வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் சம்பந்தமாக, ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்வதற்காக சென்றிருந்த ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியும், வேறு இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ள சம்பவம் பலத்த கண்டனத்துக்குரியது. ஒரு ஜனநாயக நாட்டில் தமது எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிப்பதற்கு பிரஜைகளுக்கு உள்ள சட்டபூர்வமான உரிமையை இது மீறுவதாகவுள்ளது. ஜே.வி.பி கடந்த காலங்களில் வன்முறைப் பாதையில் பயணித்ததையும், பல்லாயிரக் கணக்கானோரைப் படுகொலை செய்ததையும், ஏனையோரின் மனித உரிமைகளை காலில் போட்டுத் துவம்சம் செய்ததையும் காரணம் காட்டி, அவர்களுக்கு எதிராக தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட வன்முறையை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது.
எனவே, தற்பொழுது ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையை அனைவரும் கண்டிப்பது அவசியமானது. அதேவேளையில், அண்மைக்காலமாக ஜே.வி.பி மேற்கொண்டுவரும் அரசியல் செயல்பாடுகளை உற்று நோக்குகையில் அவர்கள் தமது வன்முறை வழியிலானதும், சந்தர்ப்பவாத ரீதியானதுமான அரசியல் நிலைப்பாட்டை இன்னமும் கைவிட்டு விடவில்லை என்ற உண்மையையும் அவதானிக்க முடிகிறது. (தெற்கில் அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டிவிட்டு குழப்பம் விளைவிப்பதும், போர்க் குற்றவாளியான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்காக வீதியில் இறங்கி ரகளை செயவதும் இதன் ஒரு பகுதி)
அதேவேளை யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பியினர் தாக்கப்பட்ட பொழுது, அவர்கள் எங்கிருந்தனர் என்ற விடயம் மிக முக்கியமானது. ஏனெனில் அவர்கள் அங்கு தாக்கப்பட்ட பொழுது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திருமதி பத்மினி சிதம்பரநாதனின் கந்தர்மடம் பழம் ரோட் வீட்டில் இருந்துள்ளனர்! பத்மினி சிதம்பரநாதன் விடுதலைப் புலிகளால் நேரடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்பட்டே, முன்பு பாராளுமன்ற உறுப்பினரானவர். அவரும் வேறு சிலரும் புலிகளின் நேரடியான கையாட்கள் என்பதற்காகவே, கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளர்களாக நியமிக்கப்படாமல், அதன் தலைமையால் நிராகரிக்கப்பட்டவர்கள். தொடர்ந்தும் புலிகளுக்கு விசுவாசமாக இருக்கும் அவர்கள,; தனி அணியாகப் போட்டியிட்ட போது, மக்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்டவர்கள்.
அப்படியான ஒருவரின் வீட்டில், ஜே.வி.பியினருக்கு என்ன வேலை இருந்திருக்க முடியும்? ‘எதிரிக்கு எதிரி எனது நண்பன்’ என்ற அடிப்படையில் இவர்கள் சந்தர்ப்பவாதக் கூட்டுச் சேர்ந்துள்ளனரா? இந்த சந்தர்ப்பத்தில், சில மாதங்களுக்கு முன்னர், பொதுக் கூட்டமொன்றில் பேசிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச செயலாளரும், அமைச்சருமான டியூ குணசேகர சொன்ன ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. ‘புலிகள் இடதுசாரிகளை, சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரை, ஐக்கிய தேசியக் கட்சியினரை என பல்வேறு கட்சியினரை படுகொலை செய்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை காலமும் ஒரு ஜே.வி.பி உறுப்பினரைக் கூட கொலை செய்யவில்லை’ என்பதை டியூ சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால், கடந்த காலங்களில், தெற்கில் சிங்கள இனவாதத்தையும், வடக்கில் தமிழ் இனவாதத்தையும் அதிகம் தூக்கிப் பிடித்தவர்கள் ஜே.விபியினரும், புலிகளும் தான் என்பது, சிறு பிள்ளைக்குக் கூடத் தெரிந்த ஒரு உண்மையாகும். உண்மையில் இரண்டு இனவாதிகளும் ஒருவரில் ஒருவர் தங்கித்தான், தமது நாசகார அரசியலை கொண்டு நடாத்தி வந்துள்ளார்கள் என்பதே உண்மையாகும். பார்ப்பதற்கு இருவரும் எதிரும் புதிருமான அரசியல் செய்பவர்கள் போலவும், பரம வைரிகள் போலவும் தோற்றமளிப்பர். ஆனால் செயற்பாட்டில் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. உதாரணத்துக்கு ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம்.
ஜே.விபியினர் தம்மை இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சோசலிசவாதிகள் என்று கூறிக் கொள்வர். அதேபோல புலிகளும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே தாம் போரிடுவதாகக் கூறிக் கொள்வர். ஐ.தே.கவும் தான் சிறுபான்மை இனங்களின் ஆபத்பாந்தவன் என்று கூறிக் கொள்வதுண்டு. ஆனால் 2000ம் ஆண்டில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஓரளவு நல்லதொரு தீர்வுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது, இந்த மூன்று தரப்பினரும் ஒன்றிணைந்து (இதில் கூத்தில் கோமாளி வருவது போல விக்கிரமபாகுவும் இணைந்து கொண்டமை வேறொரு விடயம்) நின்று, அதை நிறைவேற்றாமல் செய்தனர்.
அந்த அரசியலின் தொடர்ச்சி இன்னும் நீடிப்பதையே, ஜே.வி.பியினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் தங்கி இருந்த சம்பவம் நிரூபித்து நிற்கிறது. தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை ஒருபோதும் அங்கீகரிக்காத, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஏதாவது சிறு நடவடிக்கை எடுத்த போதெல்லாம் எதிர்த்து அவற்றை வந்த ஜே.வி.பியினர், யாழ்ப்பாணம் சென்று, காணாமல் போன தமிழ் இளைஞர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்வது என்பது, ‘ஆடு நனைகிறது என்று, ஓநாய் அழுத கதையாக’த்தான் இருக்கின்றது. உண்மையென்னவெனில், இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான தமிழ் - சிங்கள இளைஞர்கள் காணாமல் போனதற்கான சூத்திரதாரிகளில் ஜே.வி.பியினரும் உள்ளடங்குவர்.
இந்தவிதமான அரசியல் சக்திகளை அடித்து விரட்டுவதை விட, அரசியல் ரீதியாக ஒழித்துக் கட்டுவதே அவசியமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக