ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே வாய் பிளந்து பார்க்கிறது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட வர்த்தகத்தை.
இப்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தப் படத்தின் வர்த்தகம் ரூ 300 கோடியைத் தாண்டும் என்பது இந்திய திரையுலக வல்லுநர்களின் கருத்து. பிரபல பாலிவுட் இணையதளம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ரோபோ (இந்தி) படம் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகவும், ரோபோ வெளியீட்டாளர் வீனஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் எந்திரன் வினியோக உரிமை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சென்னை மாநகர விற்பனை உரிமையை இதுவரை யாருக்கும் தரவில்லை சன் பிக்சர்ஸ். முதல் போணியாக மதுரை ஏரியாவை ரூ 13 கோடிக்கு விற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனை வாங்கியிருப்பவர் பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்புவின் தம்பி அழகர். இந்த விலை பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. மதுரையே இந்த விலை என்றால், சென்னை உரிமை இதைவிட இருமடங்காக இருக்குமோ என்ற கேள்விதான் இப்போது விநியோகஸ்தர்கள் மத்தியில்!
அடுத்து என்எஸ்ஸியை விலைபேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மொத்த ஏரியாக்களும் விற்று முடியும் போது எந்திரனின் விற்பனை, இந்திய சினிமாவுலகம் பார்த்திராத சாதனை விலையைத் தொட்டிருக்கும் என்கிறார்கள்.
இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை யாருக்கு என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் எந்திரன் விலை எங்கேயோ போய்விடும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக