வெள்ளி, 20 நவம்பர், 2020

தினமலர் கடிதம் : நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி.. இது உங்கள் இடம்

தினமலர்  : தமிழகத்திற்கு, தி.மு.க., நல்லது எதையும் செய்யவில்லை என்றே,
latest tamil news

பலர், இப்பகுதியில் கடிதம் எழுதுகின்றனர். கருணாநிதி, ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும், முதல் வேலையாக, மனிதனை மனிதனே இழுக்கும், கைரிக் ஷாவை ஒழித்து, அதற்கு மாற்றாக, சைக்கிள் ரிக் ஷாவை அவர்களுக்கு வழங்கினார்.

காமராஜர் ஏற்படுத்திய சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். கண்ணொளி திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும், கண்ணாடியும் வழங்கினார். பிற்படுத்த மக்களுக்கான, இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, மத்திய அரசுடன் போராடினார்.திருக்குறளின் அருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக, வள்ளுவர் கோட்டம் மற்றும் கன்னியாகுமரியில், 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தார்; அரசு பேருந்துகளில், திருக்குறள் இடம் பெற செய்தார். தமிழுக்கு, செந்தமிழ் அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.  

'ஊனமுற்றோர்' என்ற சொல்லை நீக்கி, 'மாற்றுத்திறனாளி' என மாற்றி, அவர்களுக்கு பெருமை சேர்த்தார். விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய, உழவர் சந்தையை அமைத்துக் கொடுத்தார். கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்ய ஆணை பிறப்பித்தார். ஆண்டவன் முன், அனைவரும் சமம் என்பதை உணர்த்தி, 'தகுதியுள்ளவர் யார் வேண்டுமானாலும், அர்ச்சகராகலாம்' என, உத்தரவு பிறப்பித்தார்.



செம்மொழி மாநாடு, முதியோர் உதவித்தொகை, இலவச மருத்துவக் காப்பீடு, ரேஷனில் இலவச அரிசி என, ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை கருணாநிதி ஏற்படுத்தினார்.சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, ஆந்திர அரசுடன் பேசி, கிருஷ்ணா கால்வாய் திட்டத்தை ஏற்படுத்தினார். கிருஷ்ணா நீர் வரத்தால், சென்னை மக்கள் இன்றும் குடிநீர் பிரச்னையின்றி இருக்கின்றனர்.

கருணாநிதியின் ஆட்சியில் பத்திரிகை, சினிமா துறை சுதந்திரமாக செயல்பட்டது. பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம், குடிசை மாற்று வாரியம் என அனைத்தும், கருணாநிதி ஏற்படுத்தியவை தான்.சென்னையில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்கள், தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டவையே. இப்படி, தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் ஏராளமாக இருக்கையில், குறையை மட்டும் தேடிப்பிடித்து சொல்வது எதற்காக?

கருத்துகள் இல்லை: