வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நான் காரணம் அல்ல 13 நாளில் வாஜ்பாய் ராஜினாமா Jayalalitha


13 நாளில் வாஜ்பாய் ராஜினாமா செய்ததற்கு நான் எப்படி காரணமாக முடியும்?-ஜெ
வாஜ்பாய் 13 நாளில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கு நான் காரணம் அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொடநாட்டிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தன்னுடைய கேள்வி-பதில் அறிக்கையில் 2005ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள நிவாரணம் குறித்து குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. ஆனால், 2005ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள நிவாரணம் குறித்து நான் எனது அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை என்பதை முதலில் சுட்டிக்காட்ட விழைகிறேன். இருப்பினும், வெள்ள நிவாரணம் குறித்து கருணாநிதி குறிப்பிட்டுள்ளதால் இது குறித்த உண்மை நிலையை விளக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, தொடர்ந்து 5 கட்டமாக வரலாறு காணாத அளவுக்கு பெருமழை பெய்து தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ரூ. 13,685 கோடி அளவுக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டது. இது மட்டுமல்லாமல், சிறப்பு ஒதுக்கீடாக 2.58 லட்சம் டன் அரிசியும், 43,200 கிலோ லிட்டர் மண்ணெண்ணையும் அளிக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய அரசின் சார்பில் முதலில் ரூ. 500 கோடி மட்டுமே நிதியுதவி வழங்கப்பட்டது. பின்னர், 16.12.2005 அன்று நான் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எடுத்துக் கூறி, உடனடியாக நிதியுதவி, அரிசி, மண்ணெண்ணை ஆகியவற்றை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தேன்.
எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். மேலும், மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டினார். அன்று இரவே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கூடுதலாக ரூ. 500 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு மேலும் 10,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணை கூடுதலாக ஒதுக்கீடு செய்து இருப்பதாகவும், சாலைகள் மற்றும் பாசன முறைகளை சீர்செய்ய நபார்டு வங்கி உதவி செய்யும் என்றும், மற்ற விஷயங்கள் குறித்து உயர்மட்டக் குழு பரிசீலனை செய்யும் என்றும் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த உடனடி உதவியை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, தன்னை கலந்தாலோசிக்காமல் ஏன் நிதி உதவி வழங்கினீர்கள் என்று மத்திய அரசை கேட்டதாக பின்னர் தகவல்கள் வந்தன.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, மாநில அரசு ரூ. 1,000 கோடி மட்டுமே கேட்டதாகவும், அதை அப்படியே மத்திய அரசிடம் சொல்லி பெற்றுக் கொடுத்தது போலவும் தற்போது கருணாநிதி கூறியிருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வாஜ்பாய் நிலைகுலைந்து 13 நாளிலும், 13 மாதங்களிலும் பதவியை ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியதற்கு நான் காரணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை.

வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமராக பதவி வகித்தது 1996ம் ஆண்டு. அப்போது, அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெறவில்லை. நிலைமை இவ்வாறிருக்க 13 நாளில் பிரதமர் பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்ததற்கு நான் எப்படி காரணமாக முடியும்?.

தமிழ்நாட்டின் நலத்திற்கு எதிராக, குறிப்பாக காவிரியில் தமிழகத்திற்கு எதிரான நிலையை பாஜக 1999ம் ஆண்டு எடுத்ததன் காரணமாக, அதிமுக பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது.
அதன் பின்னர், பாஜகவுடன் கைகோர்த்து, அதிலும் சாதனை படைத்தவர் கருணாநிதி.

மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பொது நுழைவுத்தேர்வு என்ற முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு தான் கடிதம் எழுதியது தான் காரணம் என்று கூறியிருக்கிறார் கருணாநிதி. இவர் கடிதம் எழுதியது 15.8.2010 அன்று. ஆனால், இதற்கு மத்திய அரசு எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை.

பின்னர், 19.8.2010 அன்று பொது நுழைவுத் தேர்விற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகு தான் மத்திய அரசு தனது முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

கச்சத் தீவைப் பொறுத்த வரையில், அதை இலங்கைக்கு தாரை வார்த்த நடவடிக்கையை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருணாநிதி கூறியிருக்கிறார். கச்சத்தீவு 26.6.1974 அன்று தாரைவார்க்கப்பட்டுவிட்டது. ஆனால், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 21.8.1974 அன்று.

அதாவது இரண்டு மாதங்கள் கழித்துத் தான் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார் கருணாநிதி.

1991ம் ஆண்டு கச்சத் தீவை மீட்பேன் என்று நான் முழக்கமிட்டதை கருணாநிதி குறிப்பிட்டு என்ன நடவடிக்கை எடுத்தேன் என்று வினவியிருக்கிறார். கச்சத் தீவைப் பொறுத்தவரையில் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் கிடையாது.

கச்சத் தீவு மீட்பு குறித்து அன்றைய பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், பின்னர் பிரதமர்களாக இருந்த வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரிடம் நான் கடிதம் மூலமாகவும், நேரிலும் பல முறை வலியுறுத்தி இருக்கிறேன்.

1991-1996ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டின் உரிமைகளான கச்சத்தீவு மற்றும் காவிரி நதி நீர் பங்கீடு ஆகியவற்றை நான் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதால் தான், மத்திய அரசு எனக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தற்போதும் மீனவ சமுதாய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கச்சத் தீவு தாரை வார்ப்பு ஒப்பந்தம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன் என்பதை இந்த சமயத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

தனது கேள்வி-பதில் அறிக்கையில், 2004ம் ஆண்டு சுனாமியால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்ட போது, சுனாமி நிவாரண நிதிக்காக ரூ. 21 லட்சத்தை வழங்கியதாக கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். அதை நான் மறுக்கவில்லை.

அதே சமயத்தில், கோடிக்கணக்கான ரூபாய் பணம் மத்திய அரசிடம் கொண்டு போய் கொடுக்கப்பட்டதை கருணாநிதி மறைத்துவிட்டார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை: