ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

அமெரிக்க துப்பாக்கி சூடு ... வெளிநாட்டவர்களுக்கு எதிரானது? வெள்ளை மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது?


மின்னம்பலம் : : அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் கடந்த வாரம் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பயங்கரவாதி ஒருவர் மூன்று பேரை சுட்டுக்கொன்றார். அதன்பின் ஆறு நாட்கள் கழிந்து நேற்று (ஆகஸ்ட் 3) டெக்சஸ் மாகாணத்தில் எல் பாசோவிலுள்ள வால்மார்ட் ஸ்டோரில் 21 வயது இளம் பயங்கரவாதி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் படுகாயமடைந்தனர். சம்பந்தப்பட்ட பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே ஓஹியோவில் டேட்டன் நகரிலுள்ள பிரபல பாரில் மற்றொரு பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியும் கொல்லப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓஹியோ காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில், “டேட்டனிலுள்ள ஓரேகன் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அருகாமையிலிருந்த காவல் அதிகாரிகள் உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டனர். பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பொதுமக்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 16 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெக்சஸில் வால்மார்ட் ஸ்டோரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு 19 நிமிடங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஸ்பானிய மக்கள் டெக்சஸை ஆக்கிரமிப்பது குறித்து அவர் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவை இனங்களின் அடிப்படையில் தனியாக பிரிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை மக்களுக்கு பதிலாக அமெரிக்காவில் வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தாண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்து நாட்டில் கிரிஸ்ட்சர்ச் நகரிலுள்ள மசூதியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலையும் அவர் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார். நியூசிலாந்து தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ள அவர், டெக்சஸில் ஸ்பானிய மக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு நேரடி பதிலடியே இத்தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், அமெரிக்காவில் மற்றொரு தாக்குதல் நடைபெற்றுதால் மீண்டும் ஒரு பதில் தாக்குதல் நடத்தப்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குடியேறிகளுக்கு எதிராக 2300 வார்த்தைகளுடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காவில் தொடர் தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டின் ஆயுதச் சட்டங்கள் தொடர்பான விவாதங்களும் வலுப்பெற்றுள்ளன

கருத்துகள் இல்லை: