இன்பென்ட் ஜீசஸ்
திருநெல்வேலி, கீழவல்லநாடு பகுதியில் இயங்கிவரும் இன்ஃபென்ட் ஜீசஸ்
பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் கடந்த அக்டோபர் 10-ம் தேதி கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இன்பென்ட் ஜீசஸ் (படம் : நன்றி தினகரன்)
“பேனா பிடிக்க வேண்டிய வயதில் கத்தியைப் பிடித்த மாணவர்கள்”, “படிக்கின்ற வயதில் பாதை மாறிய மாணவர்களின் வெறிச்செயல்”, “”மாணவர்களின் ரவுடி அவதாரம்”, “தவறான நடத்தையால் சஸ்பென்ட் ஆன மாணவர்கள் வெட்டி சரித்த கோரம்” என  ஊடகங்கள் கவலைப்படுகின்ற்ன. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று ஊர்வலம் போகின்றனர் பேராசிரியர் பெருமக்களும் கல்லூரி முதல்வர்களும்.
“மாணவர்களின் கொலையை சரியென்று வாதிடுகிறீர்களா?, மாணவர்கள் என்பதற்காக அவர்களுடைய பொறுக்கித் தனங்களையும் ஆதரிக்க வேண்டுமா?, பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனையும், அரிவாளும் கையுமாக அலைபவனையும், தறுதலைப் பிள்ளைகளையும் கண்டிப்பதும் தண்டிப்பதும் கூடாதா?, மாணவனை நல்வழிப்படுத்துகிற குருவாகத் திகழும் பேராசிரியர்களுக்கு அந்த உரிமை கூட இல்லையா” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மைதான், உங்களின் கேள்வி நியாயமானதுதான்.
உங்களிடம் உரிமையுடன் எதிர்க் கேள்வி ஒன்றை எழுப்புகிறோம், மன சாட்சியுடன் பரிசீலித்து பதில் சொல்லுங்கள்.
மாணவர்கள் ரவுடித்தனம் பண்ணுவதாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகின்ற பத்திரிக்கைகள், இன்ஃபென்ட் ஜீசஸ் போன்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் கல்லூரி நிர்வாகங்களின் 420 வேலைகளைப் பற்றியும் என்றைக்காவது எழுதியிருக்கின்றனவா? இல்லை, இப்பொழுதாவது அது பற்றிய விவாதத்தைத்தான் கிளப்பியிருக்கின்றனவா?