வியாழன், 2 செப்டம்பர், 2010

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த பேச்சு வெற்றி.

கடந்த மூன்று தசாப்த காலங்களாக புரையோடிப்போயிருந்த இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் இலங்கை-இந்திய மீனவர் சமூங்கங்களைச் சேர்ந்த மீனவர்களும், பொது அமைப்புகளின் பிரமுகர்களும் இணைந்து பேச்சுவார்த்தைகளை அண்மையில் நடத்தியுள்ளனர். இப்பேச்சு வெற்றியளித்துள்ளது எனக் கூறப்படுகின்றது. இப்பேச்சில் ஆலோசகராகப் பங்கேற்ற யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சூசை ஆனந்தன் இது குறித்து கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வி இங்கு பிரசுரமாகின்றது

கேள்வி: தாங்கள் பங்குபற்றியிருந்த குழுவினுடைய தமிழ்நாட்டு விஜயத்தின் முக்கிய இலக்கு என்ன?

பதில்: இலங்கையின் வடபகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலுள்ள ஒடுங்கிய பாக்கு நீணை கடற்பரப்பில் கடந்த மூன்று தசாப்தங்களாக புரையோடிப்போயிருந்த மீனவர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அக்கடற்பரப்பை சமாதனப் பிரதேசமாக ஆக்குவதுதான் எங்களது இலக்காக இருந்தது.

கேள்வி: இத்தகைய முயற்சியின் பின்னணி பற்றி…?

பதில்: இத்தகைய ஒரு முயற்சி 2004 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. கத்தாஸ் நிறுவனம் நீர்கொழும்பிலுள்ள NAFSO (தேசிய மீனவ ஒத்துழைப்புச் சங்கம்) வட பகுதி கடற்றொழிலாளர்களின் சங்கங்கள், தமிழ் நாட்டிலுள்ள SIFF எனப்படும் அமைப்பு ஆகியன கூட்டாக இணைந்து அரசுகளின் ஆதரவுடன் கொழும்பில் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டன. வடபகுதியிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தனர். எனினும் சுனாமி அனர்த்தம் தொடர்ந்து ஏற்பட்ட யுத்த சூழலும் இந்தச் சமாதான முயற்சியைத் தடைப்படுத்தியிருந்தது. யுத்தம் இன்று முடிந்த நிலையில் மீண்டும் இம்முயற்சி தொடர்கிறது.

கேள்வி: தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த உங்கள் குழு பற்றி…..

பதில்: வடபகுதியில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளும் கத்தாஸ் நிறுவனம் NAFSO (நெப்சோ) எனப்படும் தென்பகுதி மீனவர் அமைப்பின் இயக்குநர் ஹேமன் குமார, அதன் செயலாளர் யேசுதாசன், மற்றும் இக்குழுவின் ஆலோசகர்களாக நானும் (யாழ்பல்கலைக்கழகம்), பேசாலை பங்குத்தந்தை அருட்திரு அகஸ்டியன் அடிகளாரும் பங்குபற்றியிருந்தோம். மேலும் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் மூவரும் இதில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். தென்பகுதி ஊடகவியலாளர் இருவரும் எம்முடன் வந்திருந்தனர். இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தவரட்ணத்துக்கு விசா மறுக்கப்பட்டிருந்ததால் சூரியகுமாரன் தலைமைப் பொறுப்பை ஏற்று இக்குழுவினை வழிநடத்தியிருந்தார்.

கேள்வி: தமிழ்நாட்டில் உங்கள் விஜயம் எவ்வாறு அமைந்திருந்தது?

பதில்: திருச்சி விமான நிலையத்தில் இறங்கியவுடனேயே எமக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு சென்ற இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் கடற்றொழிலாளர் அமைப்புகள் கரகோஷம் செய்து வரவேற்றதுடன் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு மிக அன்புடனும் பாசத்துடனும் கௌரவிக்கப்பட்டோம். இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட கரையோரங்கள் எங்கும் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நிலைமை பற்றி விளக்கப்பட்டது. முக்கிய துறைமுகப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் கூட்டப்பட்டு இலங்கையின் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது. முக்கியமாக இந்திய இழுவைப் படகுகளினால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி விளக்கப்பட்டது. இந்திய தரப்பினராலும் அவர்களுடைய பிரச்சினைகள் விளக்கப்பட்டன. இவற்றையெல்லாம் உள்வாங்கி எமது குழுவினர் ஒன்றுகூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

கேள்வி: வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி…….

பதில்: குறித்த வடபகுதி கடற்பரப்பானது பரப்பளவில் மிகவும் சிறியதே. இக்கடற்பரப்பிலேயே இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது. இந்தியஇலங்கை கடல் எல்லையைத் தாண்டி எமது சிறு கடற்பரப்பினுள் ஆயிரத்துக்கும் அதிகமான இழுவைப் படகுகள் நுழைந்து, எமது கடல்வளங்களை வாரிக் கொள்கின்றன. இழுவைப் படகுகள் எமது பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒன்று. எமது பகுதி மீனவர்கள் இவ்வகையான படகுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தே வருகின்றனர். வாரத்தில் மூன்று தினங்கள் இந்தியப் படகுகள் தொழிலில் ஈடுபடுவதினால் வளங்கள் அழிவதுடன், எமது பகுதி மீனவர்கள் மூன்று தினங்கள் கடலுக்குச் செல்வது தடுக்கப்படுகின்றது. இதன் மூலம் தொழில் இழப்புக்களும் ஏற்படுகின்றன.

மேலும் கரையோரங்களிலுள்ள எமது தரப்பினருடைய வலைகளும் இழுவைப் படகுகளினால் பாதிக்கப்படுகின்றன. இதனால் உண்டாகும் பொருளாதார இழப்புகளும், தொழில் உபகரண இழப்புக்களும் ஏராளமானவை.இவ்வாறு ஏற்படும் இழப்புக்களையும் எப்படிச் சமாளிப்பது. ஆகவே, இந்திய இழுவைப்படகுகள் எமது பகுதியினுள் வருவது முற்றாகத் தடுத்து நிறுத்தப்படுவது மிக அவசியமாகும்.

கேள்வி: இந்திய இழுவைப்படகுகளின் வருகையை முற்றாக நிறுத்த முடியும் என நினைக்கிறீர்களா?

பதில் : இது எங்கள் கைகளில் இல்லை.எங்களால் முன்மொழிவாக மட்டுமே இந்தக் கோரிக்கையை முன் வைக்க முடியும். முடிவு கொழும்பு டில்லி அரசுகளின் கைகளில் தான் உள்ளது.யுத்தம் முடிந்தது என்கிறார்கள். ஆயினும் மீனவர் பிரச்சினை இன்னும் முடியவில்லை. ஏற்கெனவே உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பின் அநியாய உயிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் இக்கடற்பகுதியில் தவிர்த்திருகக்லாம்.

கேள்வி: உங்கள் பேச்சுவார்த்தைகளில் முக்கிய விடயங்கள் பற்றி?

பதில்: ஒரு வார காலமாக இரு குழுவினரும் இரு பகுதியினன் உண்மை நிலைமைகள் பற்றி நட்பின் அடிப்படையில் கலந்துரையாடினோம். எமது குழுவினன் இறுதிவரையிலான நிலைப்பாடு இந்திய இழுவைப்படகுகள் மற்றும் அவர்களது எல்லையை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனை உடனடியாகவே நீங்கள் செய்தே ஆக வேண்டும் என வலியுறுத்தினோம். அவர்கள் தரப்பினரும் எங்கள் பிரச்சினைகளை முழுமையாக ஒத்துக் கொண்டார்கள். எனினும், இழுவை மடித் தொழிலை உடனடியாக நிறுத்துவது சாத்தியமில்லையெனவும் இதற்கான மாற்றுத்தொழில் தங்களிடம் இல்லாமையால் மாற்றுத் தொழில் பற்றித் தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும் இதற்குக் கால அவகாசம் தேவையெனவும் கச்சதீவு சார்ந்த பகுதியில் குறித்த பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க ஆவன செய்து தருமாறும் வேண்டினர். அவர்களது நிலைமைகளை நாம் அவதானித்த வகையில் கால அவகாசம் வழங்க நாம் சற்று இணங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கேள்வி: உங்களின் இறுதி முடிவு பற்றி?

பதில்: எமது கடற்பரப்பினுள் எக்காரணம் கொண்டும் நிரந்தரமான இடம் தர வாய்ப்பு இல்லையென உறுதிபடத் தெரிவித்தோம். எம்மால் இலங்கையின் தென்பகுதிக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாது. ஆழ்கடல் வாய்ப்புக்களும் இல்லை. இலங்கைக் கடற்பரப்புத்தான் எமது சொத்து என நாம் தெளிவுபடுத்தினோம். இறுதியாகத் தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான உறவு, யுத்தகாலங்களில் தமிழகம் பொதுமக்களுக்கு ஆற்றிய, ஆற்றிவருகின்ற உதவிகள், தமிழக முகாம்களிலும், ஏனைய பகுதிகளிலும் எம் ஈழத்தமிழர்கள் பெற்றுவருகின்ற கல்வி, மற்றும் சலுகைகள் எதிர்கால நலன்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்குச் சாதகமான சில முடிவுகளை எமது குழு எடுத்து முன்மொழிவுகளாக இரு அரசுகளிடம் ன் வைத்துள்ளோம்.

இதன் பிரகாரம் அவர்கள் கேட்டதற்கிணங்க வருடத்தில் 70 தினங்கள் எமது எல்லைப் பகுதியினுள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பாக்கு குடாப்பகுதியில் (மன்னார் தீவின் வடக்கு) கரையோர மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டாலும் புதன் சனி ஆகிய இருதினங்கள் வீதம் வருடத்தில் 70 தினங்கள் மாலை 6 மணி தல் அடுத்தநாள் காலை 6.00 மணிவரை மீன்பிடியில் ஈடுபட முடியும் எனவும். யாழ் குடாவின் வடக்கிலும் (பாக்கு நீ ணை மன்னார் தீவின் தெற்கில் மன்னார் விகுடாப்பகுதியில் இலங்கை இந்திய கடல் எல்லையிருந்து 5 கடல் மைல் இலங்கையின் எல்லைப் பகுதிக்குள் மீன்பிடிக்க முடியும் எனவும் முன்மொழியப்பட்டது.

கால எல்லை, ஆக ஒருவருடம் 2010 நவம் பர் தலாம் திகதி முதல் 2011 நவம்பர் முதலாம் திகதிவரை இது அமையும். இதனைக் கண்காணிக்க இரு அரசுகளின் பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்பு குழு ஒன்று ஈடுபடல் எதிர்பாராதவிதமாக ஏற்படும் சம் பவங்கள் சுகமான முறையில் அணுக ஒரு குழு அமைக்கப்படவேண்டும் எனவும், இறுதி முமுடிவு அரசு எடுக்கும் எனவும், முன் மொழியப்பட்டது சிக்கல்கள் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஆராயலாம் எனவும் கூறப்பட்டது.

கேள்வி: பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததா?

பதில்: எங்களைப் பொறுத்தவரையில் திருப்திகரமாகவே அமைந்தது. நாங்கள் எடுத்த முடிவுகளை இரு அரசுகளும் பரி சீலித்து நடவடிக்கை எடுக்குமாயின் இந்தப் பிரச்சினைக்கு முடிவை எட்டலாம். மூன்று தசாப்தகால பிரச்சினை இது. ஒரு சில தினங்களில் இதற்கு முடிவு காண இயலாது எனினும் இந்தப் பேச்சு வார்த்தைக்கு உறுதியான ஒரு அடித் தளத்தை இட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி : வடபகுதியில் இன்றைய மீன் பிடித்தொழில் நிலை பற்றி…

பதில்: இலங்கையின் வடபகுதியில் மீன் பிடித்தொழில் வழமைக்கு திரும்பியுள்ளது எனக் கூறப்பட்டாலும் இன்னும் பாரிய நெருக்கடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. உயர்பாதுகாப்பு வலயங்கள் மீனவர்களின் அகதி முகாம் வாழ்க்கை இன்றும் தொடர்கின்றது. முழுத் துறைமுகங்களும் பாதுகாப்பு படைவசமே உள்ளன. ஆழ்கடல் மீன்பிடி என்ற ஒன்று இங்கு இல்லை. பாஸ் நடைமுறை இன்னும் தொடர்ந்து செல்கின் றது.

மீன்வள ஆய்வு, அறுவடைக்கு முந்திய, பிந்திய தொழில்நுட்பம் ,முகாமைத்துவம் போன்றன இங்கு பின்பற்றப்படுவதாக இல்லை உற்பத்தியில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ள விடத்திலும் போருக்கு முன்னரான செழிப்பு நிலையை அடைய வாய்ப்பு இல்லை. வடபகுதி மீனவர்கள் கையில் ஆட்சி உரித்து வராதவரையில் பழைய நிலையை அடைவது சாத்தியமில்லை என்றார் .

கருத்துகள் இல்லை: