வன்னியில் இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடையும் தறுவாயை எட்டி வரும் நிலையில், மீளக் குடியமரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சகல உதவிகளும் பெற்றுக் கொடுக்கப்படுமென்று இந்தியா உறுதியளித்துள்ளது.
இதேவேளை, முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடைந்து வருவதால், உறவினர்கள், நண்பர்களுடன் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தவர்கள் உடனடியாக வந்து மீள்குடியமர்வதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டுமென்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கிளிநொச்சிக்குச் சென்று இடம் பெயர்ந்த மக்களின் நிலவரத்தை அறிந்து கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் திருமதி நிருபமா ராவ், வன்னி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தியா பூரண உதவிகளை வழங்குமென உறுதியளித்ததாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியிலும் வீடுகள் நிர்மாணிக்கப்படுமென்றும் இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென்றும், திருமதி நிருபமா ராவ் கூறியதாக அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த பெருமளவானோர் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாகவும், எஞ்சியவர்களை அடுத்த வாரமளவில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
முகாம்களில் இன்னமும் 730 குடும்பங்கள் மட்டுமே மீளக்குடியமர எஞ்சியுள்ளன. இந்தக் குடும்பங்களும் அடுத்த வாரமளவில் சொந்த இடங்களுக்குத் திரும்பிவிடுவர் என்றும் அரச அதிபர் குறிப்பிட்டார்.
பூநகரி, கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே மீளக் குடியமர்ந்தி விட்டனர்.
இதனால், வெளி மாவட்டங்களில் உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளில் தங்கியிருப்போர் சொந்த இடம் திரும்புவதற்கு நேற்று முன்தினம் (31) திகதி வரை சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று கரைச்சி பிரதேச மக்களுக்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 11 ஆம், 18 ஆம், 25 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை குறிக்கப்பட்ட முகாம்களுக்குச் சென்று தம்மைப் பதிவு செய்து கொள்ளு மாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தினங்களுக்குப் பின்னர் வருகை தருவோர் மீள்குடியமர்வதில் சிரமங்களை எதிர்நோக்க லாம் எனவும் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 659 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் துரிதமான மீள்குடியேற்ற நடவடிக்கை காரணமாக யாழ்.
மாவட்டத்தில் 58 அகதிகளே மீள்குடியமர்த்த எஞ்சியுள்ளதாக வும், அவர்கள் ஒரு வாரத்திற்குள் மீள்குடியமர்த்தப்படுவர் எனவும் வவுனியா அகதிகள் முகாமின் பிரதான இணைப் பாளர் கொலொனெல் வடுகப்பிட்டிய குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் 14 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் மெனிக் பாம் முகாமிலுள்ள 900 பேர் கிளிநொச்சி, பச்சிலம்பிள்ளை பகுதியில் மீள்குடியமர்த்தப் படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக