வெள்ளி, 3 செப்டம்பர், 2010

மிடுக்குடன் மீண்டெழுகிறது யாழ். உள்ளூர் பொருளாதாரம்

யாழ். குடா நாட்டிலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் தற்போது கூடுதலான வருமானம் பெற்று வருகின்றனர். அங்குள்ள விவசாய மற்றும் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களுக்கு இன்றைய காலத்தில் சிறந்த சந்தை வாய்ப்புக் கிடைத்து வருவதனாலேயே உற்பத்தியாளர்களுக்கு இத்தகைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
யுத்தம் நிலவிய காலப் பகுதியில் யாழ். குடா நாட்டுக்கும் தென் பகுதிக்கும் இடையிலான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. யாழ். குடாவின் உற்பத்திப் பொருட்களை தென் பகுதிக்கு அனுப்பி வைக்க முடியாதிருந்தது. அப்பொருட்களை உள்ளூரிலேயே விற்பனை செய்ய முடிந்ததால் சிறந்த விலை கிடைக்க வில்லை. இதன் காரணமாக அங்குள்ள விவசாயிகள் மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் போதிய வருமானத்தைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து யாழ். குடா நாட்டிலுள்ள உற்பத்தியாளர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அங்கு உற்பத்தியாகின்ற அத்தனை பொருட்களையும் அவர்கள் தென்பகுதிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கக் கூடிய சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
யாழ். குடா நாட்டு விளைபொருட்களான திராட்சை, பனாட்டு, ஒடியல், வாழைப்பழம், வெங்காயம், மாம்பழம், பலாப்பழம், பனங்கட்டி, நல்லெண்ணெய் மற்றும் கைத்தொழில் உபகரணங்களுக்கு தென் பகுதியில் எப்போதுமே தனிமவுசு உண்டு. இப்பொருட்கள் யாவும் இன்று நாட்டின் தென் பகுதியில் தாராளமாகக் கிடைக்கின்றன. மக்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர்.
அதே சமயம் தென் பகுதியிலிருந்து நாளாந்தம் யாழ். குடாநாட்டுக்குச் செல்கின்ற மக்களும் யாழ்ப்பாணத்து விளைபொருட்களை விரும்பி வாங்குகின்றனர். வட பகுதிப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு தற்போது சிறப்பாக உள்ளதனால் உள்ளூர் உற்பத்தி மூலமான பொருளாதாரம் உச்சத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.
முப்பது வருடங்களுக்கு முந்திய காலப் பகுதியிலும் யாழ். குடா நாடு இவ்வாறுதான் செழிப்புற்று விளங்கியது. கல்வி, விவசாயம், வர்த்தகம் போன்றவையே யாழ். மக்களின் உயிர் மூச்சாக இருந்தன. விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற பிரதேசமாக யாழ் குடாநாடு விளங்கியதுடன் விவசாயச் செய்கையில் ஈடுபட்டோரே பணவசதி படைத்தோராகவும் திகழ்ந்தனர்.
யுத்தம் ஆரம்பமானதும் இந்நிலைமை படிப்படியாக மாற்றமடையத் தொடங்கியது. விவசாயம், கடற்றொழில், கைத்தொழில் துறை ஆகியன வீழ்ச்சியடைந்ததுடன் புலம்பெயர்வும் தலையெடுத்தது. உள்ளூர் உற்பத்தியின் வாயிலாக யாழ். குடாவில் ஏற்பட்ட தனிநபர் பொருளாதார வளர்ச்சியானது காலப் போக்கில் திசைமாறியதுடன் வெளிநாட்டுப் பணத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமையும் உருவாகியது.

யாழ். குடா மக்களின் பொருளாதார நிலைமையானது கடந்த கால் நூற்றாண்டு காலமாக புலம்பெயர் மக்களின் உழைப்பிலேயே தங்கியிருந்ததெனலாம்.
இந்நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. உள்ளூர் உற்பத்திகளுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மக்கள் தங்களது சொந்த உழைப்பின் மூலமே பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதுவே நிலைத்திருக்கக் கூடிய ஜீவனோபாய முயற்சியுமாகும்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரசாயனவியல் துறை பேராசிரியரான பொன்னுச்சாமி நவரட்ணம் தெரிவித்துள்ள கருத்தொன்றை இவ்விடத்தில் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும். ‘உயிர் இரசாயனவியல் துறையில் கடந்த கால்நூற்றாண்டு காலமாக யாழ். குடாவில் ஈட்டப்பட்ட வெற்றிகளை இனிமேல் பொருளாதார மேம்பாட்டுக்கான உற்பத்தித் துறைக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்பதே பேராசிரியர் நவரட்ணம் தெரிவித்துள்ள கருத்தாகும்.
பனை உட்பட ஏனைய விவசாய உற்பத்திகளிலிருந்து பெறுமதி கூடிய நுகர்வுப் பொருட்களைத் தயாரிப்பதே உயிர் இரசாயனத்துறையின் அடிப்படை அம்சமாகும். பேராசிரியரின் மேற்படி ஆலோசனையானது உரியபடி கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்.

கருத்துகள் இல்லை: