செவ்வாய், 28 செப்டம்பர், 2010

வீணாகிப் போகும் தானியத்தை எலிகளுக்கு வேண்டுமானாலும் தருவோம், ஏழைகளுக்குத் தரமாட்டோம்

கண்ணாடி வீட்டிலிருந்தா கல்லெறிவது...?
அருணன்
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் பல கட்சிகளாக உடைந்து போயிருக்கிறார்கள் என்று மாற்றுக் கட்சியினர் கூறுவது, கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவதற்கு ஒப்பானது. அதிலும் குறிப்பாக, கட்சிப் பிளவு பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. 
சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டிலேயே காங்கிரஸிலிருந்து ஜெயப்பிரகாஷ் நாராயண் வெளியேறினார். அதற்கடுத்த சில ஆண்டுகளில் கிருபளானி வெளியேறினர். அதாவது காங்கிரஸிலிருந்து சோஷலிஸ்டுகள் பிரிந்து போனார்கள். போனவர்கள் காங்கிரள்ஸக் கடுமையாக எதிர்த்து நின்றார்கள். காங்கிரஸ் முதலாளிகளின் பாதையில் நடைபோடுகிறது, அது சோஷலிசத்தைக் கொண்டுவரப் போவதில்லை என்று கொந்தளித்துப் பேசினார்கள்.
அப்போது ஆரம்பித்த உடைப்பு ஒரு நாளும் நின்றதில்லை. 1969-ல் ஏற்பட்ட மிகப்பெரும் பிளவும் சரி, மாநிலத்துக்கு மாநிலம் ஏற்பட்ட பிளவுகளும் சரி, காங்கிரஸ் எப்போதும் ஓர் ஒன்றுபட்ட கட்சியாக இருந்ததில்லை என்பதற்குச் சாட்சியங்கள்.
கேரளத்திலே விதவிதமான காங்கிரஸ்கள் தோன்றியதும், மேற்கு வங்கத்திலே மம்தா பானர்ஜி தனிக் காங்கிரஸ் தொடங்கி இன்று தாய்க் காங்கிரள்ஸயே மண்டியிட வைத்திருப்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மை.
தமிழகத்தில் என்ன கதை? மூப்பனார் காங்கிரஸ் என்று பிரிந்து போய் இந்த மாநிலத்தின் காங்கிரள்ஸ கதிகலங்க வைத்ததே. இப்போதும் என்ன நிலைமை? பெயருக்குத்தான் இங்கே ஒரு காங்கிரஸ். உள்ளுக்குள் ஒரு நூறு காங்கிரஸ்கள். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு காங்கிரஸ். பல கோஷ்டிகளின் தாற்காலிக சம்மேளனமாகத்தான் அது இருக்கிறது. இப்போதுகூட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கூட்டணி பற்றி தனிப்பாட்டு பாடுகிறார். அவரை அடக்கி வைக்கவேண்டிய பரிதாப நிலையில் கே.வி.தங்கபாலு. இதுதானே தமிழகக் காங்கிரசின் இன்றைய நிலைமை? 
 இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் சி.பி.ஐ. என்றும், சி.பி.எம். என்றும் இரு பிரதான கட்சிகளாக இருப்பது சகலருக்கும் தெரிந்த விஷயம்தான். இது கடந்த 46 ஆண்டுகால நடப்பு. இப்படி இரண்டு கட்சிகளாக ஆனதற்குக் காரணம், இந்திய  சீன எல்லைப்போர் என்கிறாரே அதுதான் வரலாற்றுப் பொய்மை. எல்லைத்தாவா முற்றியது 1962-ல். ஆனால் கம்யூனிஸ்ட்  இயக்கத்துக்குள் கொள்கைப் பிரச்னை ஏற்பட்டது 1955 முதல். அது இந்திய நிலை பற்றிய கணிப்பிலே வந்த வேறுபாடு, மார்க்சியத்தைக் காலத்துக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதிலே வந்த மாறுபாடு. இதுவெல்லாம் இன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரிய நியாயமில்லை. அதனால், தெரியாத விஷயம் குறித்துப் பேசாமலிருப்பதுதான் நாகரிகம்.
இந்தியா பற்றிய அடிப்படை மதிப்பீட்டிலே வேறுபாடு இருந்தாலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்களின் உடனடிப் பிரச்னைகளில் கூட்டாக இயக்கங்கள் நடத்தி வருகின்றன. மேற்கு வங்கம் - கேரளத்தில் கூட்டணி ஆட்சிகளை நடத்தி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுக்க இடதுசாரி ஒற்றுமையைப் பேணி வருகின்றன. மத்தியிலே ஆளும் காங்கிரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து மக்களைத் திரட்டி வருகின்றன, மாற்றுத் திட்டங்களையும் முன்மொழிந்து வருகின்றன.
மார்க்சியம் பற்றி கம்யூனிஸ்டுகளுக்குப் பாடம் எடுக்க முனைபவர்கள் முதலில் நேருவின் கோட்பாடுகள் இன்று எந்த கதிக்கு ஆளாகியிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கட்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை இந்த நாட்டின் திருக்கோயில்கள் என்றாரே, அவற்றைக் கூறுபோட்டு விற்கத் தொடங்கியவர்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அல்லவா? நேருவின் திட்டமிட்ட பொருளாதாரம் இன்று எந்த நிலையில் உள்ளது? சகலமும் தனியார்மயம், தாராளமயம், அன்னிய ஏகபோகமயம்  என்றாகி திட்டமிடல் என்பதே அர்த்தமிழந்து போய்விட்டது. இப்படி நேருவின் சோஷலிசத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தத் தொடங்கியது அவரது பேரன் ராஜீவ் காந்தி காலத்தில் அல்லவா?
 கம்யூனிஸ்டுகள் பற்றி ஒருமுறை நேருவிடம் கேட்டபோது அவர் கூறினார்.  "கம்யூனிஸ்ட்' அபாயம் என்பதைவிட "கம்யூனலிஸ்ட்' அபாயம் என்பதுதான் இங்கே மெய்யானது. இதுதான் எனக்குப் பெருங்கவலையாக இருக்கிறது. இந்த தீர்க்க தரிசனமான வார்த்தைகளை இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
 மதவெறியை எதிர்த்து இவர்கள் கொள்கை ரீதியாகப் போராடவில்லை. பாபர் மசூதி இடிப்பைத் தடுத்து நிறுத்தத் தவறினார் காங்கிரஸ் பிரதமர் பி.வி. நரசிம்மராவ். சொல்லப்போனால் அதற்குத் துணைபோனார் எனலாம். இடிப்பை நடத்திய குற்றவாளிகளுக்கு இதுநாள்வரை சட்டரீதியான தண்டனையை வாங்கித் தரவில்லை காங்கிரஸ் ஆட்சியாளர்கள். அந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கும் விஷயமாகிப் போனது.
 இந்துத்துவா கோட்பாட்டைக் கொண்ட பா.ஜ.க.வோடு அவ்வப்போது கூடிக் குலாவவும் காங்கிரஸ் தயங்கியதில்லை. அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக அணுவிபத்து இழப்பீடு மசோதாவைக் கொண்டு வந்ததும், அதற்கு பா.ஜ.க.வின் ஆதரவைக் கேட்டதும், அவர்களும் முதலில் அதற்கு இசைவு தந்ததும் அண்மைக்கால வரலாறு.
 பண்டித நேருவால் உருவாக்கப்பட்ட சோஷலிசக் கொள்கையே நடைமுறைக்கு ஏற்றதாக மாறிவிட்டது என்கிறார்களே, காங்கிரஸ் தலைமையிலான இன்றைய அரசு, நேரு வகுத்த பாதையிலா செல்கிறது? உலக வங்கியும், சர்வதேச நிதியமும் வகுத்துத் தரும் பாதையில், அமெரிக்காவின் விரலசைப்புக்கு ஏற்பத் தங்களது பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக் கொள்ளும் மன்மோகன் சிங் அரசுக்கும் நேருவின் சோஷலிசப் பாதைக்கும் என்ன சம்பந்தம்?
 வீணாகிப் போகும் தானியத்தை எலிகளுக்கு வேண்டுமானாலும் தருவோம், ஏழைகளுக்குத் தரமாட்டோம் என்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு போட்டாலும் கொள்கைப் பிரச்னையில் தலையிடாதீர்கள் என்கிறார் பிரதமர். ஏழைகளைப் பட்டினி போட்டுக் கொல்வதுதான் இவரது கொள்கையா?
இத்தகைய படுமோசமான பாதையில் நடைபோடுகிற மத்திய அரசில்தான் தி.மு.க.வும் பங்கு வகித்து வருகிறது. இத்தகைய நாசகாரக் கொள்கைகளை அது தட்டிக் கேட்பதில்லை.  தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை எல்லாம் தி.மு.க. அரசு நிறைவேற்றி விட்டது என்றும், இனி என்ன கோரிக்கையை வைப்பது என்று விளங்காமல் இருட்டறையில் அவை தள்ளப்பட்டிருக்கின்றன என்றும் புளகாங்கிதப்படும் காங்கிரஸப்ர், ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள்.
 தி.மு.க. அரசின் செயல்பாடு பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை இவர்கள் கேட்க வேண்டும். மாடமாளிகைகளில், மத்திய அரசின் பதவி சுகம் அனுபவித்த விளைவால் ஏற்பட்ட வாழ்க்கை வசதிகளில் பஞ்சு மெத்தையும், பால்பழங்களுடன் உபசாரமுமாகக் காலத்தைக் கழிப்பவர்களுக்கு அடித்தட்டு மக்களின் அவலநிலை புரியவா போகிறது?
 ஒவ்வொரு நாளும் விடாது மின்வெட்டு. அதனால் சிறுதொழில் முனைவோர் படுகிற அவதி சொல்லி மாளாது. இதிலே மின் கட்டண உயர்வு வேறு. மக்களுக்கு இரட்டைத்  தண்டனை என்பதை மறந்துவிட்டு, மின்வெட்டு இருப்பதால் மொத்தக் கட்டண உயர்வு மாறாது என்று வியாக்யானம் தருகிறார்கள். வெந்த புண்ணிலே இது வேல் பாய்ச்சுவது. மின்சக்தி என்பது பொருளாதாரத்தின் உயிர் மூச்சு. இதற்கே தட்டுப்பாடு என்றால் தொழில் வளர்ச்சி என்பது-முதல்வர் கருணாநிதியின் வார்த்தையிலேயே சொன்னால்-வெறும் காகிதப்பூ.
இருட்டறையில் இருப்பவை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல, மொத்தத் தமிழ் மக்கள். மின் சக்தி இல்லாமல் தினமும் அவர்கள் இருட்டிலே வாழ்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு இதுவெல்லாம் பிரச்னையாகவே தெரியவில்லை என்றால், அவர்கள் நாட்டு நடப்பும், மக்களின் யதார்த்த அவலமும் புரியாதவர்கள் என்று அர்த்தம். தமிழர்களின் கோபத்தை மேலும் சம்பாதித்துக் கொள்கிறார்கள் என்று பொருள்.
 கடந்த தேர்தலின்போது, உழவர்களுக்கு நிலம் தருவோம், ஏழைகளுக்கு வீட்டுமனை தருவோம் என்றது தி.மு.க. அதையெல்லாம் நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள். இன்றோ மக்களிடம் இருக்கிற விளைநிலத்தையும் பறித்து, பெரும் கம்பெனிக்காரர்களுக்குத் தருகிற வேலைதான் நடக்கிறது. அதை எதிர்த்து மக்களின் போராட்டங்கள் வெடித்தவண்ணம் இருக்கின்றன. நகர்ப்புற மக்களுக்கோ வீட்டுமனை என்பது கனவாய் - கற்பனையாய் - பழங்கதையாய் ஆகிக் கொண்டிருக்கிறது. பல்லாண்டுகள் குடியிருந்த இடத்தைக்கூட காலி செய்யச் சொல்லி அரசாங்கத்திலிருந்து நோட்டீஸ் வருகிற அவலம்தான் நடக்கிறது.
இதற்கெல்லாம் மேலே அரசு நிர்வாகமானது ஊழல்மயமாகி வருவது கண்டு சகலரும் பதைபதைக்கிறார்கள். காசு கொடுக்காமல் எதுவும் நடக்காது, காசு கொடுத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும் - என்பதே வாழ்க்கை முறையாகிப் போனது.
 ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்தவண்ணம் உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் மவுனம் சாதிக்கிறார்கள். அந்த மவுனத்தின் அர்த்தம் இப்பொழுதுதான் புரிந்தது. காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என்று இப்போது வெடித்துக் கிளம்புகிறது. இதில் தாய் ஊழல் எது என்பதில் காங்கிரஸன்க்கும் தி.மு.க.வுக்கும் இடையில் ஒரு "மினி' காமன்வெல்த் போட்டியே நடத்தலாம் போலிருக்கிறது.
 பொதுவாழ்வில் நேர்மை என்பது இப்போது கம்யூனிஸ்டுகளிடம்தான் வாசம் செய்கிறது. தி.மு.க.  காங்கிரஸ் ஆட்சிகளில் அது ஓட ஓட விரட்டப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் ஆத்திரக்காரர்கள்தாம். அநியாயம் கண்டு ஆத்திரப்படுகிறவர்கள் அவர்கள். ஆனால் இதற்காகத் தங்கள் அறிவை இழந்து விடமாட்டார்கள். ஆத்திரத்தையும் அறிவையும் இணைத்து அநியாயத்தை-அநியாய ஆட்சியை-வீழ்த்துவார்கள். விரைவில் அதைப் பார்க்கத்தான் போகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்

கருத்துகள் இல்லை: