தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் உள்ள குடியமர்வு தடுப்பு மையத்தில் (Immigration Detention Camp - IDC) கடந்த ஒரு மாத காலமாக அடைப்பட்டுள்ள 155 ஈழ அகதிகளில், 40 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களில் 6 பெண்கள் கர்ப்பம்தரித்து, அடுத்த ஓரிரு மாதங்களில் குழந்தை பெற்றெடுக்கும் நிலையில் இருக்கின்றனர்.இவர்களுக்கான மருத்துவ உதவியைக் கூட தாய்லாந்து அரசு மறுத்து வரும் நிலையில், நேரத்திற்கு சரியான உணவு கொடுக்கப்படாமல், பாதுகாப்பற்ற நிலையிலும் போதிய இட வசதியின்மையால் நாள்தோறும் உடல் நலம் குன்றி வருகின்றனர்.
இலங்கை அரசு பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என உலகுக்கு பறைசாற்றி விட்டு, கடந்த மே 2009ம் ஆண்டு கொடுமையான முறையில், கொத்து குண்டுகள், விமான எறிவீச்சுக்கள் என பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தில் பல்லாயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போர் உக்கிரமாய் போர் நடந்த வன்னி, வவுனியா போன்ற நகரங்களிலிருந்து அப்பாவி பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள பல்வேறு நாடுகளுக்கு கடல் வழியே படகு மூலம் இலங்கையை விட்டு அகதிகளாய் ஓடினர். அப்படி ஓடிய சிலர், தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் தேடினர்.
அகதிகளுக்கான அய்க்கிய நாடுகள் சபையின் சரத்தில் தாய்லாந்து நாடு கையொப்பம் இடவில்லை. இருப்பினும் அந்நாட்டின் அருகில் அமைந்திருக்கூடிய வியட்நாம் அகதிகளுக்கு புகழிடம் அளித்து வருகிறது. அங்குள்ள அகதிகளுக்கான ஐ.நா. அதிகாரிகள் முறையாக இவ்வகை அகதிகளை பதிவு செய்து வருகின்றனர். இதனை கேள்வியுற்று மே 2009ல் இலங்கையை விட்டு தப்பிய ஈழத்தமிழர்கள் தாய்லாந்தை அடைந்து ஐ.நா. அதிகாரிகளிடம் முறையாக அகதிகளாய் பதிவு பெற்றனர். ஆனால், கடந்த மாதம் 11ம் தேதி (11.10.2010) திடீரென, தாய்லாந்து காவல்துறையினர் அகதிகளை குடியமர்வு தடுப்பு நடுவத்தில் 60X26 அடியுள்ள அறை ஒன்றில் 115 ஆண்களையும், மீதமுள்ள பெண்களையும்- 15 (3 முதல் 10 வயது) குழந்தைகளையும் வேறு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல், மனித உரிமைகளை தாய்லாந்து அரசு மீறி வருகிறது. அகதிகளுக்கான ஐ.நா. அதிகாரிகளோ, தாய்லாந்து அரசின் இந்த விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறிகிறது. வெளியார் ஒருவரும் இவர்களை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உணவாக மூன்று நேரமும், சிறிதளவு சோறு மட்டுமே வழங்கி வருகிறது, தாய்லாந்து அரசு. இதனால், கடுமையான மன ரீதியான பாதிப்புக்கு அங்கு தடுப்பு மையத்தில் உள்ள ஈழ அகதிகள் கடுமையாக பாதிப்புகுள்ளாகி வருகின்றனர்.
மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கர்பணி தாய்மார்களை உடனடியாக மனித நேய அடிப்படையில் தடுப்பு நடுவங்களிலிருந்து விடுதலை செய்வதோடு, அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு அடிப்படை வசதிகளையும் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற அவசர கோரிக்கைகளை தமிழகத்திலிருந்து இயங்கும் மனிதம் அமைப்பு உலக மனித உரிமை அமைப்புகளுக்கு கோரிக்கை வைப்பதோடு, இந்தியாவில் உள்ள தாய்லாந்து தூதரகத்திற்கும் விண்ணப்பித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக