செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கனடா செல்ல கப்பல் பயணத்திற்காக தாய்லாந்தில் காத்திருக்கும் தமிழர்கள்

thailand-10
நான்கு இலங்கைத் தமிழர்கள் தாங்கள் தாய்லாந்திற்கு விடுமுறையில் வந்திருப்பதாகக் கூறினர். ஆனால், தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு அறைக் குடியிருப்புக்கு வெளியே அவர்கள் அபூர்வமாகவே செல்கின்றனர். கட்டிலில் ஒன்றாக அமர்ந்தவாறு ஆங்கில படத்தை முடிவில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தாய்லாந்து மொழி அவர்களால் புரிந்துகொள்ள முடியாததொன்றாகும்.

தாய்லாந்திற்கு ஏன் வந்துள்ளீர்கள் என்று கேட்டால் உல்லாசப் பயணிகளாக என்ற பதிலை அவர்கள் கூறுகின்றனர். கடந்த வாரம் வந்தோம். அடுத்த வாரம் புறப்படவுள்ளோம் என்ற பாலசுப்பிரமணியம் என்று 25 வயதுடைய இளைஞர் கூறினார். ஆனால், அதற்கு மேல் ஆங்கிலத்தில் பேச முடியாது என அவர் கூறினார். ஆனால், ஆங்கிலத்தை அவர் நன்றாக விளங்கிக்கொள்வார் எனத் தென்பட்டது. பாங்கொக்கின் தென்பகுதியிலிருந்த 5 மாடிக் கட்டிடமானது

வழமையாக ஆட்களைக் கவரும் இடமல்ல. அங்குள்ள மேலும் இரு அறைகளில் தமிழர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களைச் சுற்றுலாப் பயணிகள் எனக் கூறினர். நாலு பேர் உள்ள குடும்பம் ஒன்று அங்கிருந்தது. மற்றொரு அறையில் ஆட்கள் குழுவாகத் தங்கியிருந்தனர்.

வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக அவர்கள் அங்கு வந்து தங்கியிருப்பதாக குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுவதாக குளோப் அன்ட் மெயில் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் கனடாவுக்கு அடுத்த படகில் செல்வதற்காகக் காத்திருக்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. எம்.வி.சன் சீ கப்பலில் 492 தமிழர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்குச் சென்றிருந்தனர். தாய்லாந்து வழியாகவே அவர்கள் சென்றுள்ளனர். பல தமிழர்கள் இப்போது தாய்லாந்தில் பயணத்திற்காகக் காத்திருப்பதாக குளோப் அன்ட் மெயில் தெரிவித்திருக்கிறது.

சன் சீ கப்பலை ஏற்பாடு செய்தவர்கள் இப்போது மற்றொரு கப்பலை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், எவ்வளவு காலம் இதற்கு செல்லும் என எனக்குத் தெரியாது என பாக்கொக்கிலுள்ள தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அவர் தன்னை அடையாளங் காட்ட விரும்பவில்லை. கனடாவுக்குச் செல்வதற்கு வேறு யாராவது விரும்புகிறார்களா என்று கேட்கப்பட்ட போது அங்கிருந்த தமிழர்களில் ஒருவருக்கொருவர் தமிழில் குசுகுசுத்தனர். பின்னர் தமக்கு அவ்வாறான ஆர்வம் எதுவுமில்லையென மறுத்தனர். கனடாவைப் பற்றி குறிப்பிடும் போது தமிழர்களின் முகத்தில் அதிகளவு புன்சிரிப்பு காணப்பட்டது. ஆயினும் தாய்லாந்திற்கு தாங்கள் உல்லாசப் பயணிகளாக வந்திருக்கிறார்கள் என்ற நிலைப்பாட்டையே வலியுறுத்திக் கூறினர்.

அண்மையில் தமிழர்கள் தாய்லாந்திற்கு வந்திருப்பது தொடர்பான பட்டியலை வட்டாரம் ஒன்ற குளோப் அன்ட் மெயிலுக்குத் வழங்கியிருந்தது. சமீபகாலம் வரை வெற்றிடமாக இருந்த விடுதிகளிலேயே புதிதாக வரும் தமிழர்கள் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பாலசுப்பிரமணியம் மற்றும் ஏனைய சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் கட்டிட முகாமைத்துவத்தின் பதிவுகளைப் பார்க்கையில் அவர்கள் பாங்கொக்கிற்கு இடங்களைப் பார்வையிட வந்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதாகக் காணப்படுகிறது.

அவர்களிடம் காரில்லை. பாங்கொக்கின் மத்திய பகுதிக்கு 1 மணித்தியாலத்தில் சென்று விட்டு திரும்பி வந்துவிடுகின்றனர். இந்த விடுதியானது டொன்யொங் விமான நிலையத்திற்கு சமீபமாக உள்ளது. விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் போது அந்தக் கட்டிடம் ஆடிக்கொண்டிருக்கிறது. அறைகளை விட்டு அபூர்வமாகவே தமிழர்கள் வெளியே செல்வதாகக் கட்டிட முகாமையாளர் கூறுகிறார்கள். அறைக்குள் கட்டில் ஒன்றும் சிறிய தொலைக்காட்சியும் மின்விசிறியும் உள்ளது. 2 வார விசாவில் அவர்கள் வந்துள்ள போதும் மாதத்திற்கு அறையொன்றுக்கு 100 டொலர் வாடகை கொடுத்து 3 அறைகளை 9 மாதங்களுக்கு அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு ஜூலை 15 இல் கொழும்பில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அவர் பாங்கொக்கிற்கு வருவதற்கு மூன்று கிழமைகளுக்கு முன்பாகவே கடவுச் சீட்டு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் அதிக காலத்திற்கு தங்கியிருப்பதில்லையென அந்த குடியிருப்பு பணியாளர்கள் கூறுகின்றனர். நான்கு ஐந்து பேராக அவர்கள் வருவார்கள் சிறிது காலம் தங்கி விட்டு சென்றுவிடுவார்கள். பின்னர் வேறொரு குழு வரும் என்று ரியன்கிரட்டான பீன்கயாள் என்பவர் கூறியுள்ளார்.

தாய்லாந்திலிருந்து கனடாவுக்குத் தமிழர்கள் கப்பலில் செல்வதாயின் 10 வாரம் கடலில் இருக்க வேண்டும். எம்.வி.சன் சீயில் சென்றவர்கள் தாய்லாந்தில் தென்பகுதி துறைமுகமான சொங்கிலாசமிலிருந்து ஏப்ரல் மாதம் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. மே 1 இல் 120 தமிழர்கள் வாகனமொன்றில் பாங்கொக்கிலிருந்து சொங்கிலாவிற்கு சமீபமாக உள்ள மீன்பிடி குடியிருப்புக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து சிறிய படகு மூலம் சன் சீ கப்பலுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அக்கப்பல் தாய்லாந்து வளைகுடாவில் நின்றிருந்தது. அதன் பின்னர் 2 1/2 கிழமைகள் கழித்து 40 தமிழ் சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்றுள்ளனர். துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகள் அதே இரவு சென்றதாக நம்பப்படுகிறது.

இந்த முழுமையான நடவடிக்கைகளுக்கு பெருந்தொகைப் பணம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், தாய்லாந்தில் தொடர்ந்து தங்கியிருப்போர் தமக்கு கனடாவிற்குச் செல்ல விரும்பமெனவும் ஆனால், அது மிகவும் செலவான விடயமெனக் கூறுகின்றனர். இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்திலிருந்து வெளியேறிய சுகுமார் (23 வயது) என்பவர் கூறுகையில்;

தனது தந்தையார் காணாமல் போய்விட்டதாகவும் தான் சிறிது காலம் சிறையிலிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் பாங்கொக்கில் யூ.என்.எச்.சி.ஆரில் தன்னை அகதியாகப் பதிவு செய்துள்ளார். தாய்லாந்தில் இயங்கும் முகவர்கள் பாதுகாப்பாக கனடாவிற்குக் கொண்டு செல்வதற்கு பல்லாயிரக்கணக்கான டொலர்களை அறவிடுவதாகவும் சாதாரண அகதி ஒருவரால் அத்தொகைக்கு எங்கே போவது என்று அவர் கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: