புதன், 17 நவம்பர், 2010

இளைஞர் காங்கிரஸின் நடைப்பயணம் சென்னையை எட்டுவதற்குள், பல்வேறு அடிதடிகளும், ரத்தக்களறிகளும் ஏற்பட்டு விட்டன.


இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சிக்கு அதிக கோஷ்டிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இங்கு தொண்டர்களை விட தலைவர்கள் தான் அதிகம். காங்கிரஸில் ராகுல்காந்தியின் வருகை இதையெல்லாம் மாற்றி விடும் என்று கணக்குப் போட்டார்கள் கட்சி மேல் அக்கறையுள்ள சில சீனியர் தலைவர்கள். ராகுல் இளைஞர் காங்கிரஸுக்கு தனி முக்கியத்துவம் தந்ததும், இந்த இளைஞர்கள் காங்கிரஸைத் தூக்கி நிறுத்தி விடுவார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள்.

அதை மெய்ப்பிக்கும் விதத்தில் காங்கிரஸின் சாதனைகளை மக்களிடம் தெரிவிக்கும் விதத்தில் அதன் தலைவர் யுவராஜா தலைமையில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள் இளைஞர் காங்கிரஸார்.

நடைப்பயணம் இன்னும் முடிவடையாத நிலையில், ‘நாங்களும் தமிழ்நாட்டு காங்கிரஸ்காரங்களாக்கும்’ என நிரூபித்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

குமரியில் ஆரம்பித்த இளைஞர் காங்கிரஸின் நடைப்பயணம் சென்னையை எட்டுவதற்குள், பல்வேறு அடிதடிகளும், ரத்தக்களறிகளும் ஏற்பட்டு விட்டன.

‘கையில ரப்பர் வளையம் போட்டுருக்கானா, அவன்தான் கார்த்தி சிதம்பரம் ஆளு. அடிடா அவனை’ ‘வாசன் வாழ்க கோஷம் போடாதவனை கும்முங்கடா’ - காங்கிரஸின் சாதனைகளாக வழிநெடுகிலும் இளைஞர் காங்கிரஸார் உதிர்க்கும் வார்த்தைகள் தான் இவை.அந்த அளவுக்கு தனித்தனி கோஷ்டியாகப் பிரிந்து மோதலோடும்,கோபத்தோடும் ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

விழுப்புரத்தில் நடந்த மோதல்கள் குறித்து நம்மிடம் பேசிய திருவண்ணாமலை செங்கம் ஒன்றியக்குழுத் தலைவர் குமார், ‘‘நடைப்பயணம் ஒவ்வொரு நாள் முடியும் இடத்திலும் ஒரு கூட்டம் நடத்தப்படும். அதன்படி அன்று விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பயணம் நிறைவடைந்தது.

அந்த நேரத்தில் ‘கையில் கட்சிக்கொடி கலரில் மோதிரம் போட்டிருக்கும் கார்த்தி சிதம்பரம் ஆட்களை ரவுண்டு கட்டி உதையுங்கள்’என்று நடைப்பயணத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு கோஷ்டிக்கு தகவல் வந்ததாம்.உடனே நடைப்பயணம் மேற்கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர்களை உருட்டுக்கட்டையால் அடித்து மண்டையை உடைத்துள்ளனர்.

நான் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அங்கு நான்குபேர் மயங்கிக் கிடந்தனர்.அவர்களை நாங்கள் தான் திருவண்ணாமலை அரசு மருத்து வமனையில் சேர்த்துள்ளோம்.திருக்கோவிலூர் எம்.எல்.ஏ.சிவராஜ் என்பவரும், அவரது மகனும் இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளருமான பிரபுவும் தான் ‘வாசன் ஆட்களைத் தவிர வேறுயாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது’ என்று சொல்லி அடியாட்களை வைத்து உதைத்துள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இளைஞர் காங்கிரஸ் என்றாலே வாசன் அணிதான் என்பதைப் போல நடந்து கொண்டு கார்த்தி சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். ஆட்களை நடைப்பயணத்தில் கலந்துகொள்ள விடாமல் தொல்லை கொடுக்கிறார்கள்’’என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிப்பூசல் கூடாது என்பதுதான் ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸுக்கு செய்த அட்வைஸாம்.விழுப்புரம் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ராகுல்காந்தியின் நண்பரும்,இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளருமான ராஜிவ் சத்தேவ் முன்தான் இந்த வெட்டு, குத்தெல்லாம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தமிழகம் முழுவதும் இந்த நடைப்பயணம் கலவரப் பயணமாகத் தான் சென்று கொண்டிருக்கிறது.கரூர் மாவட்டத்திலும் வாசன் கோஷ்டிக்கும், சிதம்பரம் கோஷ்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வந்தபோது,அந்தத் தொகுதியின் சட்டமன்றத் தலைவர் கருப்பசாமியும்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாயராஜுக்கும் தகராறு ஏற்பட்டு மாறி, மாறி அடித்துக் கொண்டார்கள்.காங்கிரஸின் சாதனையைக் கேட்க வந்த பொதுமக்கள், இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் சண்டையைப் பார்த்துச் சென்றார்கள்.

‘ராகுல்காந்தி தலைமையை ஏற்போம்’ என்று சொல்லிக்கொண்டு, வாசன் தலைமையின் கீழ் இளைஞர் காங்கிரஸ் இயங்குவதாக,அதன் தமிழகத் தலைவர் யுவராஜா மீது அதிருப்தியிலிருக்கிறார்கள் பிற கோஷ்டியினர்.

இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர்,‘‘இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த யுவராஜா, காங்கிரஸ் தலைவர்களான தங்கபாலு, இளங்கோவன், சிதம்பரம் யாரையும் மதிப்பதில்லை.வாசன் அணியிலிருக்கும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் மட்டுமே இணக்கமாக இருக்கிறார்.



நடைப்பயணத்தின்போது, ‘சோனியா காந்தி வாழ்க, ராகுல்காந்தி வாழ்க’ என்ற கோஷத்தோடு ‘அய்யா ஜி.கே.வாசன் வாழ்க’என்கிற கோஷத்தையும் எழுப்புகிறார்கள். பிறருக்கு இது எரிச்சலைத் தருகிறது. சிதம்பரம் அணி, ஈ.வி.கே.எஸ்.அணி,தங்கபாலு அணி என எல்லாப் பிரிவினரும் நடைப்பயணத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் யாரும் தங்கள் தலைவர்கள் பெயரை பயன்படுத்துவதில்லை.

இளைஞர் காங்கிரஸின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சோனியா,ராகுல் படத்தைத் தவிர வேறு எந்த தலைவர்கள் பெயரும் இடம் பெறக்கூடாது என்பது தலைமையின் உத்தரவு.ஆனால் நடைப்பயணம் செல்லும் இடங்களிலெல்லாம் ராகுல், சோனியா படத்தோடு ஜி.கே.வாசனின் படமும் பிரமாண்ட பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது’’ என்று அலுத்துக் கொண்டனர்.

இந்தப் பிரச்னைகள் குறித்து தமிழக இளைஞர் காங்கிரஸின் மாநில துணைத்தலைவரும்,மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளருமான வரதராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, நாங்கள் சிதம்பரத்தின் படத்தையோ, கார்த்தி சிதம்பரத்தின் படத்தையோ வைக்கவில்லை. மற்றபடி பாதயாத்திரையில் யாருடைய படங்களெல்லாம் இடம்பெறுகிறது என்பதை நீங்களே பார்க்கிறீர்களே’’ என்று முடித்துக்கொண்டார்.

இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘எங்கள் பயணத்தில் தாய் அமைப்பான அகில இந்திய காங்கிரஸும் ஆங்காங்கே கலந்து கொள்கிறது.அவர்கள் தான் தலைவர் வாசனை ஆதரித்து கோஷங்கள் போடுகிறார்கள்.அதையும் நாங்கள் கவனித்துத் தடுத்து விடுகிறோம்.

காங்கிரஸைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் நாங்கள் போகும் இடங்களில் அவர்களாகவே,வாசன் படம்போட்ட பேனர்களை வைத்து விடுகிறார்கள். காங்கிரஸின் 85 சதவிகிதம் பேர் வாசன் அணியினர் தான் என்பதை மறைக்க முயலும் சிலர்தான் இதுபோன்ற பிரச்னைகளைக் கிளப்புகிறார்கள்.

மற்றபடி சிதம்பரம் குரூப், இளங்கோவன் குரூப், தங்கபாலு குரூப் என அனைவருமே ஒற்றுமையோடு தான் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டிருக்கிறோம்’’ என்று கூலாக பதில் சொன்னார் யுவராஜா.

ஒரு கட்சிக்குள் இத்தனை கோஷ்டிகள் இருப்பதைக்கூட இத்தனை வெளிப்படையாகவும்,பெருமிதத்தோடும் சொல்லிக்கொள்ள முடியுமா? உண்மையிலேயேகாங்கிரஸ்காரர்கள் சாதனையாளர்கள் தான்.

கருத்துகள் இல்லை: