சென்னை: மாநகர ரயில் திட்டப்பணிகளின் செலவுத் தொகை ரூ 18000 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை மாநகர ரயில் திட்டப் பணிகள் கடந்த 10.6.2009 அன்று தொடங்கன. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 2 வழித்தடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வழித்தடம் திருவொற்றியூரில் இருந்து சென்டிரல், பிராட்வே, அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரை செல்லும். மற்றொரு வழித்தடம் சென்டிரலில் இருந்து அண்ணாநகர், கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை அமைக்கப்படுகிறது.
இதன் மொத்த தூரம் 45 கிலோ மீட்டர் என்று முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து தொடங்குவதாக இருந்த வழித்தடம் தற்போது திருவொற்றியூர் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பாதையின் தூரம் சுமார் 5 கிலோ மீட்டர் அதிகமாகிறது.
மெட்ரோ ரயில் பாதை சுமார் 24 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையாகவும், மீதமுள்ள இடங்களில் உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டபோது திட்ட செலவு 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது பல்வேறு காரணங்களால் அது ரூ.18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 23 சதவீதம் அதிகமாகும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 2 கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட பணிகள் 2013-ல் முடிவடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கோயம்பேடு பஸ்நிலையம், சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் ஆகியவை இணைக்கப்படுகின்றன. இதனால் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அம்பத்தூர் - திருவான்மியூர் ரயில் பாதை:
அடுத்தக் கட்டமாக அம்பத்தூரில் இருந்து ஆற்காடு ரோடு, பனகல்பூங்கா, லஸ், அடையார் பாலம் வழியாக திருவான்மியூர் வரை மெட்ரோ ரெயிலுக்கு புதிய பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆகும் செலவில் 59 சதவீத நிதியை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் வழங்குகிறது. மத்திய அரசு 20 சதவீதமும், மாநில அரசு 21 சதவீதமும் வழங்குகிறது.
இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் தலைமை பொது மேலாளர் சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக