திருச்சி& நெல்லை: திருச்சி நவல்பட்டு பகுதியில் ஒரே நாளில் 2 பெரியார் சிலைகள் அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.அதே போல நெல்லை அருகே கடையநல்லூரியில் துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் சிலையையும் மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்தில் 6 இடங்களில் பெரியார் சிலைகள் உள்ளன. இதில் நவல்பட்டு அண்ணாநகர் பஸ் நிறுத்தம் மற்றும் நவல்பட்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் ஆகிய 2 இடங்களில் பெரியாரின் மார்பளவு சிலைகள் உள்ளன.
இதில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை வெண்கலத்தால் ஆனது.நேற்று முன்தினம் இரவு நவல்பட்டில் உள்ள 2 பெரியார் சிலைகளையும் யாரோ உடைத்துள்ளனர். இதனால் பெரியார் சிலைகளின் முகம், கண், கழுத்து, மூக்கு ஆகிய பகுதிகள் சேதமடைந்தன.
இது குறித்து அறிந்த திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூரியில்..
அதே போல துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் சிலையை, மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளது, கடையநல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடையநல்லூரில் சமத்துவபுரம் அருகே வெண்கலத்தால் ஆன பெரியார் சிலையை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் நேற்றிரவு 12 மணிக்கு 10 பேர் கொண்ட கும்பல், அந்த சிலையை கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சிலை லேசாக சேதம் அடைந்துள்ளது.பின்னர் அந்த கும்பல், அவ்வழியாக வந்த பழனி- தென்காசி அரசு விரைவுப் பேருந்தை வழிமறித்தது. பேருந்து மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பேருந்தின், கண்ணாடிகள் சேதமடைந்தன.
இதையடுத்து பேருந்து டிரைவர் மாடசாமி (வயது 49), கடையநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைடுத்து போலீசார் வழக்குப் புதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக