புதுடில்லி: இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை இனியும் தேவையா? இதுபற்றிய மக்கள் கருத்து என்ன? என்பதை அறிய வெள்ளிக்கிழமை மாலை டில்லியில் நடந்த விசாரணையில் தமிழ் உணர்வாளர்கள் என்று கூறப்படும் ஒரு தலைவர் கூட ஆஜராகவில்லை. பா.ஜ.க. தரப்பிலிருந்து ஒருவர் மட்டும் ஆஜராகி புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது கடந்த 20 ஆண்டுகளாக தடையுள்ளது. இந்தத் தடை தொடர வேண்டுமா... புலிகள் அமைப்புப் பற்றிய இந்தியாவின் வருங்கால நிலை என்னவாக இருக்கவேண்டுமென்பது பற்றி முடிவெடுக்க இந்திய உள்துறை அமைச்சர் வெள்ளி மாலை 3.30 மணிக்கு டில்லியில் மேல் நீதிமன்ற நீதிபதி விக்ரம்சிங் குப்தா தலைமையில் ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தது. விடுதலைப் புலிகள் விடயத்தில் மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்கான இந்தப் பொது விசாரணை டில்லி மேல் நீதிமன்றம் எண் 2 இல் நடந்தது. இந்தப் பொது விசாரணைக்கு தமிழகத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் கூட எட்டிப்பார்க்கவில்லை. தமிழகத்திலிருந்து பா.ஜ.க. வைச் சார்ந்த ஒருவர் மட்டும் கலந்துகொண்டார். அவர் தனது கருத்தைக் கூறும்போது;விடுதலைப் புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால், இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது தடைவிதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. இல்லாத ஒரு இயக்கத்தை நினைத்து எதற்காக அச்சப்பட வேண்டும்? என்று வாதாடினார். இந்த விசாரணையில் ஒருவரைத் தவிர வேறு யாரும் கலந்துகொள்ளாததால் அடுத்த மாதம் 21 ஆம் திகதி சென்னையிலோ அல்லது டில்லியிலோ இந்த விசாரணையை மீண்டும் நடத்த நீதிபதி முடிவு செய்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக