சிறுசேமிப்புத்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.உமாசங்கர், போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
தற்போது, விசாரணை தொடங்கப்பட்டு விட்டதால் அவர் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை 2.9.2010 முதல் ரத்து செய்யப்பட்டது
விசாரணையின் முடிவைப் பொருத்து, அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்த காலம் சரிசெய்யப்படும். சஸ்பெண்டு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர் டான்சி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து உமாசங்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் மனைவி சூர்யகலா, மகன் சுதீஸ்வரன், மகள் அருணா ஆகியோரும் வந்திருந்தனர்.
உமாசங்கர் செய்தியாளர்களிடம், ‘’என் மீது எழுந்த குற்றச்சாட்டு தவறானது. இது மாதிரி பிரச்சனை எல்லாம் வரும் என்று எனக்கு முன்பே தெரியும். அதே போல் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து ஆகும் என்றும் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தெரியும்.
நான் மனிதர்களை நம்புவதில்லை. பைபிளை கையில் எடுத்த பின்புதான் எனக்கு எல்லாமே வெற்றி. எந்த வேலையைச்செய்ய வேண்டுமென்றாலும் கர்த்தரிடம் அனுமதி கேட்டுத்தான் செய்கிறேன்.
என் மீது எழுந்த தவறான குற்றச்சாட்டினால் யார் மீதும் கோபம் இல்லை. எனக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் குரல் கொடுத்தார்; அவருக்கும் என் நன்றி.
தொடர்ந்து என் பணியைச் செய்வேன். நான் எப்போதும் யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டேன். நேர்மையான அதிகாரியாக தொடர்ந்து பணி புரிவேன்’’ என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக