டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவிற்குள் 48 விமான போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வருகிறது. நாளை முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துச் சேவை கட்டணத்தை 3 முதல் 23 சதவிகிதம் வரை குறைக்கவிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில், ஏர் இந்தியா நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சந்தை பங்களிப்பை அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு தான் ஏர் இந்தியா கட்டணத்தை குறைக்க உள்ளதாக தெரிகிறது.
ஏராளமான பயணிகளை தம் பக்கம் ஈர்த்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஏர் இந்தியாவின் இந்த செயலால் மற்ற விமானத் துறை நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று விமான போக்குவரத்து துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதனை கருத்தில் கொண்டு தான் ஏர் இந்தியா நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, வருமானம் பெருகும் என்ற பேச்சு சந்தை வட்டாரத்தில் உள்ளது.
இது குறித்து கே.பி.எம்.ஜி. நிறுவனத்தின் இயக்குனர் அம்பர் துபை கூறியதாவது,
ஏர் இந்தியா நிறுவனம் தன் விமான சேவைக் கட்டணத்தை குறைத்தால் அதன் சந்தை பங்களிப்பு உயர வாய்ப்பு இருக்கிறது. எனினும் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் கவனமாக எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் கடந்த ஏழு மாதங்களாக பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஜுலை மாதம் மட்டும் இந்நிறுவன விமானங்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 14 சதவிகிதம் அதிகரித்து 41.61 லட்சமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக