ஆனால், மக்களது கொண்டாட்டம் வேறு மாதிரியானது. தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புத்தாடை அணிவது என்பது அமங்கலச் சடங்கு. அதாவது நெருங்கிய உறவினரது இறப்பிற்குப் பின் செய்யும் சடங்கு.
இந்தச் சடங்கை, மகாவீரரைத் தமது உற்றவராகக் கருதிய மக்கள் ஒவ்வொருவரும் தீபாவளியன்று செய்கிறார்கள். அன்றைக்கு தீபாவளி நோன்பு என்ற பெயரில் உண்ணா நோன்பு இருந்து நடுவீட்டில் படையலிட்டு வணங்கும் வழக்கம் வடமாவட்டங்களில் உண்டு. இந்தப் படையலுக்காக அதிரசம் சுடுவது மிகுந்த பயபக்தியுடன் செய்யப்படும். இன்றைக்கும் திண்டிவனத்தை ஒட்டிய பகுதிகளில் தமிழ் ஜைன மதத்தவர் உண்டு.
மற்ற மாவட்டங்களில் தீபாவளி நோன்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில். விஜயமங்கலம், ஜினபுரம் எனப்பட்ட சீனாபுரம், திங்களூர் போன்ற ஒருகாலத்தில் சமணம் சிறந்திருந்த பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் தீபாவளியன்றைக்குக் காலையில் இட்டிலி சுட்டுக் கறியாக்கினால் தான் இவர்களுக்கு நிம்மதி.
ஜைனம் மிகத்தீவிரமாகச் சைவ உணவுப் பழக்கத்தை வலியுறுத்திய மதம். ஜைனர்களாக இருந்த போது சைவ உணவுப் பழக்கத்தினராக இருந்தவர்கள், ஜைன தீர்த்தங்கரர் இறந்தநாளை அசைவ உணவுடன் தான் ஆரம்பிப்பேன் என்று அடம்பிடிப்பது ஆராய்ச்சிக்குரியது.
மறுகருமாதியன்று இறந்தவருக்குக் கறீஞ்சோறு படைத்து விருந்து வைப்பது இன்றைக்கும் வழக்கம். சில காரணங்களால், ஒருவர் இறந்த அன்றைக்கே கூட மறுகருமாதி செய்யப்படுவது உண்டு. ஒருவேளை தீபாவளிக் கறீஞ்சோறும் இதைப் போன்றதோ என்னவோ.
இன்றைக்கும் ஜைனர்கள் இனிப்பு விரும்பிகள். அவர்களது திருமண விருந்தில் பரிமாறப்படும் இனிப்புகளின் எண்ணிக்கை கண்டிப்பாக இரண்டு இலக்கத்தில் இருக்கும். நீத்தாருக்குப் பிடித்த உணவுகளை அவர்களது நினைநாளில் படைப்பது வழக்கம். தீபாவளி நாளில் நாம் வகை தொகை இல்லாமல் இனிப்புகளை உண்பதையும் மகாவீர வர்த்தமானர் ஜைன மதத் தீர்த்தங்கரர் என்பதையும் எண்ணிப்பாருங்கள்.
எதற்காக இந்தப் பழம் புராணக் கதைகளையெல்லாம் கட்டுடைக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால், இப்படிக் கட்டுடைப்பதற்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அயராது கட்டுடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் கவனமாக இல்லாவிட்டால் பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற உன்னத அரக்கர்களையும் ஏதாவது தேவ அவதாரம் வதம் செய்தது என்று கதை கட்டிவிடுவார்கள் பார்ப்பனர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக