ஆசிரியர்களும் சிறுவர்களாகி.....!
(ஜீவிதன்)
உயர்தரப் பரீட்சை நிறைவடைந்துவிட்டது. அடுத்த வாரம் பாடசாலை ஆரம்பமாகிறது. பரீட்சை எழுதியவர்கள் பல்கலைக்கழக அனுமதியைத் தொடரவும், மாணவர்கள் புதிய பாடங்களைத் தொடங்கவும் தயாராகிவிட்டார்கள்.
சில பெற்றோர்கள், மாணவர்களை வீட்டுப் பாடங்களைப் படிக்கச் சொல்லிப் பிழிந்து எடுத்திருப்பார்கள். பதின்மவயது பரீட்சார்த்திகளுக்கும் இது விதிவிலக்கானதன்று.
பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற கணிப்பீட்டுக் குள் தான் வருகிறார்கள். எனவே, பொதுவாக மாணவர்களை அல்லது சிறுவர்களை அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் பண்படுத்தவேண்டும் என்கிறார்கள் ஆய்வறிவாளர்கள். ஆனால், பிள்ளைகளைக் கண்டித்து, பயமுறுத்தி வளர்த்தால்தானே, அவர்கள் நல்ல முறையில் கல்வி கற்பார்கள்.
மேல் நாடுகளுக்கு வேண்டுமானால், அன்போடு அரவணைக்கும் கலாசாரம் ஒத்துவரலாம். நமது பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளை வளர்க்க வேண்டுமானால் அவர்களைக் கண்டித்தே ஆகவேண்டும் என்கிறார்கள் சில ஆசியர்களும் பெற்றோர்களும். ஆனால், வீட்டில் வா! நில்! நட! படி! என்று பிள்ளைகளை அதட்டி அதிகாரம் செய்யும் சில பெற்றோர்கள், வகுப்பில் ஆசிரியர்கள் மாணவ தலைவர்கள், மாணவர்களை அடித்தால், கண்டித்தால் துள்ளிக் குதித்து விடுகிறார்கள். சிலவேளை பொலிஸ் நிலையம் வரை செல்கிறார்கள். கொழும்பில் உள்ள பிரபல தமிழ்ப் பாடசாலைகளில் இந்தப் பிரச்சினை இன்னும் தொடர்ந்துதான் வருகிறது.
வீட்டில் தாம் சற்று கண்டித்தாலும், தம் பிள்ளையை வெளியில் எவரும் கண்டித்துவிடக் கூடாது என்பதில் பெற்றோர்கள் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். ஆசிரியர், மாணவர் தலைவர்கள் அடித்துவிட்டதாகக் கேள்வியுற்றதும் துடித்துப் போகிறார்கள். பெற்றோர் பிள்ளைகள் மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடுதான் இது.
பொதுவாகவே பிள்ளைகள் கண்டிக்கப்படக்கூடாது. அன்புடன் அரவணைக்கப்பட வேண்டும். அதன்மூலமே சிறுவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது ஆய்வறிவாளர்களின் கருத்து. மேல்நாடு என்றாலும் கீழ்நாடு என்றாலும் சிறுவர்கள் சிறுவர்கள் தான். எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் அன்பு செலுத்தப்படவேண்டும். தனி அறையில் வைத்துத் தனிமைப்படுத்துவதை விடுத்து அவர்களை சமூகமயப்படுத்தி வளர்க்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள். சிறுவர்களுக்கு மனதில் எந்த வலியும் ஏற்படுத்தாமல் அவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதுதான் சாலச் சிறந்தது என்பதே அவர்களின் அறிவுரை. இதனை கொழும்பில் உள்ள முக்கிய கல்லூரிகளின் அதிபர், ஆசிரியர்களும் நன்கு உணர்வார்கள்.
உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர், அடுத்ததாகப் பல்கலையை எதிர் பார்க்கும் மாணவர்களை ஆசிரி யர்களே சீரழிக்கும் நிலை இன் னும் தொடர்ந்து தான் வருகிறது.
மலையகத்தின் நீர்த்தேக்கப் பகுதி யில் உள்ள விநாயகப் பெருமான் பாடசாலை மாணவி ஒருவர் பரீட்சை எழுதி வீட்டுக்குச் செல்லவில்லையாம். நீர்த்தேக்க பாலத்தின் பரீட்சை மண்டபத்திலி ருந்து வெளியில் சென்றவரை இடை வழியில் வைத்து மணப் பெண்ணாக்கி இருக்கிறார் அந்த மாணவியின் ஆசிரியரே. இந்தச் சூரியக் குஞ்சு ஆசிரியருக்கு அவரின் சகோதரரே மனைவியு டன் வந்து அந்த மாணவியைப் பதிவுத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
இத்தனைக்கும் இருவரும் ஒரே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள். மணப் பெண் அவர்களின் மாணவி. மலையகத்துப் பாடசாலைகளுக்கு இப்படி பக்குவப்படாத ஆசிரியர்களை நியமித்தால் வேறு எப்படி இருக்கும் என்பதற்கு சூரியக் குஞ்சுகளே சான்றாகி வருகிறார்கள். இவர்களுக்கு சமூகம்தான் பதில் சொல்லவேண்டும். சிறுவர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசினால் இப்படியான பேதமைமிக்க ஆசிரியர்கள் நினைவுக்கு வருவது சாபமோ தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக