சனி, 4 செப்டம்பர், 2010

இந்தியா-இலங்கை ஆட்டத்தில் சூதாட்டம்; சூதாட்ட தரகர் தகவல் 2009-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடந்த

பாகிஸ்தான் வீரர்கள் “ஸ்பாட்பிக்சிங்” எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சூதாட்டம் பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியே வந்த வண்ணமாய் இருக்கிறது. 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி இந்தியா-இலங்கை அணிகள் ராஜ்கோட்டில் மோதிய ஒரு நாள் போட்டி பிக்சிங் (சூதாட்டம்) செய்யப்பட்டதாக இந்தியாவை சேர்ந்த முன்னணி சூதாட்ட தரகர் ஆங்கில பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

அந்த போட்டியில் இலங்கை “டாஸ்” ஜெயித்து இந்தியா முதலில் ஆடியது. பேட்டிங்குக்கு சாதகமான அந்த மைதானத்தில் இந்தியா 414 ரன் குவித்தது. பின்னர் இலங்கை அணி ஆடியது. தில்சான் அதிரடி ஆட்டத்தால் (160ரன்) அந்த அணி இலக்கை நோக்கி முன்னேறியது. ஆனால் 3 ரன்னில் தோற்றது. இலங்கை பந்து வீச்சில் 27 எக்ஸ்ட்ரா ரன்னும் இந்திய பந்து வீச்சில் 21 எக்ஸட்ரா ரன்னும் கொடுக்கப்பட்டன. அந்த ஆட்டத்தில் மொத்தம் 825 ரன்கள் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த சூதாட்ட தரகர் கூறியதாவது:-

ஒரு கட்டத்தில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 401 ரன் எடுத்து இருந்தது. 7 பந்தில் 14 ரன்களே தேவை என்ற நிலை இருந்தது. அப்போது “பெட்டிங்” அதிவேகமாக நடந்தது. இந்தியாவுக்கு அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இலங்கை வெற்றி பெறும் என்று யாருமே சொல்லவில்லை. அதன்படியே நடந்தது. அந்த நேரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 20 வயது வாலிபர் எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இந்தியா வெல்வது உறுதியாகி விட்டது. இதனால் அனைத்து பணபரிமாற்றங்களை ரத்து செய்து விடுங்கள். மேற்கொண்டு பெட்டிங் கட்ட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த போட்டியின் முடிவால் ரூ.28 கோடி கைமாற்றப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: