செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

பரூக் அப்துல்லா எங்கே? - பாராளுமன்றத்தில் அமித் ஷாவுடன் தி.மு.க. எம்.பி.க்கள் மோதல்

மாலைமலர் : காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்துவரும் நிலையில் எங்கள் நண்பர் பரூக் அப்துல்லா எங்கே? என தி.மு.க. எம்.பி.க்கள் ஆவேசமாக பேசினர். புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய  தி.மு.க. மக்களவை எம்.பி.,க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு எங்கள் நண்பர் பரூக் அப்துல்லா எங்கே? என  ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மசோதாவை தாக்கல் செய்த உள்துறை மந்திரி அமித் ஷா அவையில் அமர்ந்திருந்த நிலையில், இந்த அவையில் இருக்க வேண்டிய எங்கள் நண்பர் பரூக் அப்துல்லா எங்கே என்பதற்கு உள்துறை மந்திரி உடனடியாக பதிலளிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.


இதேபோல், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதையும் அமித் ஷா தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

டி.ஆர்.பாலுவின் கருத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தி.மு.க. எம்.பி., தயாநிதி மாறன், பாராளுமன்ற விதிமுறைகளை விளக்கும் புத்தகத்தில் உள்ள சில வாசகங்களை மேற்கோள் காட்டி பரூக் அப்துல்லா இந்த அவைக்கு வர இயலாமல் போனது ஏன்? என்பது தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: