ஏ.கே.கான்
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் பாமகவை வெட்டி விடக் கூடிய அபாயம் இருப்பதால் தான், மூன்றாவது அணி குறித்து பேச ஆரம்பித்துள்ளார் ராமதாஸ்.
இதன்மூலம் விஜய்காந்தின் தேமுதிகவுக்கு ராமதாஸ் அழைப்பு விடுப்பதாகத் தெரிகிறது.
பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி விரும்பினாலும் அதற்கு துணை முதல்வர் ஸ்டாலின் முட்டுக் கட்டை போடுவதாக பாமக தரப்பிலேயே சொல்கிறார்கள்.
ஸ்டாலின் இந்த முடிவுக்கு வரக் காரணம், அமைச்சர்கள் ஏ.வ.வேலு மற்றும் பொன்முடி தான் காரணம் என்றும் பாமக கருதுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவை அதன் கோட்டையிலேயே முடக்கிப் போட்டவர் வேலு. 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவை வேலுவின் அதிரடி அரசியல் தான் காலி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாமகவுக்குப் போய்க் கொண்டிருந்த திமுகவின் பாரம்பரிய வட மாவட்ட வாக்குகளை மீண்டும் திமுகவுக்குக் கொண்டு வந்தது வேலுவின் ஆள் பலமும் திமுகவின் பண பலமும் தான். இதே வேலு தான் பென்னாகரத்திலும் பாமகவை பின்னுக்குத் தள்ளி திமுகவை இடைத் தேர்தலில் வெல்ல வைத்தார்.
இதனால் பாமக நமக்குத் தேவையில்லை என்றும், அவர்களை வரும் தேர்தல்களிலும் வென்றுவிட முடியும் என்று வேலு திட்டவட்டமாகச் சொல்வதை ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
அதே போல அதிமுக கூட்டணியில் சேர பாமக தயாராக இருந்தாலும் ஜெயலலிதா தயாராக இல்லை என்றே தெரிகிறது. வட மாவட்டங்களில் வெல்லக் கூடிய சாத்தியமுள்ள தொகுதிகளை வழக்கம்போல் பாமக வாங்கிக் கொண்டு, வெல்வதற்குக் கடினமான பிற தொகுதிகளையே தன் தலையில் கட்டும் என்பதால், அப்படிப்பட்ட கூட்டணி தேவையில்லை என்ற முடிவுக்கு அதிமுக வந்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்த இரு கட்சிகளும் சேர்ந்து தன்னை வெட்டி விட்டால் தானும் ஜனதா கட்சித் தலைவர் 'சுப்பிரமணிய சாமி நிலைமை'க்கு தள்ளப்பட்டு விடுவோம் என்ற அச்சம் ராமதாசுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியல் செல்லாக் காசான சுப்பிரமணிய சாமியை திமுகவும் அதிமுகவும் அடுத்தடுத்து ஆதரித்து மதுரையில் எம்பியாக்கின. ஆனால், பின்னர் இரண்டு கட்சிகளும் அவரை வெட்டி விட்டபோது அவரால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.
மதுரையில் எம்பியாக இருந்தபோது ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யாத சாமி, தனது காரில் சிவப்பு விளக்கு சுழலவிட்டபடி, கருப்புப் பூனைப் படையினரின் வாகனங்கள் அதிவேகத்தில் அணி வகுக்க, அவரது அலுவலகம் அமைந்துள்ள பீபிகுளம் ஏரியாவை சுற்றி வந்ததோடு சரி.
அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பின் மதுரை பக்கம் வருவதையே நிறுத்திக் கொண்டுவிட்ட சாமி, இப்போது அங்கு தனித்துப் போட்டியிட்டால், மத்திய அமைச்சர் அழகிரியின் ஆள் பலத்தைத் தாண்டி கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்ல முடியாது என்பதே உண்மை.
இப்போது பாமக நிலைமையும் கிட்டத்தட்ட சுப்பிரமணிய சாமி நிலைமை தான். காங்கிரஸைப் போல அதிமுக, திமுக மீது சவாரி செய்து பழகிவிட்ட ராமதாசின் பாமக வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் வட மாவட்டங்களில் 2வது இடத்துக்கும் தென் மாவட்டங்களில் சுயேச்சைகளுடனும் தான் போட்டி போட வேண்டிய நிலைமை வரும்.
இதை உணர்ந்து தான் பாதுகாப்பாக 'முன்னெச்சரிக்கை அரசியல்' நடத்த ஆரம்பித்துள்ளார். ராமதாஸ் விரும்பும் திமுக கூட்டணி அமையாத பட்சத்தில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கடைசி வரை இழுத்தடித்துவிட்டு வெட்டிவிட்டால், பாமகவுக்கு உள்ள ஒரே பிடிமானம் விஜய்காந்த் தான்.
இதனால் தான் அரசியலில் நிரந்தர பகைவரும் இல்லை என்ற வசனத்தை எடுத்துவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க முயல்வதாகத் தெரிகிறது.
விஜய்காந்த் மதுரைக்காரராக இருந்தாலும் நாயுடு சமூகத்தினர் அதிகம் உள்ள விருதுநகர் பகுதி தவிர்த்து, பிற தென் மாவட்டங்களை விட அவருக்கு பாமகவுக்கு செல்வாக்கு மிகுந்த வட மாவட்டங்களில் தான் ஆதரவு அதிகமாக உள்ளது.
இந்தப் பகுதி வாக்குகளை விஜய்காந்தும், பாமகவும் இணைந்து 'வளைத்தால்' அது அதிமுக, திமுகவை தடுமாற வைக்கும் என்பது நிச்சயம். இதனால் தான் தேமுதிகவுடன் கூட்டணி போட்டு வலுவான மூன்றாவது அணி அமைக்க தீவிரம் காட்டுகிறார் ராமதாஸ்.
ஆனால், விஜய்காந்தை கூட்டணிக்குள் இழுக்க அதிமுகவும் தீவிரமாகவே உள்ளது. இதற்கு விஜய்காந்தும் தயார் தான் என்கிறார்கள். அதே நேரத்தில் அதிமுகவிடம் அதிக இடங்களைப் பெறவே, தனி கூட்டணி அமைப்பேன் என்ற அஸ்திரத்தையும் அவர் வீசி வருகிறார்.
முதலில் திமுகவிடம் இருந்து காங்கிரசை பிரித்து அதனுடன் கூட்டணி அமைக்க விஜய்காந்த் முயன்றார். ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியைத் தொடர சோனியா முடிவு செய்துவிட்டதாகவே தெரிவதால், அதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.
விஜய்காந்த் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அது வட மாவட்டங்களில் பாமகவுக்கு பெரும் சவாலாக அமையும். இதனால் என்ன 'அரசியல் விலை' கொடுத்தாவது தானும் அதிமுக கூட்டணியிலேயே சேர ராமதாஸ் முயலலாம். அல்லது மீண்டும் திமுக கதவைத் தட்டலாம்.
அதே போல விஜய்காந்தும் சீட் விஷயத்தில் பிடிவாதம் பிடித்து , அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தவிர்த்தால் வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக-மதிமுக-இடதுசாரிகள், பாமக, தேமுதிக-சிறிய ஜாதிக் கட்சிகள் அணி என 4 முனை போட்டி கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
அப்படி ஒரு நிலைமை வந்தால் அதிகமாக பாதிக்கப்படும் கட்சியாக இருக்கப் போவது பாமக தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக