யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய, தே.மு.தி.க., பொதுக்குழு,
அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னையில் நாளை கூடுகிறது.
தி.மு.க., பா.ஜ., கட்சிகள் கூட்டணிக்கு தூது விடுத்து, வலை விரித்து
காத்திருப்பதால், தே.மு.தி.க.,வின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு,
அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், தி.மு.க.,
தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில், சிறிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
அணியை வலுவாக்க, தே.மு.தி.க., வருகை அவசியம் என்ற நிலையில், தி.மு.க.,
திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க.,வை இழுக்க, எல்லா
வழிகளிலும் முயற்சித்து வருகிறது.அதற்காக அக்கட்சி கையாண்ட தந்திரங்கள்
அதிகம். தே.மு.தி.க., மாவட்ட செயலர்களுக்கு, முதலில், தி.மு.க., தரப்பில்
வலை விரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பொதுக்குழுவில், தி.மு.க., கூட்டணிக்கு
ஆதரவாக, அவர்கள் குரல் கொடுப்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக,
தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கு அடுத்தபடியாக, தே.மு.தி.க., தலைமையுடனும்,
அதற்கு நெருக்கமான வட்டாரத்துடனும் பேசி, கூட்டணிக்கு அழைத்து வருவதற்கான
நடவடிக்கையிலும் தி.மு.க., இறங்கி உள்ளது.