புதன், 31 மே, 2017

ஹோட்டல் வேலை நிறுத்தம் நேரடி காட்சிகள்

நிகழ்களம்: ஹோட்டல் உரிமையாளர்கள் ஸ்டிரைக்: லைவ் ரிப்போர்ட்!மின்னம்பலம் :தமிழகத்தின் தலைநகரமான சென்னை, வந்தாரை வரவேற்று 80 சதவிகித, தமிழகத்தின் பிறமாவட்டத்தினரையும், இந்தியாவின் பிற மாநில மக்களையும் கொண்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 'மெட்ரோ'நகரம். இப்படி சென்னையில் பணிபுரிபவர்களுக்காகவே, மாநகரில் பேச்சுலர்கள் அதிகம் தங்கும் பல மேன்சன்களையும், திரும்பும் இடமெல்லாம் 'வாடகைக்கு வீடு கிடைக்கும்' எனும் பதாகைகளையும் அடிக்கடி காணமுடியும்.
இப்படி பிழைப்புக்காக புலம்பெயர்ந்து வந்து பணியாற்றும் இளைஞர்கள், வயதான குடும்பஸ்தர்கள், பணியின் காரணமாக ஹோட்டல்களில் சாப்பிடும் சென்னை பூர்வகுடிமக்கள் என ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். அப்படியிருக்க, ஜிஎஸ்டி வரிக்கு எதிராக,நேற்று மே-30ல் ஹோட்டல்கள் நடத்திய ஸ்டிரைக், மக்களுக்கு நேரடியாக எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, என்பதைக் காண மாநகரின் பல இடங்களில் நேரடியாக களம் கண்டோம். ஸ்டிரைக்கானது முழு நாள் நடத்தப்படும் என அறிவிப்பு விதிக்கப்பட்டிருந்ததால், மதியத்துக்குள் மேல், எங்கள் பரிசோதனை முயற்சிகளை சஸ்பென்சாக துவக்கினோம்.


திருவல்லிக்கேணி(மாலை- 3.30 முதல் 6 மணி வரை): சென்னையில் அதிகமான மேன்சன்கள் இருக்கும் இடம் இது. இப்பகுதியில் சிஎன்கே சாலை, காகிதே மில்லத் சாலை, விக்டோரியா விடுதி சாலை, அக்பர் சாகிப் தெரு எனப்பல இடங்களில் சுற்றினோம். திருவல்லிக்கேணி என்றவுடன் நினைவுக்கு வரும் பிரபலமான ஹோட்டல்கள் சங்கீதா, காசி விநாயகா மெஸ், பாரதி மெஸ் மற்றும் சிறுசிறு தேநீர் கடைகள் செயல்படுகிறதா...எனப்பார்த்தோம். பாரதி மெஸ் மற்றும் சில பிரபலமடையாத மெஸ்கள் திறந்திருந்தன. இந்த ஸ்டிரைக் குறித்தே தெரியாததுபோல், பெரும்பாலான டீக்கடைகள் இயல்பாக திறந்திருந்தன.

இதுகுறித்து அக்பர் சாகிப் தெருவில் இயங்கி வந்த ஒரு உணவகத்தில் பணிசெய்யும் தர்மா (42) கூறுகையில்,' நிறைய பேர் வந்து நாளைக்கு ஸ்டிரைக்காமே...உங்க கடை திறக்குமானு வந்து சந்தேகமா தான், முதல் நாள் கேட்டாங்க. கொஞ்ச நாளா வியாபாரம் டல்னால நாங்க, வியாபாரத்தை இன்னிக்கும் (மே-30) துவக்கிட்டோம். இன்னிக்கு காலையில, மதியத்துல சாப்பாடு, டிபன்னு..எங்க கடையாண்ட வந்து கேட்குறவங்களுக்கு, கொடுக்க ஆள் இல்லை. அத்தினிபேர் வந்துட்டாங்க. எப்பயும் போல தான், ரெடிபண்ணுனோம். ஆனா, எல்லாமே சீக்கிரம் வித்திடுச்சு. இதுனால மேன்சன்ல தங்கியிருக்கிற வேலைக்குப்போற பசங்க, காலேஜ் படிக்கிறவங்க..எல்லாம் ரொம்ப சிரமப்பட்டுபோயிட்டாங்க' என்றார்.

திருவல்லிக்கேணியில் பணியின் காரணமாக மேன்சனில் தங்கியிருக்கும் நிஜாம்(56), ஸ்டிரைக் குறித்து கூறுகையில்,' எனக்கு சொந்த ஊரு, திருநெல்வேலி- மேலப்பாளையம். ஸ்டிரைக் பத்தி முன்னாடியே தெரிஞ்சதுனால...எல்லாரும் கொஞ்சம் நேராமவே எழுந்து,திறந்திருக்கிற ஹோட்டல்களைத் தேடி கிளம்பிட்டாங்க. ஆனா, சில இந்தி பசங்கதான் சாப்பிடல. இன்னிக்கு பல இடங்களில் மெடிக்கல்ஷாப்பும் மூடியிருக்கு. காதுவலிக்கு மாத்திரை வாங்கணும்னு, நானும் காலையில் இருந்து அலையிறேன். ஒண்ணு கூட தட்டுப்படல. இதில், குடிநீர் கேன்காரங்க செஞ்ச வேலைநிறுத்தத்துல மக்கள், ரொம்ப அவதிப்பட்டுட்டாங்க. ஆனா, பிரதமர் இதெல்லாம் கண்டுக்கிடாம நாடு, நாடு பறக்கிறாரு. திடீர்னு நோட்டு செல்லாதுன்றாரு. மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாதுன்றாரு. இப்போ, ஹோட்டல்ல வரிய...ஏத்திருயிருக்காரு. அவருக்கெங்க, நம்ம கஷ்டம் தெரியப்போகுது. எல்லா மக்களுக்கும்...ஒரு தீர்வுதான் இருக்குனு நினைச்சிட்டு செய்யிறது,முட்டாள்தனம். இதுக்குப்பேரு சர்வாதிகாரம். இந்த திருவல்லிக்கேணியில் மட்டும் 210 லாட்ஜ் இருக்குது. ஒரு லாட்ஜ்க்கு 50 பேர் தோராயமா இருந்தாலும்...இந்த ஏரியாவில் மட்டும் 10,500 பேர் வெளியில் தான் சாப்பிடுறாங்க. அவங்கபாடெல்லாம்...இன்னிக்குத் திண்டாட்டம் தான்' என்றார் உண்மையாக.
ஆனந்த் தியேட்டர் நிறுத்தம், ஆயிரம் விளக்கு(மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை): சுற்றிலும் இருக்கிற பெரிய ஹோட்டல்கள் எல்லாம் மூடியிருந்தன. சிறிய கையேந்திபவன்கள், ஃபாஸ்ட்புட் கடைகள் மற்றும் கொஞ்சம் உள்பகுதியில் இருக்கும் டீக்கடைகள் வழக்கம்போல் செயல்பட்டுவந்தன.

அருகில் உணவு வாங்கிக்கொண்டு இருந்த இசக்கி(27) கூறுகையில்,' நான் வேளச்சேரியில் தங்கியிருக்கேன். ஆயிரம் விளக்குப்பகுதியில் தான் என் ஆபிஸ், அதுதான், இந்த ஏரியாவிலேயே நைட்டுக்கும் டிபன் வாங்கிட்டு ரூமுக்கு கிளம்பிட்டு இருக்கேன். மதியம் நார்மலா இருக்கிற தள்ளுவண்டி கடைகள் எல்லாம் மூடியிருந்துச்சு. இதுக்காக,நாங்க 'ஆந்திராமெஸ்'ல கொஞ்சம் அதிகமா பணம் செலவளிச்சு சாப்பிடுற நிலைமை ஏற்பட்டுருச்சு. இன்னிக்குன்னு பார்த்தா, ஆந்திராமெஸ்ல கூட கூட்டமா தான் இருந்துச்சு. தோராயமா சொன்னா, ஆயிரம் விளக்குப்பகுதியில் 10 கடைகளுக்கு, 3 கடைகள் தான் திறந்திருந்துச்சு. மத்திய அரசு, ஜிஎஸ்டி வரியை அதிகமாக விதிச்சால், பாதிக்கப்படப்போறது என்னவோ...எங்களை மாதிரியிருக்கிற மிடில் கிளாஸ் மற்றும் அடித்தட்டு மக்கள்தான். இந்த வரிவிதிப்பு, ஹைஜீனிக் ஃபுட் சாப்பிடுறவங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தாது'என வரிவிதிப்பு குறித்த, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அடுத்து புறநகர் ரயில்நிலையங்களில் உள்ள கேண்டீன்கள் திறந்திருக்குமா என, சென்னை கடற்கரை வரை பயணித்தோம். பெரும்பாலும், ரயில் பயணிகளுக்குப் பிரச்னையில்லாத வகையில், ரயில்வே கேண்டீன் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன. சென்னை கடற்கரை ஸ்டேஷனை ஒட்டிய தேநீர் கடைகள் கூட இயங்கிக்கொண்டுதான் இருந்தது.

இதே நிலைமை தான், சென்னை எழும்பூரை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நிலவியது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் வஸந்தபவன் போன்ற பெரிய உணவகங்கள் மட்டுமே மூடியிருந்தன. ஆனால், வழக்கம்போல் தள்ளுவண்டிக்கடைகள் ஓரளவுக்குச் சுடச்சுட, இரவு 7.30 மணிக்கே பிரியாணியை விற்றுக்கொண்டிருந்தன.
அடுத்து சென்னையின் மையப்பகுதியான தி-நகர் ரங்கநாதன் தெரு மற்றும் அதைச்சுற்றியுள்ள தெருக்களில் வலம் வந்தோம். பெரும்பாலான சிறுகடைகள் இயல்பாக திறந்து, உணவுகளை வழங்கிய வண்ணம் இருந்தன. குறிப்பாக ஃபாஸ்ட்புட் கடைகள், கோழிக்கறி எனும் கடை, டீக்கடைகள் திறந்துதான் இருந்தன.
தி-நகர் (இரவு 8 மணி),ரங்கநாதன் தெரு:

நேற்றும் தி-நகர் மார்க்கெட்டும், ரங்கநாதன் தெருவும் கூட்டத்தில் திணறியது. இங்கு இருக்கும் பெரும்பாலான சிறுவியாபாரிகள், வியாபாரம் கெட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக, தினமும் வெளியில் தான் சாப்பிட்டு வருகின்றனர். இந்த ஹோட்டல்கள் ஸ்டிரைக்கால் உண்மையில்,இவ்விடம் உண்மையில் பாதிக்கப்படுவதென்னவோ...இவர்கள் தான்.

அப்படியொரு பெல்ட் வியாபாரி சசிக்குமாரிடம் பேசினோம்,' நாங்கெல்லாம் தினக்கூலிகள். நாங்க, இந்த தெருவியாபாரத்தை நம்பிதான் இருக்கோம். இப்பிடி, வரி ஏத்துனா, நாங்க நிம்மதியா...வெளியில் சாப்பிடமுடியாது. பெரும்பாலும், இங்கயிருக்கிற வியாபாரிங்க 2 வேளை சாப்பிடுவாங்க. இப்பிடி வரிவிதிக்கிறதால், திடீர்னு உடம்பு முடியலைனாகூட லீவு போடாமாத்தான் வந்து, வேலைபார்த்தாகணும். சேமிப்பே சுத்தாமா இருக்காது. எல்லாத்துக்கும் அதிகவிலைன்னா...எங்கள மாதிரி அன்றாடக்காட்சிகளோட பிழைப்பு ரொம்ப கஷ்டமாப்போயிடும்' என்றார்.
கட்டுரை மற்றும் படங்கள்- ம.மாரிமுத்து

கருத்துகள் இல்லை: