சனி, 4 செப்டம்பர், 2010

குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. அவைகள் ஒவ்வொன்றும் உனக்கு நீயே என்றோ ஒரு நாள்

ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம்.
இதுவரை கால மனித குல வரலாறு என்பது அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் கண்டு வந்திருக்கின்றது. மாற்றம் ஒன்றைத் தவிர இங்கு மாறாதிருப்பது எதுவுமேயில்லை. மாறி வரும் உலகில் மாற்றங்கள் நிகழும் என்று நாமும் நம்பிக்கை கொண்டு எமது மக்களின் மனச்சாட்சிக் குரலாக இங்கு நான் பேச விரும்புகின்றேன்.

தமிழ் மக்களின் கடந்த கால வரலாறுகள் யாவும் கொடியதும், நெடியதுமான துயரங்களைச் சுமந்து வந்த வரலாறுகளே! எரிந்து போன தேசமும், அழிந்து போன வாழ்வுமாக யுத்தத்தின் வடுக்களையே எமது மக்கள் இதுவரை சுமந்து வந்திருக்கின்றார்கள்.
எங்கள் பாதங்கள் இன்னமும் சுடுகின்றன. எரிந்து போன எங்கள் தேசத்தின் தெருக்களில் எம் மக்களோடு மக்களாகச் சேர்ந்து நாமும் நடந்து வந்திருக்கின்றோம்.
எமது மக்கள் இதுவரை பட்ட துயரங்களும், விட்ட கண்ணீரும், இழந்த இழப்புக்களும், அடைந்த அவலங்களும் தொடர்ந்தும் எம் உணர்வுகளில் எரிந்து கொண்டிருக்கின்றன.
ஆனாலும், இன்று எமது தேசம் மாற்றம் ஒன்றைக் கண்டிருக்கின்றது. புயலடித்த எங்கள் தேசம் அமைதிப்பூங்காவாக மாறியிருக்கின்றது. போர் முழக்கங்கள் இப்பொழுது இல்லை. துப்பாக்கி சத்தங்கள் எங்கும் ஓய்ந்து விட்டன. எந்த நேரத்தில்?… என்ன நடக்குமோ?… என்ற அச்சங்களும், ஏக்கங்களும் எமது மக்கள் மனங்களை விட்டு அகன்று சென்று விட்டன.
இழப்புக்களும் அவலங்களும் நிகழ்ந்திருந்தாலும், இதுவே இறுதி இழப்பாகும் என்ற நம்பிக்கையோடு, இதுவே எமது மக்கள் சந்திக்கும் இறுதியான அவலமாக இருக்கட்டும் என்ற உறுதியோடு, இனி, துன்பங்களோ, துயரங்களோ இங்கில்லை என்ற எதிர்பார்ப்போடு இந்த மாற்றத்தை உருவாக்கித் தந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
இந்த மாற்றத்தைக் கண்டு நாம் எமது மக்களோடு இணைந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனாலும், இத்தகைய மாற்றம் ஒன்று நிகழ்ந்து விட்டதற்காக மட்டும் நாம் எமது இலட்சிய சுமையை இடைவழியில் இறக்கி வைத்து விட முடியாது.
எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் எமது மக்கள் அரசியலுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாகவும், ஐக்கிய இலங்கைக்குள் மற்றைய இனக்குழும மக்களோடு சரிநிகர் சமானமானவர்களாகவும், இனங்களுக்கிடையில் சமத்துவ ஐக்கியமுள்ளவர்களாகவும் வாழ அனுமதிக்கின்ற அரசியல் மாற்றமொன்று உருவாகும் வரை நாம் எமது பயணத்தில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது.
இத்தகைய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முதலிலே நாம் சில கேள்விகளுக்கு விடை காணவேண்டும்.
எமது அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை நாம் கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ள முடியாது போனமைக்கான காரணங்கள் யாவை?..
எமது மக்கள் அழிவுகளையும், அவலங்களையும் மட்டுமே இது வரை காலமும் தொடர் துயரங்களாக சுமந்து வந்திருப்பதற்கான காரணம் என்ன?….
இவைகளுக்கு நாம் முதலில் விடை தேட வேண்டும்!… நாம் கடந்து வந்த பாதையில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் எவை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்!
அனுபவங்களின் கருப்பையில் இருந்துதான் புதிய புதிய வழிமுறைகளும், சிந்தனைகளும் பிறப்பெடுக்கின்றன. தோற்றுப்போன வழிமுறைகளில் இருந்து கற்றுக் கொண்டு, அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொண்டு நடைமுறைச்சாத்தியமான வழிமுறை நோக்கி செல்வதால் மட்டுமே நாம் தேடிக்கொண்டிருக்கும் இலட்சியக் கனவுகளை எட்டி விட முடியும்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இதையே வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
நாம் எதைச் சொல்லி வந்துள்ளோமோ அதுவே இங்கு நடந்து முடிந்திருக்கின்றது.
எது நடக்கும் என்று தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தோமோ அதுவே இங்கு நடந்து கொண்டுமிருக்கிறது.
எந்த கனவுகள் ஈடேறும் என்று நாம் எண்ணியிருந்தோமோ அவையே எமது அனுபவங்கள் கற்றுத்தந்த புதிய வழிமுறைகளில் தொடர்ந்து நடக்கவும் போகின்றன….
ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தை வழி நடத்திச் சென்ற ஆரம்பகால தலைவர்களில் நானும் ஒருவன். அன்றைய தவிர்க்க முடியாத காலச்சூழலே நாம் ஆயதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாய கட்டளைகளை எம்மீது பிறப்பித்திருந்தது.
எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக எமது கடந்தகால வரலாற்றை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை.
ஆனாலும், ஆயுதப்போராட்டம் என்பது நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தப்பட்டு, நிதானிக்கச் செய்ய வேண்டிய இடத்தில் நிதானித்து நடத்தப்பட வேண்டிய ஒன்று.
மாறிவரும் சூழலை கருத்திற் கொண்டு, எமது மக்களின் கருத்துக்களை சரிவர நாடி பிடித்து அறிந்து,… எமது பலம், பலவீனங்களை கருத்தில் கொண்டு,…
எம்மிடம் உள்ள பலத்தோடு, எடுக்க முடிந்த உரிமைகளை எடுப்பதற்காக எமது போராட்ட வழிமுறையினையும் நாம் மாற்றியமைத்திருக்க வேண்டும்.
நாம் தனிநபர் பயங்கரவாதிகளாகவோ, அன்றி ஆயுதத்தின் மீது மோகம் கொண்டு எழுந்த வெறும் வன்முறையாளர்களாகவோ ஆயுதம் ஏந்தி களத்தில் நின்றிருக்கவில்லை.
தமிழ் மக்களை நாம் எவ்வாறு நேசித்திருந்தோமோ அது போலவே இஸ்லாமிய சகோதர மக்களையும், சிங்கள சகோதர மக்களையும் நேசித்திருந்தோம்.
இதன் காரணமாகவே நாம் இஸ்லாமிய சகோதர மக்களுக்கு எதிராகவோ அன்றி, அப்பாவி சிங்கள சகோதர மக்களுக்கு எதிராகவோ எமது துப்பாக்கிகளை ஒரு போதும் நீட்டியிருந்ததில்லை. நீட்ட நினைத்திருந்ததும் இல்லை.
அப்பாவி சிங்கள சகோதர மக்கள் அநியாயமாக புலிகளின் தலைமையால் அழித்தொழிக்கப்பட்ட போது எமது எதிரிகள் அப்பாவி மக்கள் அல்ல என்றும், அன்றைய அரசாங்கமே என்றும் சரியான திசை வழியை நாம் சொல்லி வந்திருக்கின்றோம். இத்தகைய படுகொலை சம்பவங்களை வன்மையாக கண்டித்தும் வந்திருக்கின்றோம்.
இஸ்லாமிய சகோதர மக்கள் வணக்க ஸ்தலங்களில் வைத்து வஞ்சகத்தனமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதும் சரி, வரலாற்று காலந்தொட்டு இரத்தமும் தசையுமாக தமிழ் மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்த இஸ்லாமிய சகோதர மக்கள் வடக்கில் இருந்து பலாத்காரமாக புலிகளின் தலைமையினால் வெளியேற்றப்பட்ட போதும் சரி….
இந்த கொடிய நிகழ்வுகளானவை தமிழ் பேசும் மக்களில் ஒரு சாராராக இருக்கும் இன்னொரு சிறுபான்மை சமூக மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயலாகும் என்று அவைகளை நாம் கண்டித்தே வந்திருக்கின்றோம்.
இவ்வாறு சகல இன மத சமூக மக்களுக்கும் எதிரான வன்முறைகளை நாம் அவ்வப்போது கண்டித்தே வந்திருக்கின்றோம்.
மொத்தத்தில் தமிழ், முஸ்லிம், மற்றும் மலையக மக்களுக்காக மட்டுமன்றி பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படுகின்ற சிங்கள மக்களின் உரிமைகளுக்காகவும் தென்னிலங்கை சிங்கள முற்போக்கு சக்திகளோடு கை கோர்த்து அனைத்து மக்களின் நலன்களுக்காகவுமே அன்று நாம் போராட எழுந்திருந்தோம்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய காலச்சூழலில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த இலங்கை அரசின் அன்றைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண மறுத்திருந்ததை நான் முதலில் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
இலங்கைத் தீவு என்பது பல்வேறு இன மத சமூக மக்களுக்கு சொந்தமான நாடு. தமிழ் என்றும் சிங்களம் என்றும் இரு வேறு மொழிகளை பேசுகின்ற மக்கள் சமூகங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனாலும், இந்த நாட்டின் ஒரு பகுதியினராகிய தமிழ் மக்களுக்கு மொழியுரிமை மற்றும் பல்வேறு விடயங்கள் மறுக்கப்பட்டிருந்தன.
1956 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டமும் மற்றும் பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினையும் திட்டமிட்ட வகையிலான பூகோள ரீதியில் குடிப்பரம்பல்களை மாற்றக்கூடியதான குடியேற்றங்களும் அரசு கவனிப்புப் பெறாமல் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் அரச உத்தியோகங்களிலும் ஏனைய நிர்வாக செயற்பாடுகளிலும் தமிழ் மக்கள் நடத்தப்பட்ட முறைமைகள் உயர்கல்வி பெறும் விடயங்களில் தரப்படுத்தலை மேற்கொண்டமை அடிக்கடி தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இனக்கலவரங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்ளைச் செயற்படுத்த விடாமல் அன்றைய சிங்கள அரசியல் தலைமைகளே தடுத்தமை போன்ற பல்வேறு காரணங்கள் தமிழ் மக்களை இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாக ஒதுக்கி வைத்திருந்தன.
இலங்கையின் புகழ் ப+த்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்கள் தான் சிங்கள சகோதர மக்கள் சமூகத்தை சார்ந்தவராக இருந்துகொண்டும் அன்று தனிச் சிங்கள சட்டத்திற்கு எதிராக அன்று குரல் கொடுத்திருந்தார்.
இரு மொழிக் கொள்கை என்பது இலங்கையை ஒரு தேசமாக வைத்திருக்கும் என்றும், ஒரு மொழிக் கொள்கை என்பது இலங்கையை இரண்டு தேசங்களாகக் கூறு போட்டுவிடும் என்றும் தனிச் சிங்கள சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவர் குரல் எழுப்பியிருந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
அப்போது பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான பொன் கந்தையா அவர்கள், இந்த நாட்டில் வாழும் ஒரு தமிழ் குடிமகன் ஒருவன்; தன் மனைவியுடன், அல்லது தன் பிள்ளைகளுடன் எந்த மொழியில் பேசவேண்டும் என்பதை தீர்மானிக்குமாறு நான் கோரவில்லை என்றும் மாறாக இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் இந்த நாட்டின் அரசாங்கத்தோடு எந்த மொழியில் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று கோருவதாகவும் தமிழர்கள் எல்லோரும் சிங்கள மொழியை படிப்பதற்கும், சிங்களவர்கள் எல்லோரும் தமிழ் மொழியைப்; படிப்பதற்கும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டால் நாம் ஆதரிப்போம் எனக் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்டு ஏனைய பாரம்பரிய தமிழ்த்; தலைமைகளும் இதை ஒரு மாற்று யோசனையாக முன்வைத்திருந்தால் அன்றைய ஆட்சியாளர்களும் அதை நடைமுறைப்படுத்தியிருந்தால் மொழியுரிமை பிரச்சினைக்கு அன்றே தீர்வு காண முடிந்திருக்கும்.
இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது?. எமது இளம் சந்ததியினர் உலக நாடுகள் எங்கும் புலம் பெயர்ந்து சென்று உலக நாடுகளின் பல்வேறு மொழிகளையும் பேச வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மொழியை அவர்கள் மறந்துதான் போய்விடுவார்களோ என்ற ஏங்கங்களும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் உருவாகி வருகின்றன.
இந்த நிலைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, இரு மொழிகளையும் ஈரின மக்களும் கற்க வேண்டும் என்ற தோழர் பொன் கந்தையா அவர்களின் கோரிக்கையினை நிராகரித்திருந்த தமிழ்த் தலைமைகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இன்று கூட தமிழும் அரச கரும மொழிகளில் ஒன்று என்பது சட்டத்தில் இருந்தாலும், அதை நடைமுறையில் அனுபவிப்பதற்கான நிர்வாகச் சிக்கல்கள் பெரும் தடையாக இருந்து வருகின்றன என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழர் மாநாட்டு அனர்த்தங்களும், தெற்காசியாவின் சிறந்த பொது நூலகமாக கருதப்பட்ட யாழ் நூலகம் 1981ல் அன்றைய ஆட்சியாளர்களால் எரித்தழிக்கப்பட்ட சம்பவமும் அன்றைய ஆட்சியாளர்கள் மீது தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தீராத கசப்புணர்வுகளை உருவாக்கியிருந்தது.
இதே வேளை, கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ் வந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்கூட யாழ் நூலகம் எரித்தொழிக்கப்பட்ட துயரம் தோய்ந்த சம்பவம் குறித்து யாழ் மக்கள் மத்தியில் மிகவும் மனம் வருந்தி தமிழில் உரையாற்றியிருந்ததையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
அதேபோன்று, அண்மையில் யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் அன்றைய ஆட்சியாளர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சம்பவத்தையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
காலத்திற்குக் காலம் அவ்வப்;போது மாறி மாறி வந்த இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக, தமக்கு எதிராக சிங்கள மக்களே கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சிங்கள சகோதர மக்களின் கவனத்தை தமிழ் பேசும் மக்களுக்கெதிராகத் திசை திருப்பி விட்டடிருந்தனர்.
இதன் காரணமாகவே 1956, 1958, 1977 மற்றும் 1981 முதல் 1983 வரை என்று இலங்கைத் தீவில் இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டிருந்தன. இதன்போது பெரும்பாலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், உடமைகளை இழந்த நிலையில் தென்னிலங்கையில் இருந்து வடக்கு கிழக்கு நோக்கி அகதிகளாக துரத்தப்பட்டார்கள்.
இந்த இடத்தில் எம் தேசத்து கவிஞன் ஒருவன் எழுதியிருந்த ஒரு கவிதை வரியினை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
பொடி மெனிக்கே தடியெடுக்க
குல துங்க துவக்கெடுக்க
கூரையேறி நாங்கள் குதித்தது
அப்புகாமி முற்றத்தில்…
கொலைப்பயத்தில்
குங்குமத்தை அழித்திருந்த
எங்கள் குல மாதர்
நெற்றிகளில் முத்தமிட்டு
சிரித்து வரவேற்றாள் சிங்கள மாது!
என்று அந்த கவிஞன் எழுதியது போல் தமிழ் மக்கள் அன்றைய ஆட்சியாளர்களால் தூண்டிவிடப்பட்டவர்களால் தாக்கப்பட்ட போது அவர்களைக் காப்பாற்றி வடக்கு கிழக்கு நோக்கி அனுப்பியவர்களும் சிங்கள சகோதரர்களே என்பதையும் நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.
இதே வேளை, இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிந்திய காலம் தொட்டு இன்று வரை இலங்கையில் எந்தவொரு இனக்கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை.
அவ்வாறானதொரு நிகழ்வைத் தூண்டிவிடுவதற்கு இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டிருக்கவும் இல்லை.
இந்த நிகழ்வானது இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான இலங்கை அரசின் ஆட்சியாளர்களின் குணாம்ச ரீதியான மாற்றத்தை எம் முன்பாக ஒப்புவித்து நிற்கிறது என்பதையும் நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
நாம் சிங்கள சகோதர மக்களை வெறுத்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கவில்லை. எமது உரிமைகளைத் தர மறுத்த அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்களையும் இணைத்து ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்காகவே போராட நாம் எண்ணியிருந்தோம்.
ஆனாலும், சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் அரசியலுரிமை குறித்த தெளிவான சிந்தனைகளை கொண்டிருந்தவர்கள் இருந்த போதிலும், அதற்கான ஒரு ஒன்றுபட்ட ஆயுதப்போராட்டத்தை இணைந்து நடத்துவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து போதிய அளவில் எவரும் முன்வந்திருக்கவில்லை.
இதன் காரணமாகவே அன்றைய சூழலில் நாம் சிங்கள முற்போக்கு சக்திகளோடு உறவுகளை வைத்துக்கொண்டிருந்தாலும் தனியான ஆயுதப்போராட்டத்தையே நடத்த தொடங்கியிருந்தோம்.
ஆனாலும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாக ஒன்றுபட்டு நிற்பதை மறுத்து போராட்டக்களத்தில் அர்ப்பண உணர்வுகளோடு நின்றிருந்த ஆயிரக் கணக்கான சக இயக்க போராளிகளையும், சக இயக்கத் தலைவர்களையும் புலிகளின் தலைமை தெருத்தெருவாக கொன்றொழித்தபோதுதான் எமது போராட்டம் செல்ல வேண்டிய பாதையை விட்டு விலகி திசை மாறி செல்லச் தொடங்கியது.
தமக்கு எதிராக போராடுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்திருந்ததை போலவே புலிகளின் தலைமையும் அன்றைய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சக விடுதலை அமைப்புகள் மீதான தடையினை விதித்திருந்தது.
புலிகளின் தலைமை ஏற்படுத்தியிருந்த இந்தத் தடையானது அன்றைய அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மிக மோசமாகவே தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஏனெனில், எமது தமிழ்த் தலைவர்கள் எவரையும் அரச படைகள் கொன்றொழித் திருக்கவில்லை. மாறாக சக இயக்கங்கள் மீதான தடைகளை உருவாக்கிய புலிகளின் தலைமையே தமிழ்த்; தலைவர்கள் அனைவரையும் அழித்தொழித்தது.
இலங்கை அரசுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராடுவதற்கான சுதந்திரம் என்பது இலங்ககை அரசினால் கூட அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயக வழியில் குரல் கொடுத்து வந்த தமிழ்த் தலைமைகள் கூட புலிகளின் தலைமையால் அழித்தொழிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் எமது போராட்டம் எதை நோக்கிச் செல்கிறது என்பது பற்றி அப்பொழுது சிந்தித்;தோம். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் பிரதான எதிரிகள் உண்மையாகவே இலங்கையின் ஆட்சியாளர்களா? அல்லது புலிகளின் தலைமையா என்று எங்களைச் சிந்திக்கவைத்தது.
ஏனைய விடுதலை இயக்கங்களை புலிகளின் தலைமை தடை செய்து, அதன் உறுப்பினர்களை தெருத்தெருவாக கொன்றொழித்து, தனித்தலைமை அதிகாரத்தை கையிலெடுத்திருந்தபோது புலிகளின் தலைமையை நோக்கி ஏன் என்று கேள்வி கேட்டு தவறுகளை சுட்டிக்காட்ட யாருக்கும் அந்த ஜனநாயக உரிமை இருந்திருக்கவில்லை.
ஒத்துப்போக மறுத்த சொந்த இனமக்களையே புலிகளின் தலைமை கொன்றொழித்த போது ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாரும் இருந்திருக்கவில்லை.
அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்களை புலிகளின் தலைமை கொன்றொழித்த போது அதையும் ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாருமிருந்திருக்கவில்லை.
அழிவு யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வு நோக்கி செல்லுங்கள் என்று புலிகளின் தலைமையிடம் கேட்பதற்குக் கூட யாரும் அப்போது பலமாக இருந்திருக்கவில்லை.
தவறுகளை சுட்டிக்காட்டி சரியான திசை வழி நோக்கி அழைத்து செல்ல முடிந்த உண்மையான விடுதலை அமைப்புகள் சகலவற்றையும் அடித்து நொருக்கி, சிதைத்து மனித குலத்திற்கு சவாலாகவே புலிகளின் தலைமை செயற்பட்டுக்கொண்டிருந்தது.
இழந்து போன உரிமைகளை பெறுவதற்கு மாறாக இருக்கின்ற உரிமைகளும் இழந்து போகும் ஆபத்தையும், அழிவையும் நோக்கி எமது போராட்டம் செல்ல தொடங்கியிருந்த போதுதான் நான் முன்னெச்சரிக்கையாக சில விடயங்களை சொல்லியிருந்தேன்.
விடுதலைக்கான போராட்டத்தை அழிவு யுத்தமாக மாற்றி, எடுத்த முயற்சிகள் யாவற்றையும் எங்கோ ஓரிடத்தில் கொண்டு சென்று சரித்து கொட்டிவிடப்போகின்றார்கள் என்று அன்றே நான் தொலை தூர நோக்கோடு சகல தரப்பினர் மத்தியிலும் எடுத்து விளக்கியிருந்தேன்.
ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சமத்துவ உரிமையும் கூடிய அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்திருந்த எம் கனவுகளை மெய்ப்படுத்த… தமிழ் மக்கள் அழிவுகளை மட்டும் சந்திக்க தொடங்கியிருந்த ஒரு காலச்சூழலில்…. விடுதலைக்கான போராட்டம் என்பது இருந்த உரிமைகளையும் இழந்து போவதற்கான அழிவுப்பாதையை நோக்கி செல்லச் தொடங்கிருந்த வேiளையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது உருவாக்கப்பட்டது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு பொன்னான வாய்ப்பு, அரியதொரு சந்தர்ப்பம்.
எமது ஜனநாயக சுதந்திரத்தை மறுத்து எம் மீது கொலைக்கரங்களை நீட்டிக்கொண்டிருந்த புலிகளின் தiலைமையின் மீதான விரோதங்களைக் கூட நாம் கருத்தில் எடுத்திருக்கவில்லை.
ஆனாலும்,….. யார் குற்றியும் அரிசியானல் சரி என்ற வகையில் புலிகளின் தலைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு எமது மக்களின் அரசியலுரிமையை நோக்கி செல்லாமல் அந்த சந்தர்ப்பத்தை தட்டிக்கழித்து விட்டார்களே என்ற தீராத கவலையே எமக்கு உண்டு.
இலங்கை இந்திய ஒப்பந்த நடை முறைகளில் ஈ.பி.டி.பியினராகிய எமக்கு பங்கெடுப் பதற்கான ஜனநாயக உரிமை என்பது மறுக்கப்பட்டிருந்தமை குறித்த ஆட்சேபனையை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனாலும்,….. எங்களது உரிமையை மறுத்து, அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பத்தை கையில் எடுத்துக்கொண்டவர்கள் அதை சரிவரப்பன்படுத்தியிருக்காமல் து~;பிரயோகம் செய்து விட்டார்களே என்ற மனத்துயரங்களே எமக்கு இப்போதும் உண்டு!
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது முழுமையான அரசியல் ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனங்கள் குறித்து நாம் சிந்தித்திருந்தாலும் அது குறித்து நாம் கவலை கொண்டிருக்கவில்லை.
ஆனாலும்,….. கிடைத்த உரிமைகளை எடுத்துக்கொண்டு இன்னமும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக அதை ஒரு ஆரம்ப முயற்சியாக எடுத்துக்கொண்டு முன்னோக்கி சென்றிருக்கவில்லையே என்ற ஆதங்கமே நமக்கிருக்கிறது.
தமது விருப்பங்களுக்கு மாறாக அவசர அவசரமாக இலங்கையும், இந்தியாவும் தங்களது நலன்களுக்காக செய்து கொண்ட ஒப்பந்தமே இதுவாகும் என்று புலிகளின் தலைமை கிளப்பியிருந்த சுய கௌரவப் பிரச்சினை குறித்து நாம் அக்கறை செலுத்தவில்லை.
அரசியல் தீர்வின்றி அழிவுகள் மட்டும் சூழ்ந்த துயரச்சமுத்திரத்தில் மூழ்கி திசை தெரியாது திக்குமுக்காடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை கரை நோக்கி அழைத்துச் செல்ல முடிந்த தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதே இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற உறுதியான கருத்தே இன்னமும் எம்மிடம் உண்டு!
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது மயிலே! மயிலே! இறகு போடு என்று நாங்கள் இரந்து கேட்டு பெற்றுக்கொண்ட யாசகம் அல்ல.
அது அன்றைய எமது அனைத்து விடுதலை இயக்கங்களினதும் நீதியான போராட்டமும், அர்ப்பணங்களும் பெற்றுத்தந்த மாபெரும் வரப்பிரசாதம் ஆகும்!
அந்த வகையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய நீதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கும் இலங்கை இந்திய ஒப்பந்த உருவாக்கத்தில் நியாயமான பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானதில் கணிசமான பங்களிப்பு இருந்திருக் கின்றது என்பதை நான் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆனாலும், அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, தமிழ் மக்களை தொடர்ந்தும் அழிவு யுத்தப்பாதைக்கு இழுத்துச் சென்று எமது மக்களையும், அழியவைத்து, தனது இயக்க உறுப்பினர்களையும், அழிவுயுத்தத்திற்கு பலி கொடுத்தது….
இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தவிர, எதையுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காமல், பெற்றுக்கொள்வதற்கு மாறாக, இருந்தவைகளையும் துடைத்து அழித்து தொலைத்து, அழிவுகளை மட்டும் தமிழ் மக்கள் மீது அவலங்களாக சுமத்தி விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் தானும் அழிந்து போன நிகழ்வானது தனக்குத் தானே அவர் தோண்டிய படுகுழி என்பதே உண்மையாகும்.
உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. அவைகள் ஒவ்வொன்றும் உனக்கு நீயே என்றோ ஒரு நாள் தூவி விட்டவைகள். இதைத்தான் இந்த இடத்தில் என்னால் கூற முடியும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்த தவறியிருந்த புலிகளின் தலைமை அதன் பின்னரும் கனிந்து வந்திருந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருந்தது.
பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை…
சந்திரிகா குமாரணதுங்க அரசுடனான பேச்சுவார்த்தை….
ரணில் விக்கிரமசிங்க அரசுடனான பேச்சுவார்த்தை….
இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசுடனான பேச்சுவார்த்தை….
இவ்வாறு தொடர்ச்சியாக சர்வதேச மத்தியஸ்தளங்களோடு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் போது அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிப்பதைத் தவிர்த்து, சாத்தியமான வழிமுறையில் புலிகளின் தலைமை அரசியல் தீர்வொன்றிற்கு உடன் பட்டிருந்தால் தமிழ் மக்கள் அழிவுகளைச் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.
பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம், என்பன உருவாக்கப்பட்ட போது அந்த ஒப்பந்தங்களை கிழித்தெறிந்து அதை தடுத்து நிறுத்தியிருந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மையினம் சார்ந்த அன்றைய அரசியல் தலைமைகளே என்பதில் எந்தவித மறு பேச்சுக்கும் இங்கு இடமில்லை.
ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல், அதற்கு பின்னரான அனைத்து முயற்சிகளும் தவறவிடப்பட்டமைக்கான தவறுகளை தமிழ்த்; தலைமைகளே ஏற்க வேண்டும்.
கிடைத்ததை எடுத்துக்கொண்டு மேலும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக கட்டம் கட்டமாக முயன்று பெற்றுக்கொள்ளாமல் கிடைத்தவைகள் அனைத்தையும் அரை குறை தீர்வு என்று தட்டிக்கழித்து வந்த அனைத்து தலைமைகளுமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
ஆகவே தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.
சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்றான தார்மீகப்பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப்போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப்பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்;கின்றேன்.
எதையுமே பெற்றுத்தராமல் வெறும் அவலங்களை மட்டுமே எம் மக்கள் மீது சுமத்தி வந்த அழிவு யுத்தத்தை நிறுத்துமாறு நாம் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் பல தடவைகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
புலிகளின் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி கொண்டுவருமாறு நாம் சர்வதேச சமூகத்திடமும் பல தடவைகள் வலியுறுத்தியும், எடுத்து விளக்கியும் கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றோம்.
இது போலவே புலிகளின் தலைமையை ஆதரித்து, உறவு கொண்டிருந்த சக தமிழ் கட்சிகளின் தலைமைகளிடமும் புலிகள் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி அழைத்து வாருங்கள் என்று பல தடவைகள் கூறி வந்திருக்கின்றோம்.
ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் சம உரிமையும் கிடைக்க முடிந்த ஒரு அரசியல் தீர்விற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வருவாரேயானால் நான் போட்டி அரசியல் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன், அரசியலில் இருந்து விலகி நின்று நல்லவைகள் நடக்கின்றனவா என்று வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன் என்று பல தடவைகள் நான் பகிரங்கமாக சொல்லியிருக்கின்றேன். ஆனாலும் இறுதி வரை இந்த வழி முறை நோக்கி பிரபாகரன் வந்திருக்கவில்லை.
சர்வதேச சமூகம் புலிகளின் தலைமையை சரியான வழிமுறை நோக்கிக் கொண்டு வர தவறிவிட்டது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புலிகளின் தலைமையை ஆதரித்து உறவு கொண்டிருந்த தமிழ் கட்சிகளும் அதை செய்திருக்கவில்லை என்பதை நான் நேசமுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்தததும் தான் புலிகளின்; தலைவர் பிரபாகரனோடு நேரடியாகவே பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புவதாக பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இதையிட்டு நாம் மகிந்த ராஜபக்ச அவர்களின் திறந்த மனதை வெளிப்படையாகவே பாராட்டி விரும்பி வரவேற்றிருந்ததோடு, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சகலர் மத்தியிலும் எடுத்து விளக்கியிருந்தோம்.
யுத்த நிறுத்தம் குறித்து யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளின் தலைமையோடும், அரசியல் தீர்வு குறித்து அனைத்துத் தமிழ், முஸ்லிம் தலைமைகளோடும் அரசாங்கம் பேச வேண்டும் என்பதே ஈ.பி.டி.பி யினராகிய எமது நிலைப்பாடாக இருந்து வந்தது.
இதை மகிந்த ராஜபக்ச அவர்கள் நடத்தி முடிப்பேன் என்று பகிரங்கமாக கூறி புலிகளின் தலைமையை நோக்கி அழைப்பு விடுத்திருந்த போது தமிழ் மக்கள் மட்டுமன்றி இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன சமூக மக்களும் மனம் மகிழ்ந்து வரவேற்றார்கள்.
ஆனாலும் புலிகளின் தலைமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சமாதானத்திற்கான அழைப்பை ஏற்க மறுத்து தொடர்ந்தும் யுத்த முனைப்புகளில் ஈடுபட்டு வந்ததை யாரும் இங்கு மறுக்க மாட்டார்கள்.
மாற்று ஜனநாயக கட்சிகளின் உறுப்பினர்கள், அதன் ஆதரவாளர்கள், கல்விமான்கள், புத்திஐPவிகள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் தம்மோடு ஒத்துப்போக மறுத்த பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரையும் தமது சொந்த இனம் என்றும் பாராமல் புலித்தலைமை தொடர்ந்து அச்சுறுத்தியும், துன்புறுத்தியும், நாட்டை விட்டுத் துரத்தியும் கொன்றொழித்தும் வந்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் சமாதான நோக்கில் எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் கை கட்டி காவல் கடமைகளில் மட்டும் நின்றிருந்த பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளை தீ மூட்டி எரித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு தாக்குதல்களை படையினர் மீது புலிகள் தொடர்ந்தும் நடத்திக்கொண்டிருந்தனர்.
இறுதியாக, மாவிலாறு அணைக்கட்டை புலிகளின் தலைமை மூடிவிட்டதோடு சமாதானத்திற்கான கதவுகளை முழுமையாக இறுக மூடிவிட்டு எமது வரலாற்று வாழ்விடங்களை மறுபடியும் ஒரு யுத்த சூழலுக்குள் வலிந்து கட்டி இழுத்திருந்தார்கள்.
அழிவு யுத்தம் எமது மக்கள் மீது பேரவலங்களை சுமத்தும் என்று நாம் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளோம். அழிவு யுத்தத்தை தொடர்ந்து நடத்தி வந்த புலிகளின் தலைமை தம்மையும் அழித்து எமது மக்களையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்போகின்றார்கள் என்றே நாம் எச்சரிக்கையோடு தெரிவித்து வந்திருக்கின்றோம்.
அழிவு யுத்தத்தின் ஊடாக எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றும், அது எமது மக்களின் தசைத்துண்டங்களையும், எலும்புக்கூடுகளையும், எரியுண்டு போன சாம்பல் மேடுகளையுமே மிச்சமாகத் தரும் என்று இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு புலிகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இறுதி வரை நாம் எச்சரித்து வந்துள்ளோம்.
இங்கு இறுதியாக என்ன நடந்து முடிந்திருக்கின்றது? எமது மக்களின உயிர்களை யுத்த களத்தில் தொலைத்து, உடமைகளை சிதைத்து, வனப்பும் வளமும் மிக்க அழகிய எங்கள் தேசத்தை சுடுகாடாக மாற்றுவதற்கான சூழலை உருவாக்கிய புலிகளின் தலைமை இன்று நாம் அன்றே சொன்னது போல் தம்மையும் அழித்துக் கொண்டுள்ளது.
யுத்தம் நடக்காத பிரதேசங்களை நோக்கி எமது மக்களை வருவதற்கு அனுமதியுங்கள் என்றும், எமது மக்களை யுத்த கேடயங்களாக பயன்படுத்தாதீர்கள் என்றும் நாம் இறுதி மோதலின் போது கூட மனிதாபிமான வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனாலும் புலிகளின் தலைமை அதைக்கூட கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
போர்ப் புயலடித்து ஓய்ந்து இப்பொழுது எங்கும் அமைதி பிறந்திருக்கிறது. இந்த வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் எமது மக்களின் சார்பாக கோரிக்கைகளையும் நாம் முன்வைத்துள்ளோம்;.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலிhத்தலைமையின் பிரச்சினைகள் வேறு என்று நாம் ஆரம்பந்தொட்டு தொடர்ந்தும் ஐனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.
தமிழ் மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வின் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமத்துவ உரிமையும் பெற்று யுத்தமில்லாத பூமியில் வாழவே விரும்புகின்றார்கள் என்பதையும்;, புலிகளின் தலைமை அரசியல் தீர்விற்கு விருப்பமின்றி தொடர்ந்தும் முடிவற்ற யுத்தத்தையே நடத்த விரும்புகின்றார்கள் என்பதையும்; பல தடவைகள் தெரிவித்து வந்திருக்கின்றோம். அதையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.
யுத்தத்தை விரும்பிய புலிகளின் தலைமையை ஐனாதிபதி அவர்கள் யுத்தத்தால் வெற்றியடைந்திருக்கின்றார்.. புலித்தலைமையின் பயங்கரவாத பிரச்சினைக்கு அவர் முடிவு கட்டியிருக்கிறார். அதற்காக நான் அவரை பாராட்டுகின்றேன்.
ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது பயங்கரவாத பிரச்சினை அல்ல என்பதையும் ஐனாதிபதி அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றார் என்றே நாம் உறுதியாக நம்புகின்றோம்.
கடந்த 2009 மே 18 இல் எமது தேசத்தை சிறைப்படுத்தி வைத்திருந்த யுத்தத்தை ஐனாதிபதி அவர்கள் வெற்றி கண்ட போது இந்த வெற்றியானது தமிழ் மக்களை வெற்றிகண்ட வரலாறு அல்ல என்றும், மாறாக இந்த நாட்டின் பயங்கரவாதிகளை தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் வெற்றி கண்ட வரலாறே என்றும் தெரிவித்திருந்தார். இதை நாம் வரவேற்;றோம். வரவேற்கின்றோம்.
இதே வேளையில், எல்லாள மன்னனை வெற்றிகண்ட துட்டகைமுனு மன்னன் தன்னால் தோற்கடிக்கப்பட்ட எல்லாள மன்னனுக்கு செலுத்தியிருந்த மரியாதையை இந்த நாட்டின் சகல மக்களினதும் ஆட்சித்தலைவர் என்ற வகையில் தமிழ் மக்கள் மீதும் ஜனாதிபதி அவர்கள் செலுத்தி வருகின்றார் என்றே நாம் நம்புகின்றோம்.
கலிங்கத்துப்போரில் வெற்றி கண்ட அசோகச்சக்கரவர்த்தி யுத்த சக்கரவர்த்தி என்ற நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புத்த தர்மத்தினனாக மாறியதைப்போல், யுத்த தர்மராக இருந்த ஜனாதிபதி அவர்கள் புத்த தர்மத்தவராக தொடர்ந்தும் செயலாற்றுவார் என்று நாம் நம்புகின்றோம்.
மதத்தால் மாறுபட்டாலும், பேசும் மொழியால் வேறுபட்டாலும், அன்றாட அடிப்படை வாழ்க்கை முறையில் பெரிதும் வேறுபடாதுள்ள நாம் அனைத்து மக்களும் மனிதநேயம் என்ற பொது வாழ்வில் தத்தமது இன, மொழி அடையாளங்களோடு ஒன்று பட்ட இலங்கையர்களாகவும், சமத்துவ உரிமை பெற்றவர்களாகவும் வாழ்வதற்கான மானிட தர்மத்தை இந்த மண்ணில் புதிய வரலாறாக ஜனாதிபதி அவர்களே தொடருவார் என நாம் நம்புகின்றோம்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இன்று இரு வேறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
ஒன்று,…. அரசியலுரிமை பிரச்சினை! இது இதுவரை காலமும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் இருப்பினும் அதற்கான முன் நகர்வுகள் நடந்து வருவது குறித்து நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.
இன்னொன்று,…. இந்த நாட்டில் யுத்தம் தொடங்கியதாலும், அது அழிவு யுத்தமாக மாறி, அந்த அழிவு யுத்தத்தை வெற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தின் போது ஏற்;பட்ட பிரச்சினைகளும் எமது மக்களின் இதுவரை அழியாத அவலங்களாக எம் முன்னால் விரிந்து கிடக்கின்றன.
அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் தங்களது சொந்த நிலங்களையும் வீடுகளையும் உறவுகளையும் உடமைகளையும் இழந்த நிலையில் மிகுந்த பாதிப்புகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மன வேதனைகளுக்கும் ஆட்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
புலிகளின் தலைமையால் பலாத்காரமாக பிடித்துச்செல்லப்பட்டும், மூளைச்சலவை செய்யப்பட்டும், விரும்பியும் விரும்பாலும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் பலர் அழிவு தரும் துப்பாக்கிகள் ஓய்ந்த பின்னரும் புனர்வாழ்வு முகாம் என்றும் தடுப்பு முகாம் என்றும் வாழுகின்ற நிலைமைகளைக் காண்கிறோம்.
ஆகவே… யுத்தத்தின் காரணமாக சகல மக்களும் அனுபவித்து வரும் அவலங்களுக்குத் தீர்வு கண்டு சகலருக்கும் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அளிக்க வேண்டியது இங்கு உடனடிக் கடமையாகும்.
இவை தொடர்பாக பல காரியங்களையும் அரசாங்கம் ஆற்றிவருவதையும், அதில் நானும் முன்னின்று உழைத்து வருவதையும் நான் இந்த இடத்தில் கூறி வைக்க விரும்புகின்ற அதே வேளையில் எஞ்சியுள்ள காரியங்களையும் துரிதப்படுத்த வேண்டும் என்று நான் தமிழ் மக்களின் சார்பாக மனிதாபிமான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்.
இதை இன்னமும் சிறப்பாகவும் அர்த்த பூர்வமாகவும் செய்து முடிப்பதற்கு சர்வதேச சமூகமும் மேலும் முன்வர வேண்டும்.
இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான உரிமை என்பது சர்வதேச சமூகத்திற்கு உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் புலிகளின் தலைமையின் மீதான அழுத்தங்களை மேலும் அதிகப்படுத்தி அவர்களை அரசியல் தீர்விற்கு உடன்பட வைக்கும் முயற்சியில் சர்வதேச சமூகத்தால் முடியாமல் போய் விட்டது என்பதே எமது கவலையாகும்.
அவ்வாறு முடிந்திருந்தால் இன்று நடந்து முடிந்திருக்கும் இறுதிக்கால அழிவுகளையாவது சர்வதேச சமூகத்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடிந்திருக்கும்.
ஆகவே, அவலப்பட்டு துயரங்களை சுமக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அரசாங்கம் முன்னெடுத்து வரும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும், மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகவும் சர்வதேச சமூகம் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களை நோக்கி தமது கரங்களை நீட்டுவதே காலப்பொருத்தமான கடமையாகும் என்று சர்வதேச சமூகத்திடம் நாம் மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்த இடத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் நான் இன்னொரு விடயத்தையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
உலகம் முழுவதையும் தானே ஆள வேண்டும் என்ற அடங்காத அருவருப்பான ஆசையினால் ஜேர்மனிய மக்கள் மீதும், ஜேர்மனிய தேசத்தின் மீதும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாம் உலக யுத்தத்தை நடத்தியதன் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்ததை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
உலக மகா சர்வாதிகாரியான கிட்லர் தனக்கு பக்கத்தில் தனக்குரிய புதை குழியை தானே தோண்டி வைத்துக்கோண்டே இரண்டாம் உலக யுத்தத்தை தொடங்கியிருந்ததையும், இறுதியில் அந்த புதை குழியில் தானே வீழ்ந்து அழிந்த பின்னர் ஜேர்மனிய மக்கள் தம்மை வலிந்து கட்டிய ஒரு உலக யுத்தத்திற்குள் தள்ளி விட்டிருந்த கிட்லரின் தவறுகளையே எண்ணிப்பார்த்தார்கள் என்பதையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
அது போலவே தமிழ் மக்களும் தங்களை இவ்வாறானதொரு அதளபாதாளத்திற்குள் தள்ளியிருக்கும் புலிகளின் தலைமையின் தவறுகளை உணர்ந்து வருகின்றனர். எமக்கான அரசியலுரிமைகளை நாம் கோருவது எமது ஜனநாயக உரிமையாகும். எமது அரசியலுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படாத வரைக்கும் அதற்காக நாம் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் உழைத்துக்கொண்டே இருப்போம்.
ஆனாலும் அரசியலுரிமைக்காக, சமாதானப் பேச்சுக்காக நடமுறைச்சாத்தியமான வழிமுறையில் உடன்பட்டு வரமறுத்து இறுதிவரை அழிவு யுத்தத்தில் மட்டும் மோகம் கொண்டிருந்த புலிகளின் தலைமையின் தவறுகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
அரசியல் தீர்விற்கு வர மறுத்து அழிவு யுத்தத்திற்குள் எமது மக்களையும் தேசத்தையும் புலிகளின் தலைமை தள்ளி விட்டிருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் தமது சுயலாபங்களுக்காக அதை ஆதரித்து அதற்கு தூண்டு கோலாக இருந்து வந்த சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தவறான தமிழ்த் தலைமைகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்காக தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களால் வஞ்சிக்கப்படமாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம். அழிந்து போன எங்கள் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் புதிய அழகோடு புதுப்பித்து எமது மக்களிடம் ஒப்படைத்து, சிதைந்து போன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுபடியும் தூக்கி நிறுத்தி எமது மக்களுக்கு புதிய வாழ்வை வழங்க அரசாங்கம் தொடர்ந்தும் விரைவாகச் செயற்படும் என்று நாம் நம்புகின்றோம்.
இதுவரை யுத்தம் துப்பிய கந்தகக் காற்றை மட்டும் சுவாசித்து வந்த எங்கள் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் சுகந்தமான புதிய தென்றல் வீச வேண்டும்;.
தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து நாங்கள் ஜதார்த்தமாகவே இதுவரை சிந்தித்து வந்துள்ளோம். ஆகாயத்து சூரியனையும், சந்திரனையும் பூமிக்கு கொண்டு வந்து எமது கைகளில் தாருங்கள் என்று சாத்தியமற்ற விடயங்களை நாம் கேட்கவில்லை.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அந்த சட்டத்தின் பிரகாரம் அதற்கு இருக்க வேண்டிய சகல அதிகாரங்களையும் வழங்கி, அந்த அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வையும், சமத்துவ உரிமையையும் நோக்கிய எமது இலட்சிய கனவுகளை நடைமுறை நனவாக்குவதற்கு வழி சமைக்க வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.
ஆளும் கட்சி உட்பட எதிர்க்கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டு அதில் பங்கெடுத்தும் வருகின்ற மாகாணசபை திட்டத்தை தமிழ் மக்களுக்காகவும் நடை முறைப்படுத்த வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.
தென்னிலங்iகை மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை என்பது தங்கமாகவும், தமிழ் மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை என்பது தகரமாகவும் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் உள்ள இலங்கைத் தீவில் விரைவான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.
நிலையானதும், உறுதியானதுமான ஆட்சியதிகாரம் எங்கு இருக்கின்றதோ அங்குதான் அதிகாரங்களை உரிய முறையில் அனைத்து இன மக்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியும்!
ஆகவே இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்றிருக்கும் ஆட்சியதிகாரம் என்பது நீடித்த நிiலைத்து இன்னமும் உறுதி பெற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். அதற்காக இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மத சமூக மக்களும், அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது அரசாங்கத்தை தொடர்ந்தும் பலமுள்ளதாக பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் நான் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன்.
மத்தியில் உள்ள அதிகாரங்கள் எந்தளவிற்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றனவோ அதே அளவிற்கு நாட்டில் ஐக்கியமும் சமாதானமும், நாட்டின் இறைமையும் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்.
தமிழ் மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துபவனாக இருந்த போதிலும், தமிழ் மக்களின் வாக்குகளால் நான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், எமது தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளும் உயர்ந்து செழிக்க வேண்டும் என்பதையுமே நான் விரும்புகின்றேன்.
பல்லின சமூக மக்கள் வாழும் இலங்கைத் தீவில் ஒரு இனம் உயர்ந்தும், இன்னொரு இனம் தாழ்ந்தும் ஏற்றத்தாழ்வுகளோடு வாழும் அரசியல் சூழ்நிலை இருக்குமாயின் அது இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கவே வழி சமைக்கும்.
ஆகவே, இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களுக்கும் சம உரிமை வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.
மாறி வரும் உலகத்தின் போக்கை புரிந்து கொண்டு. உலக ஒழுங்கை உணர்ந்து கொண்டு. உலகமயமாக்கலை அனுசரிக்க வேண்டிய இடத்தில் அனுசரித்து, எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் எதிர்கொண்டு எமது தேசிய மற்றும் சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேண்டுமேயானால் அதற்குத் தேவையானது இனங்களுக்கிடையிலான சமத்துவ உரிமைகளை நிலை நிறுத்துவதேயாகும்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம்; வெறும் சுயலாபங்களுக்காக மட்டும் அறிக்கை விட்டு, சாக்கடையில் ஓடுகின்ற சேற்று நீரோடு நாமும் சேர்ந்து ஓடியிருக்கலாம். ஆனாலும் அதற்கு மாறாக சமாதான நதிகள் சங்கமிக்கும் சமுத்திரத்தின் திசை நோக்கி ஆற்று நீராக ஓடி வந்தவர்கள்.
பெருத்த சூறாவளியையும், பலத்த சுனாமியையும் எதிர்கொண்டு உரிமைக்குக் குரல் கொடுத்து உறவுக்கு கரம் கொடுத்து, எதிர்ப்பு அரியலை தவிர்த்து நாம் இணக்க அரசியலின் வாசலை திறந்து விட்டவர்கள்.
எத்தனை இராணுவ தாக்குதல்களை யார்தான் நடத்தினாலும், அரச எதிர்ப்பு அறிக்கைகளை யார்தான் அடிக்கடி வெளியிட்டாலும், அரசாங்கத்துடன் பேசித்தான் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற தீர்க்கதரிசனமான தீர்மானத்தை எடுத்தவர்கள்.
நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் மட்டும்தான் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும், எங்கிருந்து தொடங்குவது சாத்தியமோ, அங்கிருந்து தொடங்கியே எமது கனவுகளை நனவாக்க முடியும் என்றும் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வு காண துணிச்சலோடு எழுந்து வந்தவர்கள் நாங்கள்.
இது போன்று நாம் எடுத்து கொண்ட துணிச்சலான அரசியல் நிலைப்பாட்டிற்காக… என்னோடு கூட இருந்தவர்களையும், எனது சிறகுகளாக இருந்தவர்களையும், எனது கால்களாக இருந்தவர்களையும் சுயலாப அரசியலுக்காக அறுத்துப்போட்டார்கள். துரோகிகள் என்று துற் பிரச்சாரம் செய்து, தூற்றுதல் நடத்தி பலரையும் அழித்தொழித்தார்கள். அச்சுறுத்தினார்கள்.
எமது நடைமுறைச்சாத்தியமான கொள்ளைகளை ஆதரித்தவர்களை இந்த மண்ணை விட்டு துரத்தினார்கள்.
என் மீது மனித வெடி குண்டுகளை ஏவி விட்டு ஏகப்பட்ட தடவைகள் என்னை கொன்றொழிக்க முயன்றார்கள். ஆனாலும் விழ விழ எழுந்து குருதி துடைத்து இன்னமும் பல மடங்கு உரத்த சிந்தனைகளோடு நான் எழுந்து வந்திருக்கின்றேன்.
மரணத்தைக் கண்டு, மனித வெடி குண்டுகளைக் கண்டு நான் அச்சத்தில் அடங்கி ஒடுங்கி நாட்டை விட்டே ஓடியிருக்கலாம். ஆனாலும் எமது மக்கள் மீதான தீராத நேசமும், அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அடங்காத இலட்சிய வேட்கையும் தொடர்ந்தும் எமது மக்கள் மத்தியில் நான் இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாய கட்டளையை எனக்கு பிறப்பித்திருக்கின்றன.
எந்த வழி முறையை துரோகம் என்று கூறி எம் மீதான தூற்றுதல்களை எமது மக்களின் எதிரிகள் நடத்தினார்களோ, எந்த வழிமுறையில் எம்மோடு கூட இருந்து எமது மக்களுக்காக அர்ப்பண உணர்வுகளோடு உழைத்தவர்களை கொன்றொழித்தார்களோ அன்று முதல் நாம் தேர்ந்தெடுத்து செயற்பட்டு வருகின்ற அந்த வழிமுறையே சரியானது என்று வரலாறு இன்று தேர்ந்தெடுத்திருக்கின்றது.
எம்மையும் எமது கொள்கைகளையும் நேசித்த எமது மக்களையும் அவர்கள் சுமத்திய அபாண்டமான பழிகளில் இருந்து வரலாறு இன்று விடுதலை செய்து வருகின்றது.
இது போலவே நாம் முன்னெடுத்துவரும் எமது நடைமுறைச் சாத்தியமான வழி முறையினாலும், எமது அர்ப்பண உணர்வுகளாலும் எமது மக்களையும் எதிர்கால வரலாறு விடுதலை செய்யும் என்று நாம் திடமாக நம்புகின்றோம்.
சமாதானத்தையும், சமவுரிமை சுதந்திரத்தையும் விரும்பும் எமது மக்களோடு அனைத்து அரசியல், ஜனநாயக சக்திகளும் இணைந்து ஒன்று பட்டு உழைக்க வேண்டும் என்று நான் அனைவரையும் அழைக்கின்றேன்!
அரசியல் மக்களை பிரித்து வைக்கிறது! பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கிறது!!
புகழ் பூத்த இந்த வாசகத்தை இலங்கை தீவில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் என்று அனைவருக்கும் பொதுவான ஒரு போதனையாக நான் முன்வைக்கின்றேன்! ஆரம்பகால ஆட்சியாளர்களாலும், சில சுயலாப தமிழ் தலைமைகளாலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இனமத முரண்பாடு என்ற சூழ்ச்சிகளுக்குள் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் சிக்குண்டு கிடந்த பழைய வரலாறுகளை நாம் மறப்போம்.
இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களான தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயம் என்பது சிங்கள சகோதர மக்களுக்கோ அன்றி முஸ்லிம் சகோதர மக்களுக்கோ விரோதமான விடயம் அல்ல என்ற உண்மை சகல தரப்பாலும் உணரப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
கடந்த காலங்களில் புலிகளின் தலைமையால் அப்பாவி சிங்கள சகோதர மக்களும், இஸ்லாமிய சகோதர மக்களும் கொன்றொழி;க்கப்பட்ட அனைத்து கொடிய வன்முறைகளுக்கும் நாம் மனத்துயரங்களோடு பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்கின்றோம்.
அப்பாவி மக்களான உங்களை கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களை பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப்போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக மட்டும் தமிழ் மக்களைப் பாருங்கள். இந்த நாட்டின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் உங்களது உறுதியான கரங்களை நீட்டி, அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் சிறந்து செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும் இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
இந்த உரை உங்களுக்கு ஆச்சரியத்தை தந்திருக்கலாம். உங்களது ஆச்சரியத்திற்குக் காரணம் இந்த குரலின் அசாதாரணத் தன்மையே. கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரிகிறது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாயப் பூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதே போலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயைபுணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்படவே இல்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமற் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுப்பட்ட பிரிக்கப்பட முடியாத இலங்கையை ஏற்ப்படுத்தலாம். அந்த மனநிலையில் நின்றுகொண்டே இந்த உரையை நிகழ்த்தியிருக்கின்றேன்.
நாங்கள் முதலில் இலங்கையர்களாகவும் அடுத்து எமது இனக்குழும அடையாளத்தையும் இணைத்து போற்றிக் கொள்வோம். தமிழரைப் பெறுத்தவரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதையே எமது இலட்சியமாகக் கருதுகின்றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையையோ என்றுமே விட்டு விட இலங்கைத் தமிழர்களான நாம் ஒப்புக்கொள்ளவே மாட்டோம். இது உறுதி. தமிழில் ஓர் அற்புதமான கவிதை வரிகள் உண்டு.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே.
இதுவே சகலருக்கும் உரியதான பொது விதியாக இருக்கட்டும் என்று கூறி வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள் என்று கூறி எனது சாட்சியத்தை இத்துடன் முடிகின்றேன்
http://epdpnews.com/news.php?id=8086&ln=tamil

கருத்துகள் இல்லை: