வியாழன், 18 செப்டம்பர், 2014

கோவை பா.ஜ., வேட்பாளருக்கு அடி, உதை: அ.தி.மு.க.,வினர் ஆத்திரம்: வாகனங்கள் உடைப்பு:போலீஸ் பரபரப்பு


வெளியூரிலிருந்து தேர்தல் பிரசார பணியாற்ற கோவை வந்த அனைவரும், தேர்தல் விதிகளின்படி, கடந்த ௧6ம்தேதி, மாலை 5.00 மணியுடன் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால், ஆளும்கட்சியினர் பலர் வெளியேறவில்லை. நகருக்குள் தங்கி, ஓட்டு சேகரித்து வந்தனர். சவுரிபாளையம், மாரியம்மன் கோவில் வீதி அருகிலுள்ள சொசைட்டி கட்டடத்தில், தேனி மாவட்ட அ.தி.மு.க.,வினர் தங்கியிருப்பதாக, பா.ஜ., வேட்பாளர் நந்தகுமாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.அவர், கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்றார். அப்போது, மாரியம்மன் கோவில் அருகில், 'சேர்மன், முனிசிபாலிட்டி, போடி நாயக்கனுார்' என்று பெயர் பலகையுடன் கூடிய 'ஸ்கார்பியோ' கார், அ.தி.மு.க., கொடியுடன் நின்றிருந்தது; அ.தி.மு.க.,வினர் சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.அங்கு சென்ற நந்தகுமார், 'யாரு நீங்க; இங்க ஏன் நிக்கிறீங்க?' என்று கேட்க, இரு தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க.,வினர் தங்களது காரை கிளப்பிச் செல்ல முயன்றனர். 'போலீஸ் வரட்டும்' எனக்கூறிய பா.ஜ., வேட்பாளர் நந்தகுமார், அந்த காரின் முன் பகுதியில் ஏறி உட்கார்ந்தார்.
அ.தி.மு.க.,வினர், அவரை வண்டியிலிருந்து இழுத்து சரமாரியாகத் தாக்கினர். மக்களுக்கு சேவை செய்ய அ.தி.மு.க எவ்வளவு பாடுபடுகிறது ?.. நமக்காக உழைக்க எத்தனை தன்னார்வ வேட்பாளர்கள் இவ்வாறு சேவை செய்ய துடிப்பவர்களால் தான் மழை பெய்து கொண்டிருகிறது (?) சிந்தியுங்கள் மக்களே...
அருகிலிருந்த கட்சிக்காரர்கள் காப்பாற்றினர். இதையறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி ராஜசேகர் மற்றும் தொண்டர்கள் வந்தனர்.அ.தி.மு.க., வார்டு கவுன்சிலரின் கணவர் வெள்ளியங்கிரி, வார்டு செயலாளர் பொன்னுச்சாமி, அவைத்தலைவர் ஜெயகோபால் உட்பட பலரும் திரண்டனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் சூழ்நிலையில், பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார், விலக்கி விட்டனர். பீளமேடு ஸ்டேஷனுக்கு வந்து புகார் தருமாறு, இருதரப்பினரையும் கலைத்தனர். அடுத்த சில நிமிடங்களில், சிங்காநல்லூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,சின்னச்சாமி வந்தார். அப்போது, அவரது காருக்கு முன், ஆளும்கட்சி கொடியுடன் நின்றிருந்த காரின் கண்ணாடி, கல் வீசி உடைக்கப்பட்டது. உடைத்தவர்களை பிடிக்க அ.தி.மு.க.,வினர் ஓடினர். ஒருவரை போலீசார் பிடித்தனர். இதையடுத்து, பா.ஜ.,கொடியுடன் நின்ற காரும் சேதப்படுத்தப்பட்டது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய போலீசார், எம்.எல்.ஏ., சின்னச்சாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், துணைக்கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) பிரவேஷ் குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில், இரு கட்சியினரும் புகார் அளிக்க திரண்டதால், அங்கும் பதட்டம் நிலவியது.

அ.தி.மு.க., வார்டு அவைத்தலைவர் ஜெயகோபாலின் கார் கண்ணாடியை உடைத்ததாக பா.ஜ.,வைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை, போலீசார் விசாரித்தனர். ஆனால், பா.ஜ.,வேட்பாளரைத் தாக்கியவர்கள், உடனடியாக கைது செய்யப்படவில்லை.பா.ஜ., நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்ததையும் கண்டு கொள்ளவேயில்லை. எனினும், இரு கட்சியினரின் புகார்களையும், போலீசார் பதிவு செய்து கொண்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை நகரில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பா.ஜ., வேட்பாளர் நந்தகுமார் வழிமறித்த கார், போடிநாயக்கனுார் நகராட்சித் தலைவர் பழனிராஜ் என்பவருக்குச் சொந்தமானது. சம்பவம் நடந்தபோது, காரில் அவர் இல்லை. போடியைச் சேர்ந்த அ.தி.மு.க., மாவட்டப் பிரதிநிதி அப்துல் ஹேன்னா உள்ளிட்ட சிலர் இருந்ததாகவும், பா.ஜ., வேட்பாளர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதுபற்றி, மாவட்டப் பிரதிநிதி அப்துல் ஹேன்னா என்பவரிடம் கேட்டதற்கு, ''நாங்கள் லாண்ட்ரிக்குக் கொடுத்த ஆடைகளை நேற்று வாங்க முடியவில்லை; இன்று வாங்கிக் கொண்டு, ஊருக்குக் கிளம்புவதாக இருந்தோம். அதற்குள் எங்களை வழி மறித்து, மோசமான வார்த்தைகளால் பேசி, தகராறு செய்தனர்; நாங்கள் யாரையும் தாக்கவில்லை,'' என்றார். பா.ஜ., வேட்பாளர் தாக்கப்பட்டது பற்றி அறிந்ததும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அங்கு வந்தார். சம்பவம் பற்றி கேட்டபோது, '' இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர்; விசாரிக்கிறோம்' என்றார்.
>தன் மீது நடந்த தாக்குதல் பற்றி, பா.ஜ., வேட்பாளர் நந்தகுமார் கூறியதாவது: 'போடிநாயக்கனுார் சேர்மன்' என்ற பெயர்பலகையுடன் கூடிய காரில் வந்த, ஆளும்கட்சியினர், சவுரிபாளையத்தில் 'கேன்வாஸ்' செய்வதாக தகவல் கிடைத்தது. அங்கு நேரில் சென்று விசாரித்தபோது, 'நீ யாருடா, எங்களைக்கேக்குறது' என்றுகூறி, என்னை சுற்றி வளைத்துத் தாக்கினர்; கையில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த வீடியோ ஆதாரம் உள்ளது. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு, பீளமேடு போலீசில் புகார் செய்வோம்.தற்போதைய சூழலில், தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது; தேர்தலை நிறுத்த வேண்டுமென்று, மாநில தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளோம். மீறி, இந்த தேர்தல் நடத்தப்பட்டால், எங்கள் மீது விழுந்த அடிக்கு, கோவை மக்கள் தங்களது வாக்குகளின் மூலமாக நிச்சயமாக பதிலடி தருவார்கள்.இவ்வாறு, நந்தகுமார் தெரிவித்தார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: