வெள்ளி, 19 நவம்பர், 2010

இந்திய இயக்குனர்களை இணைக்கும் சசிக்குமார்



          யக்குனர் சசிக்குமாருக்கு அறிமுகம் எதுவும் தேவை இருக்காது. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள், மூன்று படங்களில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று துறையிலும் வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர். சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றுவிட்டார். இவரின் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'ஈசன்'. வைபவ், அபிநயா, சமுத்திரக்கனி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருகிறார்கள்.

 

படத்தின் டப்பிங் வேலைகளில் பிசியாக இருந்து வரும் சசிக்குமார், நவம்பர் 19 ஆம் தேதி இதன் இசை வெளியீட்டு விழாவை மிகவும் வித்யாசமான முறையில் நடத்த இருக்கிறார். இயக்குனர் இராமநாராயணன் தலைமையேற்கும் இந்த விழாவில் தமிழ் இயக்குனர்கள் சார்பில் பாலா, அமீர் பங்கேற்கிறார்கள். தெலுங்கு சினிமாவின் சார்பில் பிரபல இயக்குனர் திருவிக்ரம் கலந்து கொள்கிறார். இவர் மகேஷ் பாபு நடித்த கலேஜா, அத்தடு, பவன் கல்யான் நடித்த ஜல்சா ஆகிய மெகா படங்களை இயக்கியவர். 

மலையாள திரைப்பட இயக்குனர்கள் சார்பில் கேரளா கப்பே , திரைக்கதா,  பலேரிமாணிக்கம் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ரஞ்சீத், கன்னட திரைப்பட இயக்குனர்கள் சார்பில் காளிபட்ட, மனசரே, மூங்கறு மலே படங்களை கொடுத்த யோகராஜ் பாட், இந்தி திரைப்பட இயக்குனர்கள் சார்பில் அனுராக் கஷ்யப் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள். அனுராக் கஷ்யப் ப்ளாக் ஃப்ரைடே, தேவ் டி ஆகிய படங்களை இயக்கியவர். 

'ஈசன்' படத்தின் பாடல்களுக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார். இப்படி இந்திய மொழி இயக்குனர்களை ஒரே நிகழ்வில் இணைக்க நினைத்திருக்கிறார் சசிக்குமார். சினிமாவின் திசையை தன்பக்கம் திருப்பிய இளைய இயக்குனர்களில் சசிக்குமாரும் ஒருவர். சுப்பிரமணியபுரம் படத்தை அடுத்து ஈசனும் ரசிகர்களுக்கு வித்யாசமான விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்துகள் இல்லை: