மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஒரு அசாதாரண
சூழல் நிலவுகிறது. அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கடும்
பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த பஞ்சத்தின் வெளிப்பாடே சகாயம் போன்ற ஐஏஎஸ்
அதிகாரிகளை முதல்வராக கேட்பதும், விஜயகாந்தை அனைத்து அரசியல் கட்சிகளும்
விழுந்து விழுந்து அழைப்பதும்.
அதிமுக அரசு கடந்த 2011ம் ஆண்டு முதலாகவே செயல்படாத அரசாகத்தான் இருந்து
வந்தது. குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு கடந்த ஆண்டு
வந்ததற்கு பிறகு, ஒரு பொம்மை அரசாங்கமாகத்தான் செயல்பட்டது. நாஞ்சில்
சம்பத் சொல்வது போல, அனைத்து திட்டங்களும், “அம்மா வருகைக்காகவே
காத்திருந்தன”. நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் வளைத்து, விலைக்கு
வாங்கி, ஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்பதில், அதிமுக அடிமைகளுக்கு
அப்படியொரு அபார நம்பிக்கை. கணிதமேதை குமாரசாமி அளித்த தீர்ப்பினால்
ஜெயலலிதா விடுதலை ஆன பிறகும் தமிழக அரசு செயல்படாத மந்த அரசாகவே இருந்து
வந்தது.
“அம்மா உத்தரவுக்கிணங்க” என்ற லாவணிகள், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த
காலங்கள் அனைத்திலும் இருந்தே வந்தன. புதிது கிடையாது. ஆனால், வெள்ள
நிவாரணப் பணிகளின்போது, பாடப்பட்ட அம்மா லாவணிகள்தான் பொதுமக்கள் இடையே,
குறிப்பாக இளைஞர்கள் இடையே கடும் கோபத்தை எழுப்பின. அதுவரை, ஜெயலலிதாவை
பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்த இளைஞர்கள் வெள்ள பாதிப்புகளை அதிமுக அரசு
எப்படி எதிர்கொள்கிறது என்பதை ஊன்றி கவனிக்கத் தொடங்கினார்கள். அதிமுக
அடிமைகளின் அம்மா புகழ் லாவணி, அனைத்து தரப்பினரையும் எரிச்சலடைய வைத்தது.