செவ்வாய், 16 செப்டம்பர், 2014

பெயிலாக்கி விடுவதாக மிரட்டி 5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் ! நாங்குநேரியில் !

நாங்குநேரி: தேர்வில் பெயிலாக்கி விடுவதாக மிரட்டி 5ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் கொடுமை செய்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியராக குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் இரவிபுதூரை சேர்ந்த சுப்பிரமணியன்(53) என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 5ம்வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் கடந்த 2 மாதமாக பாலியல் கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. எதிர்ப்பு தெரிவித்த அந்த மாணவியிடம், இதுபற்றி வெளியில் சொன்னால் தேர்வில் பெயிலாக்கி விடுவதுடன் எந்த பள்ளியிலும் சேர்ந்து படிக்கமுடியாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் பயந்துபோன மாணவி, வீட்டில் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துள்ளார். மேலும் நாளுக்குநாள் சுப்பிரமணியனின் கொடுமை அதிகரிக்கவே, மாலையில் வீட்டுக்கு செல்லும் மாணவி தனிமையில் அழுதுள்ளார். கடந்த 12ம்தேதி பள்ளிக்கு சென்ற மாணவியிடம், வழக்கம்போல் தலைமை ஆசிரியர் பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனை மாணவர்கள் சிலர் பார்த்துவிட்டதால் அவர்களையும் தலைமை ஆசிரியர் எச்சரித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது தந்தை மற்றும் சித்தி ஆகியோர் அவரிடம் விசாரித்தபோது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி கண்ணீருடன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தினார். இதில் மாணவியிடம், தலைமை ஆசிரியர் கடந்த 2 மாதமாக மிரட்டி பாலியல் கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தனது லீலைகள் வெளியில் தெரிந்து விட்டதால் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் நேற்று பள்ளிக்கு வராமல் தலைமறைவாகி விட்டார். நேற்றிரவு ஏர்வாடியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மற்ற மாணவிகளிடம், தலைமை ஆசிரியர் பாலியல் கொடுமையில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினகரன்.com

கருத்துகள் இல்லை: