ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் தனியாக இருக்கும் நபர்களைக் குறி வைத்துக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்பு சென்னை நகரில் இரவு நேரங்களில் தனியாக சிக்கும் நபர்கள் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்டு வந்தனர். அதைச் செய்தது யார் என்பது இன்று வரை சரியாகத் தெரியவில்லை. சில கொலைகள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் மர்மக் கொலைகள் குறித்த புதிர் இதுவரை விளங்கவில்லை.
இந்த நிலையில், ஹைதராபாத் நகரில் கடந்த 2 மாதமாக இரவில் தனியாக இருக்கும் நபர்கள் குறி வைத்து கொல்லப்பட்னர். அதுவும் அனைவரும் பாறாங்கல்லால் தாக்கி கொடூரமாகக கொல்லப்பட்டனர். மொத்தம் இதுவரை 16 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் ஹைதராபாத் நகரமே அல்லோகல்லப்பட்டுப் போனது. இரவில் தனியாக இருக்க அனைவரும் பயந்தனர்.
சம்பந்தப்பட்ட நபரைப் பிடிக்க போலீஸார் வலை வீசி காத்திருந்தனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சல்லமன்ட்லி பகுதியில் உள்ள ஏ.டி.எம். காவலாளி ஒருவர் பாறாங்கல் போட்டு கொல்லப்பட்டார். அப்போது அவரது செல்போன் திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் தனியார் செல்போன் நிறுவனம் உதவியுடன் அந்த நபரை கண்காணித்துப் பிடித்தனர். இதில் தொடர் கொலையில் ஈடுபட்டு வந்த அந்த வாலிபர் சிக்கினார்.
விசாரணையில் கர்நாடக மாநிலம் குல்பர்காவை சேர்ந்த ரத்தோட் என்பது தெரிய வந்தது.
போலீஸாரிடம் ரத்தோட் கொடுத்த வாக்குமூலம் திகிலூட்டுவதாக இருந்தது. பகல் நேரங்களில் நான் நன்றாக இருப்பேன். ஆனால் இரவாகி விட்டால் எனக்கு கொலை வெறி வந்து விடும். இதனால்தான் நான் கொலையில் இறங்கி விட்டேன். தனியாக இருக்கும் நபர்களைப் பார்த்துப் பார்த்துக் கொலை செய்தேன்.
அல்ஜல்கஞ்ச் பகுதியில் 2 பேர், நாராயண்கடாவில் 2, காக்கிநாடாவில் 2, சைபராபாத்தில் ஒருவர், சல்லமன்ட்லியில் ஒருவர் என்று மொத்தம் 16 பேரை கொன்றுள்ளேன் என்றார் ரத்தோட்.
அவரைத் தொடர்ந்து விசாரித்து மேலும் தகவல்களை அறிய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக