சனி, 21 நவம்பர், 2020

20th நவம்பர் 1916.. திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி 103 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நாள்!

Image may contain: 3 people, text that says 'FOUNDERS OF DRAVIDIAN NON-BRAHMIN) MOVEMENT DR.C.NATESAN SIR.PITTYTHEYAGARAYAR DR.TARAVATH MADHAVAN'
நிலவு மாணிக்கம் : தமிழ் நாட்டில் திராவிட மக்களின் (பார்ப்பனரல்லாதோர்) முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்த திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி 103 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் சென்ற நூற்றாண்டின் (20-ஆம் நூற்றாண்டு) துவக்கத்தில், திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்லூரி படிப்பை சென்னையில் தங்கிப் படிக்கவும், உண்ணவும் விடுதிகள் இன்றி கஷ்டப்பட்டனர். பார்ப்பனர் விடுதிகளில் அவர்கள் தங்கிடவும், உண்ணவும் கூட அனுமதியில்லை.
“திராவிடர் சங்கம்”, “திராவிடர் இல்லம்” என இரண்டு அமைப்புகளை, பார்ப்பனர் அல்லாத மக்களின் நல்வாழ்விற்காகத் தனிமனிதனாக நின்று தொடங்கித் தொண்டாற்றிய டாக்டர் சி. நடேசனார், 1916 சூலைத் திங்கள் திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் திராவிடர் இல்லத்தினைத் தொடங்கி திராவிட மாணவர் தங்கி படிப்பதற்குத் துணை புரிந்தார்.
இங்கே தங்கிப் படித்த ஆர்.கே. சண்முகம், பிற்காலத்தில், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும், எஸ். சுப்பிரமணியம் உயர்நீதிபதியாகவும், தி.மூ. நாராயணசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உயர்வு பெற்றார்கள்.
காங்கிரஸ் இயக்கம் வடநாட்டார் ஆதிக்கமும், தென்னாட்டுப் பார்ப்பனர் ஆதிக்கமும் கொண்ட இயக்கம் என்பதை சர். பிட்டி. தியாகராயரும், (டி.எம். நாயர் என அழைக்கப்பட்ட) டாக்டர் தாராவத் மாதவனும் நன்கு உணர்ந்திருந்தனர். தென்னிந்திய திராவிட மக்களுக்கு காங்கிரசு அநீதி இழைத்து வருவதை அறிந்து அவ்வியக்கத்தினின்றும் விலகியிருந்தனர்.
இந்நிலையில் பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக ஹோம் ரூல் இயக்கம் தோன்றியதால், அவ்வியக்கத்தையும் திராவிடர் நலன் கருதி எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பார்ப்பனரல்லாத தலைவர்கள் இருந்தனர்.
ஆனால் இந்த இருபெரும் தலைவர்களும் சென்னை நகர சபை உறுப்பினராக இருந்த நேரத்தில் - 1913-களில் நடைபெற்ற சில நிகழ்வுகளால் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர்.
சில ஆண்டுகள் பேசிக்கொள்ளாமலிருந்த டாக்டர் தாராவத் மாதவன், சர். பிட்டி. தியாகராயர் ஆகிய இருவரையும் ஒன்றிணைய வைத்தவர் டாக்டர் சி. நடேசனார் ஆவார்.
பொது நலனின் பொருட்டு சொந்த ஆசைகளையும், கோபதாபங்களையும் அடக்கி ஆளக்கூடிய பெருமக்களாக டாக்டர் தாராவத் மாதவனும், சர். பிட்டி. தியாகராயரும் விளங்கினார்கள். தங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்வியல் உரிமைகளைக் காப்பாற்றும் கொள்கையின் பொருட்டு வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபட்டனர்.
இப்பெரும் தலைவர்கள் ஒன்றுபட்டதன் விளைவாக, 1916 நவம்பர் 20ஆம் நாளன்று சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் தாராவத் மாதவன், டாக்டர் சி. நடேசன், மேலும் ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் கூடி, “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” (South Indian Liberal Federation) என்ற அரசியல் அமைப்பினைத் தொடங்கினர். சென்னை விக்டோரியா பொது அரங்கில், (சென்னை சென்டிரல் நிலையத்திற்கும் – மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்திற்கும் இடையில் உள்ள அரங்கம்) இது நடைபெற்றது.
அமைப்பின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ (Justice) என்ற ஆங்கில ஏடு தொடங்கப்பட்டது. தமிழில் ‘திராவிடன்’ என்ற நாளிதழும், தெலுங்கில் ‘ஆந்திரப்பிரகாசிகா’ என்ற நாளிதழும் வெளியிடப்பட்டன.
திராவிட மக்கள் (பார்ப்பனரல்லாதார்) முன்னேற பாடுபட்ட தலைவர்கள் குறிப்பாக டாக்டர் நடேசனார், டாக்டர் தாராவத் மாதவன், சர்.பிட்டி.தியாகராயர் ஆகிய மூவரின் தொண்டையும் நாம் மறக்கலாகாது. இது நமக்கு மகிழ்வையும், பெருமையையும் தருகின்றது என்றாலும், மீண்டும் பார்ப்பன மேலாதிக்கம் தற்போது தலைவிரித்தாடும் நிலையிலும், அதற்கு துணைபோகும் ஆரிய அடிவருடிகள் மிகுந்துள்ள நிலையிலும், திராவிடர் இயக்க முன்னோடிகளின் செயல்பாட்டையும், தியாகத்தையும் நினைவுபடுத்திடவும், செயல்படுத்திடவும் நாம் முனைவோம்.
-கோ.கருணாநிதி
#Dravidan_Movement
#104_Years_Of_Justice_Party

கருத்துகள் இல்லை: