வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நாட்டில் அரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் தோன்றியுள்ளது : எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை!

அரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் ஆபத்தான சூழல் நாட்டில் தோன்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார். பதினெட்டாவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சுயாதீன அரசு சேவை ஆணைக்குழு மற்றும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை, நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பு கேம்டபிரிஜ் ரெரஸிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் வாசஸ்தலத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு அன்று அரசாங்கத்தை கோரினோம். இதன்போது நாம் புலிகளுக்கு துணை போவதாக ஜனாதிபதி எம் மீது குற்றம் சாட்டினார். ஆனால் இன்று விடுதலைப் புலிகளை அழித்து நாட்டை ஒன்றுபடுத்திய சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ளார்.
அவரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஓய்வூதியமும் பறிக்கப்பட்டுள்ளது. இது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மீறும் செயலாகும். ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன, சந்திரிகா ஆகியோர் சர்வதேச சிவில் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். எனவே உள்ளூரில் நியாயம் கிடைக்கா விட்டால் சர்வதேசத்தின் உதவியை கோர சந்தர்ப்பம் இருந்தது.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இதில் கையெழுத்திடாததால் சரத் பொன்சேகாவின் பதவிகள், ஓய்வூதியம் பறிக்கப்பட்டது தொடர்பில் சர்வதேச ரீதியில் குரல் கொடுக்க முடியாதுள்ளது.
நாற்பது வருட காலம் அரச துறையில் நாட்டுக்கு சேவை செய்தவர் சரத் பொன்சேகா. அதற்கு கிடைத்த வெகுமதியே ஓய்வூதியமாகும். நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் அவர்களது சேவையை கௌரவித்தே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது மனித உரிமை சம்பந்தப்பட் விடயமாகும். இந்த உரிமையை பறிப்பதென்பது மனித உரிமை மீறலாகும். எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே சரத் பொன்சேகா அரசியல் தொடர்பில் கவனம் செலுத்தினார்.
அதற்கு முன்பு அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அரசாங்கம் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. அரசாங்கம் அரச ஊழியர்களின் உரிமைகளை பறித்து அவர்களை அடிமைகளாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அரச ஊழியர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்படுகின்றனர். தேசிய இறைவரித் திணைளக்கள அதிகாரி பஸ்ஸில் வைத்து தாக்கப்படுகின்றார்.
இவ்வாறு நாடு தழுவிய ரீதியில் அரச ஊழியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளை வகுப்பேற்றும் செய்யா விட்õல் ஆசிரியர்களும் தாக்கப்படும் அபாயம் ருக்கின்றது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இல்லாததன் பலாபலன்கள் இன்று இவ்வாறு தலைதூக்கியுள்ளது.
அரசியலமைப்பு திருத்தத்தின் போது சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சுயாதீன அரச சேவை ஆணைக்குழுவை நீக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு படிப்படியாக அரச ஊழியர்கள் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதோடு அவர்களது உரிமையான ஓய்வூதியத்தை பறிக்கும் நடவடிக்கைக்கும் அரசாங்கம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்தை தடுத்து நிறுத்தி அரச ஊழியர்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். போராட வேண்டும். இதற்கு பங்களிப்பை வழங்க ஐ. தே. கட்சி தயாராகவுள்ளது என்றார்

கருத்துகள் இல்லை: