அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா (வயது 63), ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும் உள்ளார்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வரும் 17ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 7,946 பேர் இந்த தேர்தலில் ஓட்டுப் போட்டு புதிய தலைவரை தேர்வு செய்வர்.
இதற்கான வேட்பு மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற 10ம் தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு 17ம் தேதி நடைபெறும்.
இந் நிலையில் சோனியா காந்தி இன்று கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டசிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் அவர் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், காங்கிரஸ் முதல்வர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் நேற்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், மொத்தம் 50 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது என முடிவானதாகத் தெரிகிறது.
வேறு யாராவது வேட்பு மனு தாக்கல் செய்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், 17ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இன்று வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால் நாளையே முடிவு அறிவிக்கப்படும்.
சோனியாவை எதிர்த்து யாரும் போட்டியிட வாய்ப்பில்லை என்பதால் கட்சியின் தலைவராக அவர் 4வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு வந்து, தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்வார்.
கடந்த 1998ம் ஆண்டு தான் சோனியா முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளாக அவர் அந்த பதவியை வகித்து வருகிறார்.
ஒரே ஒரு தேர்தலில் மட்டும் சோனியா காந்திக்கு போட்டி ஏற்பட்டது. அந்த தேர்தலில் அவரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டார். என்றாலும் சோனியா அவரை தோற்கடித்து காங்கிரஸ் தலைவர் ஆனார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக