் இருவர் தங்களுக்கு விதிக்கப்பட்ட பத்து கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தியாக வேண்டும்’ என்று கூறிவிட்டது.
நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்திட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா குற்றவியல் சட்ட அவசரத்திருத்தம் 1944இன்படி இந்த வழக்கில் நீதிமன்றத்தால் இணைக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு உத்தரவிட்டிருந்தார். குற்றவியல் சட்டத்தின் 352ஆவது பிரிவும் குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கிறது. தனி நீதிபதியின் மதிப்பீட்டின்படி ஜெயலலிதா உள்ளிட்டோரால் வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு 53 கோடி ரூபாய்.
பறிமுதல் என்பதன் நோக்கமே குற்றவாளிகள் சட்டத்தை மீறி சேர்த்த ஆதாயங்களை அவர்களிடம் இருந்து அகற்றுவதுதான். அப்படியென்றால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவே அந்த சொத்துகளை விட்டு அகன்றுவிட்டபோது அதாவது இறந்துவிட்டபோது ஏன் இந்த பறிமுதல் என்ற கேள்வியை சிலர் கேட்கிறார்கள். ஆனால், சட்ட ரீதியில் மரணம் என்பது ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கைத்தான் முடிவுக்குக் கொண்டுவருமே தவிர, அவரது சொத்துகளை அல்ல. குற்றவாளி இறந்துவிட்ட நிலையிலும், அவரது சொத்துகள் இறந்துவிடுவதில்லை.
ஜெயலலிதா வழக்கின் விசித்திரமே இதுதான். ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து கர்நாடக அரசு அப்பீல் செய்ததை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டபோது ஜெயலலிதா உயிரோடு இருந்தார். இந்நிலையில்தான் உச்சநீதிமன்றம் பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மீதான தனி நீதிமன்றத் தண்டனையை உறுதிப்படுத்தியது.
தற்போது தமிழக அரசு ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய முடிவெடுத்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு ஜெயலலிதா உள்ளிட்டோரின் பெயர்களிலும், வெவ்வேறு போலி நிறுவனங்களின் பெயர்களிலும் இருக்கும் சொத்துகளை அரசின் வசம் கொண்டுவர வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
இந்த செயல்முறை முடிவுக்கு வந்தபிறகு இந்த சொத்துகளை ஏலம் விடவோ அல்லது அரசின் சொத்துகளாக தொடர்வதோ அரசின் முடிவு.
இப்போது சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான தலா பத்து கோடி ரூபாய் வீதம் முப்பது கோடி ரூபாயைச் செலுத்தத் தவறும்பட்சத்தில், பறிமுதல் செய்யப்பட்ட இந்த சொத்துகளை விற்று அதிலிருந்து அபராதத்தை வசூலிக்கலாம். அவர்களது பெயரில் இருக்கும் ஃபிக்ஸ்டு டெபாசிட் தொகையையும் அபராதத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனி நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹாவின் தீர்ப்பின்படி இந்தோ - தோஹா கெமிக்கல்ஸ், பாரா மேச்சுடிக்கல்ஸ், சிக்னோரா என்டர்பிரைசஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், மீடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர் வே அக்ரோ புராடக்ட்ஸ் ஆகிய கம்பெனிகள் போலிகள். இந்த கம்பெனிகள் ஜெயலலிதாவுக்காக அவரது பினாமிகளால் நடத்தப்பட்டவை என்று அரசுத் தரப்பு வாதிட்டது. குற்றவாளிகள் சட்ட விரோதமாக முறைகேடாக சேர்த்த பணத்தை உள்வாங்கிக் கொள்ளும் ஒரு புகலிடமாக இந்த போலி நிறுவனங்கள் செயல்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா தரப்பால் வழக்கு விசாரணையின்போது உரிய பதில் தரப்படவில்லை.
தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் சொல்லப்பட்ட முக்கியமான வாசகங்கள்...
“இந்த வழக்கின் அஸ்திவாரமாக இருப்பதே முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்துகள்தான். பெரும் அளவிலான சொத்துகள் ஐந்து ஆண்டுகள் என்னும் குறுகிய காலத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதிகாரம் என்பது எப்படி சட்டவிரோதமான செயல்களுக்கு ஊக்கச்சக்தியாக செயல்பட்டு ஜனநாயகக் கட்டமைப்புக்கு பெரிய ஆபத்தாக மாறுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். அதிகாரத்தின் உயர்பதவியில் இருப்பவர்கள் இதுபோல ஊழல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டால், அவர்களுக்குக் கீழே பணிபுரிவர்களும் நிச்சயமாக முறைகேடான செயல்களில் ஈடுபடுவார்கள்” என்பதுதான்.
இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட அனைத்து சொத்துகளும் ஜெயலலிதாவின் பெயரில் அமைந்திருக்கின்றன. மேலும், சென்னையைச் சுற்றி அமைந்துள்ள பண்ணை வீடுகள், கடற்கரை சொத்துகள் பெரும்பாலும் ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரால் வாங்கப்பட்டிருக்கின்றன. அந்த நிறுவனங்களில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.

800 ஏக்கர் பரப்பளவுள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்குப் பங்கு இருக்கிறது. மிக குறைந்தபட்சமாக மதிப்பிட்டால்கூட அந்த எஸ்டேட்டின் மதிப்பு 4௦௦ கோடி ரூபாய் வருகிறது. ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவின் மதிப்பு 5௦ கோடி ரூபாய் என்கிறார்கள். அதற்கு அருகிலேயே கங்கை அமரன் பையனூரில் 22 ஏக்கர் பரப்புள்ள நிலம் வைத்திருந்தார். அப்போதே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை சசிகலா வெறும் 13 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இதையடுத்து இருக்கும் இன்னொரு நபருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தின் மீதும் சசிகலாவின் பார்வை படிந்தது.
ஜெயலலிதாவின் வீடான போயஸ் கார்டனுக்கு அருகே இருக்கும் 3,800 சதுர அடி நிலம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டது. அன்று எட்டு லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்த இடத்தின் இப்போதைய மதிப்பு ஏழரை கோடி ரூபாய். அதே போயஸ் கார்டன் பக்கத்தில் இன்னொரு நிலம் 1991ஆம் ஆண்டு 12.6 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இதன் இப்போதைய மதிப்பு பத்து கோடி ரூபாயாகும்.
இவ்வழக்கின் நான்காவது குற்றவாளியான சுதாகரன் ஜெயலலிதாவின் முதல் ஆட்சி காலத்தில் 1993ஆம் ஆண்டு சென்னை அரும்பாக்கத்தில் 38 லட்ச ரூபாய்க்கு வாங்கிய திருமண மண்டபத்தின் இன்றைய மதிப்பு ஐந்து கோடி ரூபாய். மேலும் அவர் கிழக்குக் கடற்கரை சாலையில் 21,600 சதுர அடி மனையை பவர் ஆஃப் அட்டர்னி மூலம் பத்து லட்சத்துக்கு வாங்கினார். இன்று அதன் மதிப்பு 18 கோடி ரூபாய்.

சுதாகரன் லெக்ஸ் ப்ராபர்ட்டிஸ் என்ற நிறுவனத்தை வைத்திருந்தார். இந்த நிறுவனம் சென்னை முழுவதும் சொத்துகளை வாங்கிக் குவித்தது. தேனாம்பேட்டையில் 5,533 சதுர அடி நிலத்தை 52 லட்சத்துக்கு வாங்கினார். இதன் இப்போதைய சந்தை மதிப்பு பத்து கோடி ரூபாய்க்கும் மேல் என்கிறார்கள் ரியல் எஸ்டேட்காரர்கள். மேலும் சுதாகரன் ஜெயலலிதாவின் பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார். ஆனால், அவற்றில் பலவற்றில் ஜெயலலிதா பங்குதாரராக இல்லை. உதாரணத்துக்கு ஜெ ஃபார்ம் ஹவுஸ். இந்த நிறுவனம் ஈஞ்சம்பாக்கத்தில் 1.29 ஏக்கர் நிலத்தையும், சோழிங்கநல்லூரில் 12,900 சதுர அடி நிலத்தையும் வாங்கியது. இதன் மதிப்பு 50 கோடி ரூபாய் இருக்கும்.
இவ்வாறு மாவட்டம்தோறும் ஓடி ஓடி கணக்கெடுத்துப் பார்த்தால் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளால் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டு இப்போது கையகப்படுத்தப்பட வேண்டிய சொத்துகளின் மதிப்பு 3,000 ஏக்கர் என்பதுதான் மூச்சுமுட்டும் கணக்கு!

கருத்துகள் இல்லை: