திங்கள், 16 நவம்பர், 2020

கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளில் வாசன் ஐகேர் அருண் தற்கொலை??????/

 கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளில் வாசன் ஐகேர் அருண் தற்கொலை?


மின்னம்பலம்: தமிழகத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற தொழிலதிபராக பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற வாசன் ஐ கேர் நிறுவனத்தின் அதிபர் டாக்டர் அருண், இன்று (நவம்பர் 16) காலை திடீர் மரணமடைந்துவிட்டார்.    வாசன் ஐ கேர் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானதற்கு காரணமாகக் கூறப்படும் காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாளான இன்று, அருண் மரணம் அடைந்திருப்பது தொழில் வட்டாரங்களைத் தாண்டி அரசியல், பொது வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை பரப்பியிருக்கிறது.    இன்று காலை அருணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் உடனடியாக சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் ஆனால் மருத்துவர்கள் சோதித்துவிட்டு, வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று சொன்னதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் வருகின்றன. ஆனபோதும் அருணின் உடல், ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் போஸ்ட் மார்டத்துக்காக கொண்டு செல்லப்பட்டது. போஸ்டர் மார்ட்ட அறிக்கை வந்தபிறகே அருணின் மரணத்தின் காரணம் தெரியும் என்று சொல்கிறார்கள் மருத்துவ வட்டாரங்களில். 


பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரும் கரூர் முன்னாள் காங்கிரஸ் எம்பி முருகையாவின் மகனுமான அருண், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்துக்கு நெருக்கமானவர். இன்னும் சொல்லப் போனால் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு நண்பர் மட்டுமல்ல, தொழில் பார்ட்னராகவும் இருந்தவர். வாசன் ஐகேரின் 100 ஆவது கிளையை 2011 ஆம் ஆண்டு, ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான காரைக்குடியில் திறந்தபோது, அந்த விழாவில் கலந்துகொண்டு கிளையைத் திறந்து வைத்தவர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். இந்த விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக ஆளுநர் ரோசையா ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் மூலம் வாசன் ஐகேரின் அரசியல் செல்வாக்கை அப்போது சக தொழில் நிறுவனங்கள் கவனித்தனர்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது வாசன் ஐகேர் நிறுவனத்துக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், இதன் பலனாக அந்த நிறுவனத்தின் பங்குகளை கார்த்தி பெற்றுக் கொண்டதாகவும் பாஜக தரப்பில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே புகார்கள் கிளப்பப்பட்டன. குறிப்பாக ஆடிட்டர் குருமூர்த்த்தி இந்தப் புகார்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிங்கப்பூர், மொரிஷீயஸில் இருக்கும் வாசன் ஐகேரில் பலநூறு கோடிகளை கார்த்தி முதலீடு செய்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சர்ச்சை வெடித்ததும் ஒரு கட்டத்தில் கார்த்தி சிதம்பரம் வாசன் ஐகேரில் இருந்து தன் பங்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிடுகிறார். அதனால் ஏற்பட்ட தொழில் நெருக்கடியால், ஒரு சிங்கப்பூர் கம்பெனியோடு புதிய பார்ட்னர் ஷிப் ஒப்பந்தம் செய்துகொள்ள முயற்சித்தார் டாக்டர் அருண். அவர்களும் இந்திய நிதியமைச்சரே முதலீடு செய்த நிறுவனம் என்பதால் வாசன் நிறுவனத்தில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்தார்கள்.

இதற்கிடையில் மோடி ஆட்சிக்கு வர அந்நிய செலாவணி மோசடி புகார் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதேபோல் சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கும் ரூ.2,262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் தொடர் விசாரணை இலக்குகளுக்கு வாசன் ஹெல்த் கேர் ஆளானது. உலக அளவில் பெரும் நன்மதிப்போடு தொழில் நடத்தி வந்த வாசன் ஹெல்த் கேரின் பெயர், கொஞ்சம் கொஞ்சமாக இதனால் சரியத் தொடங்கியது. இந்தியாவில் அரசியல் தொடர்புகள் இருக்கும் நிறுவனம் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது என்ற தகவலால் சிங்கப்பூர் கம்பெனி உள்ளிட்ட புதிய முதலீடுகள் எதுவும் வாசன் ஹெல்த் கேருக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது,

கோடிக்கணக்கான ரூபாய் கடனில் நிறுவனத்தை சமீபகாலமாக நடத்தி வந்த வாசனுக்கு கொரோனா காலம் மேலும் நெருக்கடியைத் தந்தது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்கிட வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அவர் வைத்திருந்தாலும் அவற்றின் மதிப்பு குறைந்தது, வருமானவரித்துறையால் சொத்துகள் முடக்கப்பட்டது ஆகியவற்றால் நிலை குலைந்து போனார் அருண்.

இந்த நிலையில்தான் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான வாசன் ஐகேர் நிறுவனர் டாக்டர் அருண், இறந்திருக்கிறார். 51 வயதான அருண், தன் உடல் நலனில் தீவிர கவனம் செலுத்துபவர். உணவுப் பழக்க வழக்கங்களில் தெளிவானவர். அவரது கடன் உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களிலும் தொழில் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. எனினும் போஸ்ட் மார்ட்ட அறிக்கை வரும் வரை இதுபற்றி எதுவும் கூற முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள் தரப்பில்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: