திங்கள், 15 செப்டம்பர், 2014

ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு ! ஏழைகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிய அம்மா ! அசைக்க முடியாத ஆதார பட்டியல் !

பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சொத்துக்களின் பட்டியல் எப்படி மலைக்க வைத்ததோ அதே போல 1991 முதல் 1996 வரை ஐந்தாண்டுகளின் செலவு பட்டியலும் மலைக்க வைக்கக் கூடியதாகவே இருந்தது. மே 16 ஆம் தேதியன்று இந்த செலவு பட்டியலை வாசிக்கும் முன்பாக மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு நிலம் கொடுத்தவர்களான, திருநெல்வேலி கருங்குளம், வெள்ளக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாஸ்கரன், ஜெயராமன், வீராசாமி, ஸ்ரீதர், சமுத்திரபாண்டி, பிச்சைக்கனி நாடார், அருணாசலம் ஆகியோர் சாட்சியளித்தனர். அவர்களிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தினார்.
வீராசாமி, பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அனைத்து கேள்விக்கும் தெரியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் வீராசாமி.
இந்த கோர்ட்டில் என்ன கேஸ் நடந்துட்டு இருக்குன்னாவது தெரியுமா?'' என்று வக்கீல் கேட்டார். ‘'அம்மா கேஸ்'' என்று சொன்னார் வீராசாமி.இதேபோன்று மற்றவர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
ஒரு ஏக்கர் என்ன விலைக்குக் கொடுத்தீர்கள்?' என்ற கேள்விக்கு, ‘2,000 ரூபாய்க்கு' என்றும், ‘உங்க சொத்தை யார் வாங்கியது தெரியுமா?' என்றதற்கு ‘தெரியாது' என்றும், கூறினர்
எதற்காக நிலத்தைக் கொடுத்தீர்கள்?' என்றதற்கு சிலர் ‘கிராமத்தில் உள்ள எல்லோரும் கொடுத்தாங்க. நாங்களும் கொடுத்துட்டோம்' என்றும் சிலர் ‘கஷ்டத்துக்காக' என்றும், பதிலளித்தனர்
கடனுக்கு கட்டிய வட்டி இதனைத் தொடர்ந்து 1991 முதல் 1996 வரை செய்த 248 செலவுப் பட்டியல்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி வாசித்தார். சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியில் ஜெயா பப்ளிகேஷன் வாங்கிய 1.5 கோடிக்கு கடனுக்குச் செலுத்திய வட்டி ரூ.50,93,921. இதே வங்கியில் சசி என்டர்பிரைசஸ் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய தொகை ரூ.18,32,683. இதே கிளையில் லெக்ஸ் ப்ராபர்ட்டீஸ் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.17,52,069.
ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்தில் இளவரசி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.4,41,569. மயிலாப்பூர் கனரா வங்கியில் இருந்து சேலம் ஸ்டோர்ஸுக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.12,73,642.
கனரா வங்கியில் இருந்து பி.பி.எல். கேலரிக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.1,28,530. இதே வங்கியில் இருந்து கே.கே.வேணுகோபால் அவர்களுக்கு ஜெயலலிதா கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.5,95,000. இதே வங்கியில் இருந்து மதுரை காமராஜர் யுனிவர்சிட்டிக்கு ரூ.5,00,000. மௌலி அட்வர்டைஸுக்கு ரூ.11,00,000- ம் ஜெயலலிதா கணக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெ. வருமானவரி 1987 - 88 ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2,50,445; 1988 - 89 ஆம் ஆண்டுக்கு ரூ.5,63,482; 1989- 90 ஆம் ஆண்டுக்கு ரூ.8,18,161; 1990 - 91 ஆம் ஆண்டுக்கு ரூ.30,61,549... இப்படி ஜெயலலிதா 1997 வரை வருமான வரி கட்டியுள்ளார். 88- 89 ஆண்டுக்கு ரூ.89,619; 1989 - 90 ஆண்டுக்கு ரூ.2,68,475; 92- 93 ஆம் ஆண்டுக்கு ரூ.13,51,590 என சொத்து வரி கட்டியுள்ளார்.
இதேபோல் சசிகலா 91-ல் இருந்துதான் வருமான வரி கட்டுகிறார். 91- 92 ஆம் ஆண்டுக்கு ரூ.2,23,750; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.3,00,550; 93 - 94 ஆம் ஆண்டுக்கு ரூ.7,62,151 என வருமான வரி கட்டியுள்ளார். 91- 92 ஆம் ஆண்டுக்கு ரூ.14,240; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.1,17,955 என சொத்து வரி கட்டியுள்ளார்.
ஐந்தாண்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலைபார்த்த ஆட்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவு ரூ.16,15,500.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் - சத்தியலட்சுமி திருமணச் செலவு ரூ.6,45,04,222. கொடநாடு பங்களா கட்டிய செலவு ரூ.12,20,310. மன்னார்குடியில் செங்கமலம் தாயார் நினைவு மகளிர் கல்லூரிக்கு டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் வாங்க சசிகலா கொடுத்த தொகை ரூ.10,82,420.
ஜெயா பப்ளிகேஷன் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.2,69,102. 1993 முதல் 96 வரை ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.7,38,433. குமரன் சில்க்ஸுக்கு ரூ.4,84,712, ஜேம்ஸ் ஃபிரெட்ரிக் -ரூ.30,00,000. இப்படி 1991 முதல் 1996 வரை செலவுசெய்த மொத்த செலவு தொகை ரூ.12,00,59,338 என்று வாசித்து முடித்தார்.
மே 19ஆம் தேதி ஒருவழியாக தனது வாதத்தை நிறைவு செய்தார் பவானி சிங், முன்னதாக அன்றைய தினம் காலையில் மெடோ அக்ரோ ஃபார்ம் இயக்குநர் குமாரிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மற்றும் அவர்கள் நேர்முக, மறைமுக பங்குதாரர்களாக இருந்த கம்பெனிகளுக்குமான வருமான பட்டியலை வாசித்த முடித்து, இறுதியாக மராடி, ''இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், நலிந்த கம்பெனிகளை வாங்கி, முறைகேடாகப் பணம் செலுத்தி சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள்.
ஊழல் தடுப்பு பிரிவில் தண்டனை இந்த வழக்கில் எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வந்த 20 கோடியும், சூப்பர் டூப்பர் டிவி நிறுவனத்துக்கு வந்த ஆறு கோடியும் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது. இது இரண்டுமே மிக முக்கியமான ஆதாரங்கள். ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள். எனவே, இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை ஊழல் தடுப்புப் பிரிவு சட்டங்களில் தண்டிக்க வேண்டும்'' என்றதும் நீதிமன்றமே நிசப்தமானது.
இந்த வழக்கில் தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பு மூன்றாம் தரப்பு வாதி என்பதால், இறுதி வாதத்தை நேரடியாக வாதிட முடியாது. அதனால், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் குமரேசன், சரவணன், நடேசன் ஆகியோர் நீதிபதி முன்பு 428 பக்க எழுத்துபூர்வமான ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.
அதில், 1991 ல் ரூ.2,01,83,957- ஆக இருந்த ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 1996 ல் 66,44,73,573 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு எந்த வருமானமும் இல்லை. முதல்வராக இருந்ததற்குக்கூட சம்பளம் வாங்காமல் மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார்
கூட்டுச்சதி பொதுச் சேவையில் இருந்துகொண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கியுள்ளனர். இவை அரசுத் துறை சாட்சியங்கள், ஆவணங்கள், நேரடியாக கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து நிரூபிக்கப்பட்டதால் இவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டம் 2டி பிரிவில் இந்தியத் தண்டனை சட்டம் 109 (குற்றவாளிக்கு உடந்தையாக செயல்படுதல்) மற்றும் 120 பி ( கூட்டுச் சதி ) ஆகிய பிரிவுகளில் தண்டனை வழங்க வேண்டும்'' என்று திமுக தரப்பில் இறுதி வாதத்தை சமர்ப்பித்தனர்.
அரசுத் தரப்பு வாதத்திற்கு பதிலடி தரும் விதமாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு இறுதி வாதம் விறுவிறுப்பாக தொடங்கியது. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அரங்கேறிய சுவாரஸ்ய காட்சிகள் நாளை தொடரும்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: