போக்கிடமற்ற போக்கிரித்தனம்!
- ஜீ.
‘வேண்டாதவன் பெண்டாட்டியின் கைதொட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்’ என்பதுபோல இலங்கை அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் தமிழர்களைப் பொறுத்தவரை குற்றமாகவே கருதப்படுகிறது. அதுவும் புலன் பெயர்ந்தவர்களின் புலன்பல்கள் சொல்லி மாளாது.
கரும்பு தின்னக் கூலிகேட்கும் இலங்கையிலிருக்கும் அரசியல்வாதிகளும், ஆய்பவர்களும் வெளுத்துக்கட்டுவதை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் கேட்டு தம்மை தொலைக்கமாட்டார்கள் என்பதே இவர்களின் ஒரே நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் மண்ணள்ளிப்போடும் அளவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் நல்லவர்கள் குறைவே.
கனடாவில் இயங்கும் - வெளியிடப்படும் தமிழ் வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் செயற்பாடுகள் மிகத் திறமையான பச்சோந்தித்தனம். குறிப்பாக கனேடிய பல்கலாசார வானொலியில் (சிஎம்ஆர்) நடைபெறும் அனைத்து அரசியல் சம்பந்தப்பட்ட ஒலிபரப்புக்களும் மூன்றாந்தரமானவை என்பதை சுட்டிக்காட்டவேண்டிய தேவையில்லை. குவியம், செய்தியின் பின்னணியில் மற்றும் செய்திகள் பக்கா பச்சோந்தித்தனமானது. செய்திகளை இலங்கையிலிருந்து வழங்கும் இரண்டு பிரதான செய்தியாளர்கள் மூடிக்கேற்ற சாடிகளாக அள்ளி வழங்குவதில் பின்நிற்பதில்லை. அப்படியென்றால்தானே கனடாவிலிருந்து கிடைக்கும் டொலர் உபகாரம் ஒழுங்காக வந்துகொண்டிருக்கும்!
செத்த புலியிலிருந்து உன்னி கழண்டு போவதைப்போல மேலே குறிப்பிட்ட வகையறாக்கள் இன்னும் கழண்டபாடில்லை. செத்துப்பிழைத்தவர்களின் உயிரை வாங்குகிறார்கள். அதற்கேற்றாப்போல இலங்கை அரசாங்கமும் இவர்களுக்கு தீனிபோடுகிறது. அமிர்தன், தயாபாரன் ஆகிய இருவரும் எப்படியோ பத்திரிகையொன்றில் பணியாற்றுகிறார்கள். முன்னவர் நிக்ஷன் என்று அறியப்பட்ட கொழும்புப் பத்திரிகையொன்றில் பணியாற்றிவருகிறார். பின்னவர் யாழ் பத்திரிகையொன்றில் பணியாற்றிவருகிறார்.
இவர்கள் செய்திகளை தெரிவுசெய்து வழங்குவதும் வழங்கும் விதமும் கொடுமையானது. அதிலும் வானொலியின் அரசியல் ஆயும் நிகழ்ச்சிகளில் இவர்கள் வழங்கும் கருத்துக்கள் கொடுமையிலும் கொடுமையாது. ஒரு பத்திரிகைக்குரிய தார்மீக பொறுப்புக்களிலிருந்தும் தூர விலகி அரசியல் நாகரிகமற்று நேர்மையான அரசியல்வாதியிலிருந்தும் விலகி பக்கா போக்கிரித்தனமான முறையில் செய்திகளையும் கருத்துக்களையும் இந்த வானொலியினூடாக எடுத்துவருகின்றனர்.செத்த புலியை உயிர்ப்பிக்கும் நோக்கமல்ல, செத்து அழுகிக்கொண்டிக்கும் புலியின் சதையையும் எலும்;புகளையும் அகற்றிவிட்டு பஞ்சடைத்த புலியைவைத்து மிரட்டுவதே இவர்களது நோக்கம் போலும். புலிகளின் பினாமி அமைப்பான கூத்தமைப்பு தொலைந்தது சனியனென்று தலைக்கு தண்ணிதெளித்துவிட்டு பிழைப்பைப் பார்த்துக்கொள்கிறது. ஆனால் இவர்கள் பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் கொத்தனிக் குண்டுகளைப் போட்டது போல இந்தமாதிரியான பத்திரிகையாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களாலும் புலன் பெயர்ந்து ‘ஐயோ தமிழ் மக்கள், தேசியம்’ என்று கூப்பாடு போடுபவர்களால் உண்மையின் மீதும் தமிழ் மக்களின் தலைமீதும் போடப்படும் கொத்தனிக் குண்டுகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை.
சிஎம்ஆரின் யாழ் செய்தியாளர் செய்தி வாசிப்பதே ஒரு தனிதான். அதுபோலத்தான் அவர் அரசியலை ஆயுறதும். ‘குறிப்பிடத்தக்கது’ என்று செய்தியின் கடைசியில் சொல்வதன் மூலம் தனது அரசியல் வங்குரோத்தை நிறுவிவிடுவார். கொலை, கொள்ளை நடந்த இடத்திலிருந்து நூறுயார் தொலைவில் இராணுவத்தின் பாதுகாப்பு அரணோ அல்லது ஈபிடிபியின் காரியாலயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றோ ‘…….. இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவின் செய்றபாடென்று மக்கள் கருதுகிறார்கள்’ என்று முடிக்காட்டில் மனுசனுக்கு தூக்கமே வராது போல.
அதேபோல தமிழ் மக்களுக்கும் தேசியத்துக்கும் சார்பான செய்தியென்று காட்டிக்கொண்டு தமக்கும் தமது எஜமானதும் பிழைப்பை வளர்க்கும் விதமான செய்திகளை வாசிக்கும்போது ‘மக்கள் கருதுகிறார்கள்’ என்றோ ‘ஆய்வாளர்களின் கருத்து’ என்றோ முடித்துக்கொள்கிறார்கள். அரசியல் அநாதரவை, கருத்தியலின் அனாதரவையே இது காட்டுகிறது.
இந்த வானொலியின் நமது செய்தியாளர் தானொரு உசாரான பேர்வழி என்று நினைத்துக்கொண்டுதான் அமிர்தன் என்ற புனைபெயரை வைத்துக்கொண்டுள்ளார். முன்னவருக்கு இவர் சற்றும் குறைவானவரல்ல. இவர்தான் செய்தியை ஆயுறதுக்கும் செய்தியின் பின்னால் என்ன தெரிகிறது என்பதையும் கூடுதலாக குனிந்து பார்ப்பவர். கூத்தமைப்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்ன முடிவுகளை எடுக்க வேண்டும்? என்றெல்லாம் சொல்லுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ‘மாமனிதர்’ என்ற பட்டத்தில் மண்விழுந்ததோடு மாமாமனிதரான பீஷ்மர் என்கிற சிவத்தம்பி விட்ட இடத்தை இவர் தொட்டுச்செல்கிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வினால் நியமிக்கப்பட்ட ‘படிப்பினைகள் மற்றும் மீள்இணக்க ஆணைக்குழு’ முன்னால் தமிழ் மக்கள் தோன்றி சாட்சியம் அளித்து தொடர்பாக யாழ் மற்றும் நமது செய்தியாளர்கள் வழங்கிய செய்தி ஆகா, ஓகோ. யாம் பெற்ற இன்பம் இன்னும் எத்தனைபேர் பெற்றார்களோ தெரியவில்லை.
செய்தி ஆயுறதில அமிர்தனவிட்டால் வேறொருவர் பிறந்துதான் வரவேண்டும். மேற்குறிய்பிட்ட ஆணைக்கழுவுக்கு முன்னால் தோன்றிய தமிழ் மக்கள் யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் தம்மை சுட்டதென்றோ கொடுமைப்படுத்தினார்களென்றோ குறிப்பிடவில்லை என்று கூறினார். மேலும் இவர்களுக்கு ஒரே குழப்பம் என்னவென்றால் ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு என்று இந்தக் கூட்டம் கூப்பாடு போட்டாலும் பெரும் திரளான தமிழ் மக்கள் சாட்சியம் அளிக்க முன்வந்ததுதான். சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தவும், ஒரு பதிவாக அது அமைய வேண்டும் என்பதற்காகவும்தான் தமிழ் மக்கள் சாட்சியமளிக்க முன்வந்தார்கள் என்றொரு அரிய கண்டுபிடிப்பையும் முன்வைக்கிறார். இதற்குள் அரசாங்கம் தமக்கு சாதகமான மக்களை ‘செற்’பண்ணித்தான் சாட்சியமளிக்க வைத்தார்கள் ஆனால் அரசாங்கம் நினைத்தற்கு மாறாக பெரும்திரளான மக்கள் சாட்சியமளிக்க முன்வந்ததாகவும் சொல்கிறார்.
மேலும் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று மக்கள் அங்கலாய்ப்பதாக தான் அங்கலாய்கிறார். இதிலாவது புலிகள் சரணடைவதில்லை சைநெட்தான் அடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றாது குறிப்பிட்டானா இல்லை. அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கும் புலிகளை சுத்தவாளியாக்குவதுமே இவர்களுடைய தலையால கடமையாகிறது. என்ன பிழைப்பு?
அரசாங்கம் போர்க்குற்றம் புரிந்திருக்குமானால் புலிகளும் அதனைப் புரிந்திருக்கிறார்கள் என்பதைத் தன்னும் ஒத்துக்கொள்ளாத படுகோழைகள். போக்கிடமற்ற போக்கிரிகள். மனிதத்தன்மையற்ற ஊடக வியாபாரிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக