சனி, 4 செப்டம்பர், 2010

இலங்கை விவசாயிகள் இந்தியா வந்துள்ளனர்.பைசா செலவில்லா இயற்கை விவசாய முறை

பைசா செலவில்லா இயற்கை விவசாய முறை குறித்து அறிந்து கொள்வதற்காக, இலங்கை விவசாயிகள் இந்தியா வந்துள்ளனர். மகாராஷ்டிரா விவசாயி தலைமையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் பார்வையிட்டு வருகின்றனர். அக்குழுவினர் நேற்று காங்கயம் வந்தனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த சுபேஸ் பாலிக்கர் என்ற விவசாயி, ரசாயண உரத்தின் கேடுகளை எடுத்துரைத்து, இயற்கை விவசாய முறையை ஊக்குவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஒரே ஒரு நாட்டு மாடு வளர்த்து, 30 ஏக்கர் அளவுக்கு இயற்கை விவசாயம் செய்யும் "பைசா செலவில்லா இயற்கை விவசாய முறை' என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்தகைய இயற்கை விவசாய முறையை பார்வையிடுவதற்காக, இலங்கையில் இருந்து 40 பேர் அடங்கிய விவசாயிகள் குழு இந்தியா வந்துள்ளது. அக்குழுவினர் நேற்று காங்கயம் பகுதியில் உள்ள விவசாய பண்ணைகளை பார்வையிட்டனர்.

இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகி தூரன்நம்பி கூறியதாவது: இயற்கை உரம் பயன்படுத்தினால், விளையாத நிலத்தையும் விளைவிக்கலாம். ஒரு நாட்டு பசுவின் 10 கிலோ சாணம், 10 கிலோ சிறுநீர், 200 கிலோ தண்ணீர், இரண்டு கிலோ வெல்லம், இரண்டு கிலோ துவரம் பருப்பு அல்லது பாசிப்பயறு ஆகியவற்றை மூன்று நாட்கள் ஊற வைக்க வேண்டும். அப்போது, கைப்பிடி அளவு மண்ணை எடுத்து கலந்துவிட வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கோடிக்கணக்கான நுண்ணியிரிகள் வளரும்.

மூன்று நாட்களுக்கு பின், அதை விவசாய நிலத்தில் கலந்து விடலாம். இதன்மூலமாக, பயிருக்கு கிடைக்காமல் இருந்த சத்துக்கள் நன்றாக கிடைக்கும். பயிரும் செழித்து வளரும். இத்தகைய முறையை சுபேஸ் பாலிக்கர் வழிகாட்டுதல்படி, கர்நாடகாவில் உள்ள ஐந்து லட்சம் விவசாயிகள், கேரள விவசாயிகள் செயல்படுத்தி பயனடைந்துள்ளனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இம்முறையில் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து இந்தியா வந்திருந்த விவசாயிகள், இங்குள்ள இயற்கை விவசாய முறையை கற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளில் உள்ள இயற்கை விவசாய பண்ணைகளை பார்வையிட்டனர். வரும் 5ம் தேதிக்குள் அனைத்து பண்ணைகளையும் பார்வையிட்டு, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு, இலங்கை திரும்புகின்றனர். இம்முறையை இலங்கையில் பின்பற்றும்போது, அங்குள்ள விவசாயிகளும் மேலும் பயனடைவர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: