எஸ்.ரவீந்திரன்
அண்மையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தின் கதை தன்னுடையது என இரு எழுத்தாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் இதுபோன்ற விஷயங்கள் இன்று நேற்றல்ல. தொடர்ந்து நடைபெற்றுவருவதுதான். பொதுவாக திருட்டு அல்லது தழுவலில்தான் பல படங்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. கதைத் திருட்டு குறித்த நிறைய வழக்குகள் நடைபெற்றுள்ளன. ஆனாலும், இதில் முடிவு எதுவும் எட்டப்படாது என்பதே உண்மை.
இந்தத் தொல்லைக்குப் பயந்துதான் அந்தக் காலத்தில் புராணம் மற்றும் வங்கம், மராத்தி போன்ற பிற மொழிகளிலிருந்து கதைகளை வாங்கிப் படம் எடுத்தார்களோ என்னவோ? ஆனால் இன்று நிலைமை நேர்மாறாகிவிட்டது. காரணம், கற்பனை வறட்சி. அதுமட்டுமல்ல, ஒரே மாதிரியான கதைகளைத் தொடர்ந்து ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற தவறான கணிப்பு.
பத்திரிகைகளில் முதன்முதலில் விஷயதானத்தை மதித்து அவர்களுக்குச் சன்மானம் வழங்கியது மகாகவி பாரதியார் என்பார்கள். ஏனென்றால் ஒரு படைப்பாளன் மிகக் கஷ்டப்பட்டு தனது படைப்பை உருவாக்குகிறான். அவனது படைப்பை மதித்து இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று அதைப் பலர் மறந்தேவிட்டனர்.
சினிமாவில் கேட்கவே வேண்டாம். தானாகவே எடுத்துக் கொள்வார்கள். தப்பித் தவறி யாரும் வழக்குத் தொடர்ந்தால் போதும். அந்த நபரை அலையவைத்து, கடைசியில் ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுவார்கள். இதுவரை வழக்குத் தொடர்ந்தவர்கள் யாராவது நஷ்டஈடோ அல்லது உரிய தொகையோ வாங்கியிருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.
படைப்பைத் திருடுவது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் சிலர் காப்பி அடிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். அந்தக்கால படங்களில் பெரும்பாலும் கதை பிரச்னை வருவது இல்லை. காரணம் இதற்காகவே கதை இலாகா ஒன்றை உருவாக்கிவிடுவார்கள். இது பலர் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் கதையாகவே இருக்கும். எம்.ஜி.ஆர். படங்களில் இந்த பார்முலா பெரும் வெற்றியை ஏற்படுத்தியது. இன்று அப்படி யாரும் செய்வது இல்லை.
புதிய படங்களுக்குக் கதை எழுதுபவர்கள் உதவி இயக்குநர்களாகவே இருப்பார்கள். தயாரிப்பாளர் மனதுவைத்தால் அவரே இயக்குநராகிவிடுவதுமுண்டு. இன்னும் சில இயக்குநர்கள் எழுத்தாளர்களின் கதைகளை வாங்கி சில மாற்றங்களைச் செய்வர்.
வி.சி. குகநாதனின் "சட்டம் ஒரு இருட்டறை'யில் தொடங்கி, இதுபோல கதைத்திருட்டு சர்ச்சைகள் தமிழ்த் திரைப்படங்களில் ஏராளம் ஏராளம் பரபரப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது. சிவாஜி நடித்த "தீர்ப்பு' என்ற படம் பரபரப்பாக ஓடியபோது, ஒரு நாடக ஆசிரியர் அது "கடமையா? பாசமா?' என்ற தனது நாடகத்தின் கதை என்று கூறினார். கடைசியில் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. அண்மையில் கமல்ஹாசன் நடித்த "தசாவதாரம்' தனது கதை என உதவி இயக்குநர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அதுவும் புஸ்வாணம்தான். இப்படி நிறையச் சம்பவங்களைக் கூறலாம்.
வி.சி. குகநாதனின் "சட்டம் ஒரு இருட்டறை'யில் தொடங்கி, இதுபோல கதைத்திருட்டு சர்ச்சைகள் தமிழ்த் திரைப்படங்களில் ஏராளம் ஏராளம் பரபரப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது. சிவாஜி நடித்த "தீர்ப்பு' என்ற படம் பரபரப்பாக ஓடியபோது, ஒரு நாடக ஆசிரியர் அது "கடமையா? பாசமா?' என்ற தனது நாடகத்தின் கதை என்று கூறினார். கடைசியில் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. அண்மையில் கமல்ஹாசன் நடித்த "தசாவதாரம்' தனது கதை என உதவி இயக்குநர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அதுவும் புஸ்வாணம்தான். இப்படி நிறையச் சம்பவங்களைக் கூறலாம்.
இயக்குநர் அகத்தியனின் "காதல்கோட்டை' பெரும் வெற்றிபெற்றது. இதுகுறித்து அவர் கூறும்போது பிசிராந்தையாரை மனதில் வைத்து கதையை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.
திரையுலகைப் பொறுத்தவரை கதையை முழுவதும் காப்பி அடிப்பது ஒரு ரகம். ஒரு சில சம்பவங்களை மட்டுமே காப்பி அடிப்பது மற்றொரு ரகம். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. சிவாஜி நடித்த "பாவமன்னிப்பு' படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றை "முதல் மரியாதை' படத்தில் அப்படியே அமைத்திருந்தார்கள். இதேபோல "அண்ணாமலை'யில் வரும் நேசமணி பொன்னையா நகைச்சுவைக் காட்சி பழைய படத்தின் அப்பட்டமான காப்பி. மேலும் கதையில் மட்டும்தான் காப்பி என்றில்லை. பாடல்களிலும் நிறைய காப்பி சமாசாரங்கள் உள்ளன.
எந்திரனைப் பொறுத்தவரை இயக்குநர் ஷங்கர் அது தன் கதை என்று கூறியுள்ளார். உண்மையில் கமல் நடிப்பதற்காக பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதைதான் அது என்கிறார்கள். இப்போது புகார் அளித்தவர்கள் கூறுவதைப் பார்த்தால் இவர்களது கதைகள் அந்தக் காலத்திலேயே எழுதப்பட்டது என்கிறார்கள். எது உண்மையோ?
தமிழ் சினிமாவில் ஒரு எழுதப்படாத விதி உள்ளது. அது படமாக்கும்போதெல்லாம் சும்மாயிருப்பார்கள். படம் ரிலீஸப்கி ஒரு மாதம் வரை யாரும் வாய் திறப்பதில்லை. வெற்றிகரமாக ஓடுகிறது என்று செய்தி வந்துவிட்டால்தான் எழுத்தாளர்களே வாயைத் திறக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே செய்தால் படம் எடுக்கும்போதே தடுக்கலாம் அல்லவா?
என்னவோ பத்திரிகைகளில் கதைகளைக் காப்பி அடிப்பவர்கள் இருப்பது போய் சினிமாக்காரர்கள் காப்பி அடிக்கும் காலம் வந்துவிட்டது. வழக்கமாக ஆங்கில, இந்திப்படங்களைத் தழுவியவர்களுக்குப் போரடித்து விட்டது என்பதால் இப்போது துணிச்சலாக நாவல், சிறுகதை என தழுவிப் படம் எடுக்கிறார்கள். மொத்தத்தில் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளுக்குக் காப்புரிமை வைத்துக்கொள்வது நல்லது. தக்க ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற வழக்குகளில் வெற்றிபெற முடியும். யாரோ கஷ்டப்பட்டு எழுதியதை காப்பி அடித்து விலா நோகாமல் சிரித்து, பணம் சம்பாதிப்பவர்களை ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
- தினமணி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக