Hemavandhana - tamil.oneindia.com: சென்னை: இந்த முறை தீபாவளிக்கு திமுக முக்கிய புள்ளிகள் வாழ்த்து சொன்னது, பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.. அத்துடன் இந்த வாழ்த்தானது, இது திமுக தொண்டர்களுக்கு குஷியையும் ஏற்படுத்தி உள்ளது. திமுகவை பொறுத்தவரை 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முழக்கங்களை முன்வைத்துதான் அதன் ஆரம்ப அரசியல் நகர்ந்தது. ஆனால், கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற சிறுபான்மையின மக்களின் விழாக்களுக்கு மட்டும் திமுக வாழ்த்து சொல்லி வரும்.. அதே சமயம் இந்துக்கள் கொண்டாடும் எந்த ஒரு பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வதில்லை என்ற நிலைப்பாட்டையும் அது கடைப்பிடித்து வருகிறது
இந்நிலையில் கடந்த 2014ம் வருடம் ஆகஸ்ட் 29-ம் தேதி, திமுகவின் பொருளாளராக
இருந்த முக ஸ்டாலின், திடீரென விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து
தெரிவித்திருந்தார்..
ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலேயே இந்த
பதிவு போடப்பட்டிருந்தது.. "Greetings to all on the occasion of Vinayaka
Chaturthi!" என்று ஸ்டாலின் பதிவிடவும், அது மிகபெரிய அதிர்வலையை அப்போது
ஏற்படுத்தியது.. கோபாலபுரமே அதிர்ந்தது.. கலைஞர் கருணாநிதியும் இதனால்
அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது.
இதனால் அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டும் விட்டது. இந்த வாழ்த்து செய்தி
ஸ்டாலினின் விருப்பப்படியானது இல்லை என்றும் தெளிவுபடுத்தியது.. அதுபோலவே
இந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு, நடுராத்திரி உதயநிதி பிள்ளையார் படத்தை
பதிவிடவும், அந்த விவகாரம் பற்றிக் கொண்டு எரிந்தது.. பிறகு உதயநிதியே,
அந்த சிலை குறித்து உரிய விளக்கத்தை தெரிவித்து, சர்ச்சைக்கு
முற்றுப்புள்ளி வைத்தார்
மறுப்பு
இப்படி இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும், பிறகு அதை மறுப்பதும்,
பிறகு அதற்கு விளக்கம் அளிப்பதுமாக திமுகவின் அரசியல் நிகழ்வுகள் நகர்ந்து
வரும் நிலையில்தான், இந்த முறை தீபாவளிக்கு பளிச்சென வாழ்த்துக்களை திமுக
தலைவர்கள் சிலர் சொல்லி உள்ளனர்.. அதிலும் அவர்கள் திமுக தலைவருக்கு மிக
நெருக்கமானவர்கள் என்பதுதான் இதன் ஹைலைட்டே!
சேகர்பாபு
முதலாமாவர், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே. சேகர்பாபு,
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய
தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டார்.. அதுமட்டுமல்ல, தன்
தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளிக்கு புது டிரஸ் எடுத்து
தந்து, நிதியுதவியும் தந்துள்ளார்.
செந்தில்பாலாஜி
அதேபோல, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியும் தன் தீபாவளி
வாழத்தை தெரிவித்திருந்தார்.. "தீபங்களின் ஒளி தமிழகத்தை சூழ்ந்திருக்கும்
இருளை விலக்கட்டும். வெடிகளின் ஓசை நாம் இழந்த உரிமைகளை மீட்கட்டும். 2021
இல் சூரியன் உதிக்கட்டும், விடியல் பிறக்கட்டும். அனைவருக்கும் இனிய தீப
ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டார். இதுபோலவே மேலும் சிலர்
வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, கலைஞர் டிவியில் விடுமுறை தினம் சிறப்பு
நிகழ்ச்சிகள் என்றுதான் சொல்வார்கள்.. ஆனால், நேற்று தீப ஒளித் திருநாள்
சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அதிர ஒலித்தது குரல்.. இதற்கெல்லாம் என்ன
காரணம்? தன் கட்சிக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், மக்களின் உணர்வுகளுக்கு
மதிப்பு தந்து தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளும் முயற்சியா? அல்லது அரசியல்
நாகரீகத்தின் வெளிப்பாடான ஒரு வாழ்த்து அணுகுமுறையா அல்லது அடியோடு திமுக
கலர் மாறி கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால், இந்த திடீர்
வாழ்த்தால் உடன்பிறப்புகள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய்விட்டனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக