சனி, 4 செப்டம்பர், 2010

பிரபாகரன் படையினரிடம் சரண் அடையவில்லை?

V.P எய்தியது வீர மரணமா?
வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரண் அடையவில்லை, அவர் படையினருடன் ஆன மோதலிலேயே கொல்லப்பட்டார் என்று கே.பி தனது செவ்வியில் தெரிவித்து இருந்தார். பெரும்பகுதியான ஈழத் தமிழர்களின் மனதுகளில் வீரத்தலைவனாகவும், மதிப்பிற்கு உரியவராக இருக்கும் பிரபாகரனின் இறப்பினை களங்கப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஆனால் ஒரு தவறான தகவல் எமது மக்கள் மத்தியில் சரித்திரமாகவும், வரலாறாகவும் பதிவாகிப் போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தினால், இது குறித்து ஆராயவேண்டியுள்ளது.
மடுவை படையினர் கைப்பற்றிய போது பிரபாகரன் தன்னை பாதுகப்பதற்கான திடமான திட்டத்தினை வகுத்திருக்க வேண்டும். கிளிநொச்சி பகுதி பறிபோனதிற்கு பிற்பாடு , கடற்கரை கரை பிரதேசங்கள், குறிப்பாக முல்லைதீவு கடற்கரை பிரதேசங்களை இழந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியது மிகவும் தமாதமான நடவடிக்கையாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழ தமிழர்களின் ஒருபகுதியினரின் வீதிமறிப்பு போராட்டங்களின் மூலம் யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கை கைகொடுக்கவில்லை. வெளிநாடுகளில் ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினரால் நடந்த்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்களை எந்த நாடுகளும் கண்டுகொள்ளவில்லை.
வணங்காமண் கப்பல் வன்னிக்கடல் பகுதிக்கு திட்டமிட்ட நேரத்திற்கு வந்து சேரவில்லை. அப்படி அந்த கப்பல் வந்திருந்தாலும் அதனால் பயன் ஏற்பட்டு இருக்குமோ என்பது ஐயமே ஆகும். இறுதி நேரத்தில் தமது முழுப்பலத்தையும் திரட்டி படையினரின் சுற்றி வழைப்பினை உடைத்துக் கொண்டு வெளியேறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கைகூடவில்லை. இந்த உடைப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் கடாபி, தீபன் என தளபதிகள் உட்பட 452 போராளிகள் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்த முயற்சியும் கைகூடாமல் போனது.
இறுதியில் வை.கோ வின் மதியுரைக்கு இணங்க இந்திய தேர்தல் முடிவுகளை காத்திருந்து அதுவும் நல்ல செய்தியை கொடுக்கவில்லை.
இந்த முயற்சிகள் எல்லாம் கைகூடாமல் போன பின்னர், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஆயுதங்களை கையளித்துவிட்டு சரண் அடைவதே ஒரே வழி என்ற முடிவிற்கு வந்தனர். இதன் முதல்கட்டமாகவே நாம் எமது ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்று புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அறிவித்து இருந்தார். தாம் சரண் அடையும் போது தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் யார் தருவது என்ற கேள்வி எழுந்தபோது நோர்வே நாட்டு அரச சார்பு நிறுவனம், மனிதநேய அமைப்புக்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், தமிழ்தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நோர்வே நாட்டு அமைச்சர் ஒருவர் என்று பலரின் உத்தரவாதங்கள் கோரப்பட்டு இருந்தன. புலிகளின் தலைவர்கள் வெள்ளை கொடிகளுடன் சரண் அடைய உள்ளார்கள் என்ற செய்தி இலங்கை அரசிற்கு முன்னரே தம்மால் அறியப்படுத்தப்பட்டதாக நோர்வே நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் தெரிவித்து இருந்தமை இங்கு குறிப்பிடதக்கதாகும்.
இப்படியெல்லாம் பல தரகர்கள் பிரபாகரன் சரண் அடைவது குறித்த பேச்சுக்களை இலங்கை அரசுடன் திரைமறைவில் நடத்தி இருந்தார்கள். புலிகள் மட்டும் வெளிப்படையாக அனைத்து சர்வதேச ஊடகங்களுக்கும் அறியப்படுத்திவிட்டு சரண் அடைந்திருப்பார்களாயின் , ஓரளவிற்கு அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் புலிகள் தமிழர்கள் மத்தியில் தம்மை வீர மறவர்களாகவும், வெல்ல முடியாதவர்களாகவும் காட்டிக்கொண்டமையினால், வெட்கமுற்று, கூனிக் குறுகி திரை மறைவு நாடகத்தினை நடத்தி இருந்தார்கள். இறுதி வேளையில் வேறு மாற்று வழியில்லாது இலங்கை அரசின் நிபந்தனைக்கு இணங்கி தாக்குதலை நிறுத்தும் போது கூட நாம் எமது ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்று, அதனை அழகு தமிழில் அறிவித்து இருந்தார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் படையினரிடம் சரண் அடையவில்லை என்று கே.பி கூறுவதும், சரண் அடைந்த புலி தலைவர்களை அரச படைகள் கொல்லவில்லை என்று சர்வதேச சமூகத்திற்கு அரசு கூறுவதும் அவரவர் நலன்களை காப்பாற்றுவதற்காகவே என்பது நான் எழுதித்தான் தெரியவேண்டியதில்லை. சரண் அடைந்த பிரபாகரனையும் ஏனைய புலி தலைவர்களையும் அரச படைகள்தான் கொலைசெய்தன என்று தெரிவித்து, கே.பி அவர்களே சர்வதேச நீதிமன்றத்திற்கு சாட்சியாக இருக்க முடியுமா? இலங்கை அரசு மீதான போர்கால குற்றசாட்டிற்கு (war crime) ஆதரவாக கருத்து கூற முடியுமா?
அரச தரப்பினை பொறுத்தவரையில் சரண் அடைந்த புலி தலைவர்களை தாம் கொல்லவில்லை என்று சர்வதேச நாடுகளுக்குதான் கூறுகின்றார்களே தவிர தென்னிலங்கை மக்களுக்கு அல்ல. பிரபாகரனை உயிருடன் பிடித்து வந்து அரச உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் அவரை பார்த்துவிட்டு துடிதுடிக்க கொன்றாதாகவே தென்னிலங்கை மக்கள் மத்தியில் செய்திகள் பரப்பப்பட்டன. பிரபாகரன் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கும் காட்சிகள் வேண்டுமென்றே கசியவிடப்பட்டு இருந்தன. பிரபாகரனின் மனைவியும் இரண்டாவது மகன் பாலச்சந்திரனும் கனடாவில் உயிருடன் இருப்பதாக வதந்திகள் வந்து சில நாட்களில் பாலச்சந்திரன் நெஞ்சில் குண்டு காயத்துடன் இறந்து கிடக்கும் கலர்படம் இணையத்தளங்களில் வெளியாகின. இவைகள் எல்லாம் என்னத்தினை காட்டுகின்றது என்றால்! புலிதலைவர்களையும் அவர்களது குடும்பத்தினரை நாம் இல்லாது செய்துவிட்டோம் என்ற செய்தியினை தென்னிலங்கை மக்களுக்கு வீரத்துடன் அரச தலைவர்கள் கூறுவதாகவே இருந்தது.
பிரபாகரன் வீர மரணம் எய்தியதாக கூறும் செய்தியை கே.பி அவர்கள், சிங்கள ஊடகவியாளர்களை அழைத்து , பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து இருந்து தென்னிலங்கை மக்களுக்கு கூறுவாரா?
archunan2009@live.com

கருத்துகள் இல்லை: