தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்து செல்லும் ஆட்சியாளர்களுக்கு பதவி இழப்போ, வேறு இழப்புகளோ ஏற்பட வாய்ப்பிருப்பதாக வதந்திகள் நிறைய உண்டு.
கடந்த 1984-ம் ஆண்டு நடந்த ராஜராஜ சோழன் சதய விழாவில் அப்போதையை பிரதமர் இந்திராகாந்தியும்,முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வந்து சென்ற சில மாதங்களில் எம்.ஜி.ஆர் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்திராகாந்தி அவரது மெய்க்காப்பாளர்களால் சுடப்பட்டார்.
இந்த சென்டிமெண்டை வைத்து அரசியல் பிரமுகர்கள் யாரும் கோயிலுக்கு வருவதில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், தஞ்சை பெரிய கோயில் 1000-வது ஆண்டு நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்பாரா? மாட்டாரா? என்ற மிகப் பெரிய சர்ச்சை கிளம்பியது.
இதற்கு ஏற்றாற்போல் தொடர்ந்து நடந்த சில சம்பவங்கள் இந்த ‘சென்டிமெண்ட்’ பயத்தை மேலும் பெரிதாக்கியது.
விழாவிற்கு முந்தைய நாளான கடந்த 22-ம் தேதி அரண்மனை வளாகத்தில் உள்ள ஆயுத கோபுரத்தில் இடி விழுந்தது.அதன்பின் 24-ம் தேதி தயாளு அம்மாளின் அண்ணி மரணம். ஆனால் துக்க நிகழ்ச்சிக்குச் செல்லாமல் சென்னையிலேயே இருந்தார் முதல்வர்.
சென்டிமெண்ட் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு தஞ்சைக்குச் செல்லவேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் பலர் எச்சரிக்கை செய்த நிலையில், இது போன்ற அறிகுறிகளின் காரணமாக முதல்வர் தயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் 24-ம் தேதி தஞ்சை செல்ல வேண்டிய முதல்வரின் புரோகிராம் கேன்சல் ஆனது.
24-ம் தேதி அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு வருவதையொட்டி மாநில முதல்வர்கள் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதால் முதல்வர் தஞ்சைக்குச் செல்லவில்லை.அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்றும் காரணம் கூறப்பட்டது.
இப்படிப் பல யூகங்கள் பவனி வந்த நிலையில், கடந்த 25-ம் தேதி மதியம் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி வந்து அங்கிருந்து தஞ்சை வந்து சேர்ந்தார் முதல்வர்.
அன்றைய தினம் பத்மா சுப்பிரமணியம் ஏற்பாடு செய்திருந்த ஆயிரம் நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியைக் காண தஞ்சை பெரிய கோயிலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. அப்போதும் முதல்வர் எந்த வழியாக வரப்போகிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது.
அனைத்து வதந்திகளையும், யூகங்களையும் பொய்யாக்கிவிட்டு இரவு 7.15 மணிக்கு தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்தார் முதல்வர்.சிவகங்கை பூங்கா வழியாக பெரிய கோயிலுக்குள் நுழைந்து தெற்கு பிராகார வாசல் வழியாக விழா மேடைக்கு வந்தார். ராஜராஜ சோழனே பெரிய கோயிலுக்கு வந்தால் அந்த வழியாகத்தான் வருவாராம்.
விழா மேடையில் முதல்வரைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி...வழக்கமான உடையான மஞ்சள் துண்டு,கரைவேட்டி ‘மிஸ்ஸிங். பட்டு வேட்டி, தங்க நிறத்திலான சரிகை போட்ட துண்டுக்கு மாறியிருந்தார் முதல்வர். முதல்வரின் புதிய ‘காஸ்ட்யூ¬மை கண்ட கனிமொழியின் மகன் ஆதித்தன், தன் செல்போனில் தாத்தாவைப் படம் பிடித்தான்.
முதல்வருக்காக சம்மணக்கால் போட்டபடி ஆயிரம் நடனக் கலைஞர்களும் மூன்று மணிநேரம் காத்திருந்தனர்.
நந்தி சிலையைச் சுற்றி 108 ஓதுவார்கள் அமர்ந்திருந்தனர். முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் ஒருமுறை ஓதுவார்கள் பாடினர்.
இந்நிலையில், முதல்வரின் புது காஸ்ட்யூமைப் பற்றி விசாரிக்க துடியாய் துடித்துக் கொண்டிருந்த இல.கணேசன்,வேகவேகமாக நடந்து சென்று பேட்டரி காரில் புறப்படத் தயாராக இருந்த முதல்வரைத் தடுத்து நிறுத்தி, ‘என்ன தலைவரே பட்டுச் சட்டை, பட்டு வேஷ்டி என்று கேட்க, ‘ நம் ஊரு திருவிழா, நீங்கதான் பட்டுச் சட்டை கட்டணுமா..நான் கட்டக் கூடாதா? என்று எதிர்க்கேள்வி கேட்டார் முதல்வர்.
‘இதைத்தான் நாங்களும் விரும்புகிறோம் தலைவரே என்று இல.கணேசன் கூறியதும், ‘அப்படியே உங்க பக்கம் இழுத்துடுவீங்களே என்று ‘காமெடி’ செய்தார் முதல்வர்.
முதல்வர் ஏன் கேரளந்தான் வாயில் வழியாக வரவில்லை என்ற கேள்வியும்,வித்தியாசமான உடையில் வர என்ன காரணம் என்ற கேள்வியும் நம்மை துரத்திக்கொண்டே இருந்தது.இதுகுறித்து அரசியல் விமர்சகர் சோவிடம் கருத்துக் கேட்டோம்.
‘‘கட்சிக் கொள்கை பகுத்தறிவு, பெரியார் பாதை, அண்ணா வழி இதெல்லாம் கட்சித் தொண்டர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.
அவருக்குப் பொருந்தாது. குறிப்பாக, எனக்கு ராசியில்லை. என் ஜாதகம் சரியில்லை என்ற வார்த்தைகளை உதிர்க்கும் பகுத்தறிவாளர் இவர் என்றார்.
ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘பெரியாரின் குருகுலத்தில் வளர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள கருணாநிதிக்கு இனி எந்தத் தகுதியும் இல்லை.
அன்பில் பொய்யாமொழியின் மகன் திருமணத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து சென்றிருந்தார். அப்போது பேசிய முதல்வர்,‘ எந்த ஒரு சூழ்நிலையிலும், கட்சிக் கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது. அவர் பட்டு வேட்டியைவிட கரைவேட்டியில் வந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என்று கூறியிருந்தார்.
இப்போது முதல்வர் மட்டும் எப்படி பட்டு வேட்டியில் வந்தார்? ஏதோ ஒரு ஜோதிடரின் ஆலோசனைப்படி தான் முதல்வர் தஞ்சை விழாவுக்கு பட்டுவேட்டி, சட்டையில் வந்திருக்கிறார். கோயிலின் பிரதான வாயில் வழியாக வந்தால், ஆட்சி போய்விடும் என்ற பயம் இப்போது வந்திருக்க தேவையில்லை. அவர் ஆட்சிக்கு ஆபத்து வந்து பல நாட்கள் ஆகிறது.
ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் இருந்தது போல்,கலைஞருக்குத் தளபதி என்று அந்த விழாவில் துரைமுருகன் பேசியுள்ளார்.சர்க்கஸ் கம்பெனியில் உள்ள பபூன் மாதிரி துரைமுருகன்.இப்படித்தான் எதையாவது பேசி சிரிக்க வைப்பார்.
கோயில் விழாவுக்கு பட்டு வேட்டியுடன் வந்தவர், கட்சிக் கூட்டத்துக்குச் சென்ற போது கரை வேட்டிக்கு ஏன் மாறவேண்டும்?’’ என்ற கேள்வியுடன் முடித்துக்கொண்டார்.
படங்கள் : ம.செந்தில்நாதன்
இரா. முருகேசன், துரை.வேம்பையன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக