செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

தமிழகம் முழுவதும் சத்துணவு பணியாளர்கள் கைது

கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சி தமிழகம் முழுவதும் சத்துணவு பணியாளர்கள்  கைது

 தமிழகம் முழுவதும் சத்துணவுப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
பணி நிரந்தரம், காலி இடங்களை நிரப்ப வேண்டும், படிப்புக்கு ஏற்ற அரசு வேலை வழங்க வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை சத்துணவு பணியாளர்கள் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அவர்கள் கோட்டை நோக்கி ஊர்வலம், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தினர். 
அதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சமூக நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து புதிய தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

இந்த ஊர்வலத்துக்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்தனர். அனுமதியை மீறி ஊர்வலம் நடைபெறும் என்று சத்துணவுப் பணியாளர்கள் அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வாகனங்களில் புறப்பட்ட சத்துணவுப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சென்னை நகரின் நுழைவு வாயில்களில் 18 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்துள்ளனர். அங்கும் சோதனை நடந்தது. வாகனங்களில் வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ரயில்கள், பஸ்களில் வந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இன்று காலையில் அக்கரை செக்போஸ்ட்டில் வந்த 250 பேர்கைது செய்யப்பட்டனர். மேலும் 190 பேர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர்.
 சேப்பாக்கத்தில் சமூக நலத்துறை அலுவலகத்திலும் சிலர் திரண்டனர். அவர்களும் ஊர்வலமாக செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை மாலையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் புதிய தலைமைச் செயலகம், பழைய தலைமைச் செயலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு வருபவர்களை தீவிர சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதித்தனர்.

கருத்துகள் இல்லை: