இந்தியில் அமீர்கான் நடிக்க, கஜினியை ரீமேக் செய்த முருகதாஸ் தமிழில் செய்த இந்தத் தப்பைத் திருத்திக் கொண்டார் என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.
இந்தக் கட்டுரைகளில் நான் ஒரு விஷயத்தை வலியுறுத்த பல சம்பவங்களைச் சொல்லி வருகிறேன். அதற்குக் காரணம், ஒவ்வொரு இயக்குனர்களும் எப்படியிருந்தாலும் உதவி இயக்குனர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை உதாரணம் மூலம் விளக்கத்தான்.
பாரதிராஜாவிடம் பணியாற்றிய அன்பு பற்றி இதற்கு முந்தைய அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறேன். உதவி இயக்குனர்களின் உரிமையை பற்றிப் பேசுகிறபோது தாஜ்மஹால் படத்திலிருந்து இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்லத் தோன்றுகிறது.
இப்படத்தில் பக்கத்து ஊரிலிருக்கும் காதலி ரியாசென்னைப் பார்க்க நள்ளிரவில் ஆற்றுக்குள் மூழ்கி மூழ்கிச் செல்வார்கள் ஹீரோவான மனோஜும் அவரது கூட்டாளிகள் சிலரும். அப்படிச் சென்று அவரைச் சந்திக்கும்போது ஊர்க்காரர்கள் பார்த்துவிடுவார்கள். ஊர் விட்டு ஊர் வந்து காதலிப்பதா என்று கோபமுறும் அவர்கள், கூட்டமாக விரட்ட, மனோஜும் அவருடன் சென்ற அவரது தோழர்களும் தண்ணீருக்குள் சட்டென்று குதித்து உள்ளேயே மூழ்கி மூழ்கித் தங்கள் ஊருக்கு வந்து சேர்வார்கள். இது சீன். இவர்களை துரத்தி வரும் அசலூர்க்காரர்கள் தங்கள் வாயில் கத்தியை வைத்துக்கொண்டு அப்படியே தண்ணீரில் நீந்தியபடி வருவார்கள். துரத்தி வரும் இவர்களைத்தான் படம் பிடித்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. எல்லாரையும் கழுத்தளவு தண்ணீரில் நிற்க வைத்துவிட்டு காட்சியை எடுக்கத் தயாராகிவிட்டார். ஸ்டார்ட், கேமிரா என்று உத்தரவும் கொடுத்துவிட்டார். அந்த நேரத்தில்தான் சார் ஒரு நிமிஷம் என்று பாரதிராஜாவின் உத்தரவுக்கு குறுக்கே புகுந்து ஆற்றுக்குள் இறங்கி ஓடினார் அன்பு. கையோடு எடுத்து சென்ற கத்தியை தண்ணீரில் நிற்கும் அந்த வாலிபரின் வாயில் கவ்விக் கொள்ள செய்துவிட்டு மேலேறி வர, செம பிடி பிடித்துக் கொண்டார் பாரதிராஜா. ”யோவ்… அறிவிருக்கா உனக்கு? அவன் வாயில நான் கத்திய வைக்கச் சொன்னேனா” என்று கோபத்தில் தாண்டவம் ஆட, ஆடிப்போனார் அன்பு.
”இல்ல சார். போன ஷாட்ல அவரு வாயில கத்தி இருந்திச்சு. கன்ட்டினியுட்டி மிஸ்ஸாவுதேன்னு…” என்று அவர் இழுக்க, மற்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். வேறொன்றுமில்லை. அப்போது பாரதிராஜா எடுத்துக் கொண்டிருந்தது அவர்களை அல்ல. அந்த வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கிச் செல்லும்போது மேலே தோன்றுமே நீர்க்குமிழிகள்…. இதைதான் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை அன்பு. கண் எதிரே ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சா அதைச் சொல்லிடணும். அவங்க தப்பா நினைச்சாலும் சரி. அந்தப் படம் முழுக்க நான் டைரக்டர்கிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன். சில நேரம் ஓங்கி அடித்தாலும் அடிப்பார். ஆனால் அவ்வளவும் நான் செய்து கொண்டிருக்கிற வேலைக்காக என்றால் அதுதான் சந்தோஷம் என்கிறார் அன்பு. தற்போது மிட்டாய் என்ற படத்தை இயக்கி வருகிறார் இவர்.
இது எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் இன்னொன்று. சம்பளம். படப்பிடிப்பில் தினசரி பேட்டாவை வாங்கிவிடுகிற உதவி இயக்குனர்களுக்குத் தனியாகப் பேசப்பட்ட சம்பளம் மட்டும் முழுமையாக வந்து சேராது. எல்லாத் தயாரிப்பு நிறுவனங்களும் அப்படியல்ல என்றாலும், சில நிறுவனங்களில் கடைசி நேரத்தில் கை விரித்துவிடுவார்கள். இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இயக்குனர் ஒரு யுக்தி செய்வார். தன்னுடைய சம்பளத்தைப் பேசும்போதே உதவி இயக்குனர்களுக்குமான சம்பளத்தையும் பேசுவார். அதை என் சம்பளத்திலிருந்தே கொடுத்துவிடுகிறேன். நீங்கள் எனக்குக் கொடுக்கும்போது அதையும் சேர்த்துக் கொடுத்துவிடுங்களேன் என்பார். அப்படிப் பேசி வாங்கப்படுகிற சம்பளம் உதவி இயக்குனர்களின் கைக்குப் போகிறதா என்றால், பெரும்பாலான இயக்குனர்கள் அதையும் ஸ்வாகா செய்துவிடுகிறார்கள் என்பதுதான் வேதனை தரும் உண்மை.
மேய்ப்பனே புல் தின்கிற இந்தக் கொடுமைக்கு ஆளாகிற உதவி இயக்குனர்கள், வாய் பேச முடியாமல் ஒதுங்கி நின்று அழுவது இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதையெல்லாம் களைய வேண்டும் என்பதற்காகவே இயக்குனர்கள் சங்கம் அதிரடியாக ஒரு முடிவெடுத்து இருக்கிறது. உதவி இயக்குனர்களின் சம்பளத்தை சங்கமே வாங்கி அவர்களுக்குப் பிரித்துத் தரும். இப்படித் தீர்மானம் போட்ட சில தினங்களிலேயே, ‘பெண் சிங்கம்’ படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட சம்பளத்தை, முதல்வர் கருணாநிதி கையால் அப்படத்தில் வேலை செய்த உதவி இயக்குனர்களுக்கு வழங்கி தனது அதிரடியை ஆரம்பித்து வைத்தது இயக்குனர்கள் சங்கம்.
ஆனால் இந்த முறையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த இயலாதபடி தொடர்ந்து முட்டுக்கட்டைகள். சில பட நிறுவனங்களும் இயக்குனர்களும்கூட இந்த முறைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. ஆனால் தனது திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறது இயக்குனர்கள் சங்கம்.
படப்பிடிப்புக்கு முன்….
ஒரு படம் கதை விவாதத்தில் துவங்கும் என்பதை நாம் முன்பே சொல்லியிருக்கிறோம். அந்த விவாதத்தில் உதவி இயக்குனர்களின் பணி என்ன என்பதையும் அலசிவிட்டோம். படப்பிடிப்புக்கு முன்பு இன்னும் பல முக்கியமான வேலைகள் இருக்கிறது. ‘இன்று பாடல் பதிவுடன் இனிதே துவங்குகிறோம்…’ என்ற வாசகத்தை அடிக்கடி தினத்தந்தியில் பார்த்திருப்பீர்கள்.
டைரக்டர் தனது கோ டைரக்டர் மற்றும் இரண்டு உதவி டைரக்டர்களுடன் இங்கு வந்து அமர்ந்து விடுவார். ஏற்கனவே இசையமைப்பாளரிடம் கதை சொல்லப்பட்டிருக்கும். பாடல்கள் படத்தில் எந்தெந்த இடங்களில் வரவேண்டும் என்பதை இயக்குனரும் இசையமைப்பாளரும் தீர்மானிப்பார்கள். இசைஞானி இளையராஜா போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் அந்த இடத்தையும் அவர்களே தீர்மானித்துவிடுவார்கள். நாம் சொல்வது அடுத்தகட்ட இசையமைப்பாளர்களை பற்றியும் அல்லது அறிமுகமாகிற இசையமைப்பாளர்களின் கம்போசிங் பற்றியும்.
சுச்சுவேஷனுக்கு ஏற்றார் போல இசையமைப்பாளர் ட்யூன் போட்டுக் கொண்டிருப்பார். அந்த ட்யூனை கேட்டுவிட்டு டைரக்டரின் காதில் ரகசியமாக தனது அபிப்ராயத்தை சொல்வார்கள் இந்த உதவி இயக்குனர்கள். சார், இந்த ட்யூனை விட இன்னும் பெட்டரா இருக்கலாம் என்று சொல்வதுண்டு. பல ட்யூன்கள் இந்த உதவி இயக்குனர்களால் பாழாய்ப் போகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை அந்த இசையமைப்பாளர் இயக்குனரை விட்டுவிட்டு காதில் கிசுகிசுக்கும் இந்த உதவி இயக்குனர்களைப் பிடித்துக் கொள்வார். தம்பி, எப்பிடியிருக்கு என்று அவர் நேரடியாகக் கேட்டுவிடுவதால் பலர் சூப்பர் என்று கூறி, பின்பு டைரக்டரிடம் வாங்கியும் கட்டிக் கொள்வார்கள். இந்த நேரத்தில், ’கதைக்கு இந்த ட்யூன் பொருந்துகிறதா’ என்பது மட்டுமே உதவி இயக்குனர்களின் பார்வையாக இருக்க வேண்டும். சில நேரங்களில் ட்யூனுக்கு டம்மி வரிகள் போடக்கூடிய வாய்ப்பும் இந்த உதவி இயக்குனர்களுக்குக் கிடைக்கும். ‘ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும். கேட்கும்போதெல்லாம் அந்த ஞாபகம் தாலாட்டும்…’ என்றொரு பாடல் சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே தாலாட்டியது நினைவிருக்கலாம். அதை எழுதிய கலைக்குமார் என்பவர் டைரக்டர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தார். கம்போசிங்கின்போது அவர் போட்ட டம்மி வரிகள்தான் பின்பு பாடலாக வந்து அவரைப் பாடலாசிரியராகவும் மாற்றியது. அதன்பின் சுமார் ஐம்பது பாடல்களாவது வெவ்வேறு படங்களில் எழுதிவிட்டார் அவர்.
பாடல் பதிவு முடிந்ததும் உதவி இயக்குனர்களின் அடுத்த வேலை போட்டோ ஷுட்டிங்குக்காக உதவுவது. முன்பு இந்த கலாசாரம் இல்லை. ஆனால் இப்போது 90 சதவீத படங்களுக்கு தனியாக போட்டோ செஷன் எடுக்கப்படுகிறது. இதற்காகவே ஸ்பெஷல் போட்டோகிராபர்கள் இருக்கிறார்கள். கைமல், மணிகண்டன், போன்ற இந்த ஸ்பெஷலிஸ்டுகள் மும்பையிலிருந்து விமானத்தில் பறந்துவந்து வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். பில்…? லட்சங்களில்! இதில் இன்னொரு எக்ஸ்பர்ட்டும் இருக்கிறார். தேனி ஈஸ்வர். இவர் விகடனின் வளர்ப்பு. இவரைப்போலவே சங்கர் சத்யமூர்த்தி, ஆன்ட்டனி ஸ்ரீதர் போன்ற ஜாம்பவான்களும் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். இப்படி எடுக்கப்படுகிற புகைப்படங்கள் பத்திரிகை விளம்பரங்களுக்கும், போஸ்டர் அடிக்கவும் பயன்படுகின்றன. பெரும்பாலும் இவை கதையை ஒட்டியே இருக்கும். இப்போது சில இயக்குனர்கள் அதையும் செய்வதில்லை. எங்காவது நல்ல புகைப்படத்தை பார்த்தால் அதே மாதிரி நம்ம ஆர்ட்டிஸ்ட்டை வச்சு எடுத்துக் கொடுத்திடுங்க என்று கூறிவிடுகிறார்கள்.
இந்த மாதிரி அசத்தல் புகைப்படங்களைத் தேடிப்பிடிக்கிற வேலையும் உதவி இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்படும். லேண்ட் மார்க், ஹிக்கிம் பாதம்ஸ் என்று புத்தகக்கடைகளில் அலைந்து திரிந்து நல்ல புகைப்படங்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கி வருவதும் இவர்களின் வேலைகளில் ஒன்று. இன்டர்நெட்டில் தேடுவதும் இவர்களின் பணி.
(தொடரும்…)
முதல் ஐந்து பகுதிகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
1 கருத்து:
கருத்துரையிடுக