சனி, 10 ஆகஸ்ட், 2019

கேரள நிலச்சரிவு; 150 பேர் கதி என்ன? : நாடு முழுவதும் கொட்டித்தீர்க்குது கனமழை

தினமலர் : புதுடில்லி: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 150க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கேரளாவில் வயநாடு, மலப்புரம், கண்ணுார், இடுக்கி உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் நாளை வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த கேரள அரசுப் பணியாளர் தேர்வு மற்றும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 13 குழுக்கள் 180 ராணுவ வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.
பாலக்காடு மாவட்டம் ஆலத்துாரில் அதிகபட்சமாக 39.8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொச்சி விமான நிலையத்தில் 21.2 செ.மீ. மழையும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் 20.5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

கேரள மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் காங். தலைவர் ராகுல் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.< கர்நாடகாவில் பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, ராய்ச்சூர், யாத்கிரி, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, ஷிவமோகா, குடகு மற்றும் சிக்மகளூர் ஆகிய மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் பலியாகி உள்ளனர்.





மஹாராஷ்டிரா:

மஹாராஷ்டிராவின் சாங்கிலி, புனே, கோலாப்பூர், சோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாங்கிலி மாவட்டத்தில் 80 ஆயிரம் பேரும், கோலாப்பூரில் 97 ஆயிரம் பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.





உத்தரகண்ட்:

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு 30 வயது பெண் மற்றும் அவரது ஆறு வயது மகன் பலியாகினர். சமோலி மாவட்டத்தில் ஒரு பெண் மற்றும் அவரது ஏழு வயது மகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். கடும் மழையால் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


ஒடிசா:

ஒடிசாவில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது மாவட்டங்களில் 1.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.





ம.பி.:

மத்திய பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள தார் மற்றும் பர்வானி மாவட்டங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். குஜ் ஆற்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நுல்லா ஆற்றின் வௌ்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்.


குஜராத்:

குஜராத்தில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து அங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட சர்தார் சரோவர் அணை நேற்று திறக்கப்பட்டது. மொத்தமுள்ள 30 'ஷட்டர்களில்' 26 'ஷட்டர்'கள் திறக்கப்பட்டன.





புதைந்தது மேப்பாடி:

கேரள மாநிலம் வயநாடில் இரண்டு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மேப்பாடி என்ற இடத்தில் நேற்று முன் தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த பகுதியே மண்ணுக்குள் புதைந்ததாக கூறப்படுகிறது. அதில் 150க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் துரிதமாக நடக்கின்றன

கருத்துகள் இல்லை: