2012 ஜனவரியில் ஜெயலலிதா பற்றி வெளியான ஒரு செய்திக்காக நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதும், குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவை துண்டிக்கப்பட்டதும் ஆசிரியர் மற்றும் இணையாசிரியர் மீது தமிழகம் முழுவதும் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. அதே
செய்திக்காக சட்டசபை செயலாளர், சட்டசபை உரிமை மீறல் குற்றம் புரிந்ததாக
விளக்கம் கேட்டு நக்கீரன் ஆசிரியர் மற்றும் இணையாசிரியருக்கு உரிமை
மீறல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க கால
அவகாசம் வேண்டி, தங்களது சார்பில் வழக்கறிஞர்களை அனுப்பி சட்டசபை செயலாளர்களுக்கு பதில் அளித்தனர் ஆசிரியர் மற்றும் இணையாசிரியர். ஆனால் சட்டசபை செயலாளரோ, சட்டசபையில் வழக்கறிஞர் ஆஜராக முடியாது என்றும், தாங்கள்தான் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் வழக்கறிஞர் ஆஜராவது எந்த நடைமுறையிலும் இல்லை என்றும், இதுவரையில் இந்தியாவில் எந்த சட்டமன்றத்தில் நடைபெறாதது எனவே ஆசிரியர் மற்றும் இணையாசிரியர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.இதனை எதிர்த்து நக்கீரன் ஆசிரியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில்,சட்டசபையில் அறிவார்ந்த அறிஞர்கள் மற்றும் நூலகர்கள், உதவி நூலகர்கள், செயலாளர்கள், உதவி செயலாளர்கள் ஆகியோர் உள்ளனர். சட்டசபை உரிமை குழு கேட்கும் சட்டபூர்வமான விளக்கத்திற்கு ஒரு சாதாரண பத்திரிகையாளரான நான் வழக்கறிஞர் மூலம் தான் தகுந்த சட்ட விளக்கம் அளிக்க முடியும். மேலும் சம்மந்தப்பட்ட பிரசுரம் முதல் அமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சேர்ந்தது. எந்த விதத்திலும் அது சட்டசபையின் கண்ணியத்தை குறைக்காது என்பதை என் சார்பில் நிலைநாட்ட சட்ட விளக்கங்களும், நீதிமன்ற முன் தீர்வு விளக்கங்களும் அளிக்க வழக்கஞர்களால்தான் முடியும். சட்ட உரிமைக் குழுவில் என் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யவும், சாட்சிகளை விசாரிக்கவும் எனது வழக்கறிஞர்கள் என்னுடன் ஆஜரானால்தான் முறையானதாக இருக்கும். அரசியலமைப்பு பிரிவு 20ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட சட்ட அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களின் உதவி மறுக்க இயலாது. மேலும் சட்டசபை உரிமை குழுவின் பரிந்துரைகளை ஏற்று சபாநாயகர் என்னை தண்டிக்கவும், சிறைக்கு அனுப்பவும் அதிகாரம் உள்ளது. இந்த எல்லையில்லா அதிகாரங்களுடன் என்னை தண்டிக்க முயலும் போது என் தரப்பு வாதங்களை கேட்கவும் எனக்கான எதிர்வாதங்களை சமர்பிக்கவும் சட்டம் கற்று நீதிமன்ற நெறிமுறைகள் தெரிந்த வழக்கறிஞர்களை என் சார்பாகவும் அல்லது தேவைப்படும்போது என்னுடனோ அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
ஆசிரியர் சார்பாக வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
இதே பிரச்சனையை மேற்கோள்காட்டி நமது வழக்கறிஞர் எட்விக், சட்டசபையில் வழக்கறிஞர்களை அனுமதிக்க முடியாது என்பது வழக்கறிஞர் சட்டம் பிரிவு
30க்கு எதிரானது. எனவே நக்கீரன் கோபால் சார்பாக சட்டசபையில் வழக்கறிஞர்கள்
தாக்கல் செய்த வக்காலத்து மற்றும் பதில் உரைகளை ஏற்க முடியாது என்று சட்டசபை செயலாளர் கூறுவதை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த
இரண்டு ரிட் மனுக்களிலும் தீர்ப்பு அளித்த உயர்நீதிமன்ற நீதியரசர்
சந்துரு, நக்கீரன் ஆசிரியரும், வழக்கறிஞர்களும் சட்டசபையில் எந்த விதிமுறைகளையும்
மீறவில்லை. எனவே இரண்டு மனுக்களும் ஏற்க தக்கது என்றும், பின் வரும்
நாளில் இந்த உரிமைக்குழு முன்பு நக்கீரன் கோபால் விளக்கம் அளிக்க நேரிட்டால், அவரது சார்பாக வழக்கறிஞர்கள் செல்லலாம்.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டால், அவருடன் வழக்கறிஞர்கள் செல்லலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கின் மூலம் இந்திய அளவில் இதுவரை எந்த சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சனையிலும் நடைபெறாத வழக்கறிஞர் வாதத்திற்கு நக்கீரன் வழி ஏற்படுத்தியுள்ளது.
இந்த
நக்கீரன் வழக்கின் மூலமாக பத்திரிக்கை சுதந்திரமும், வழக்கறிஞர்களின்
உரிமையும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகவும் இந்திய அளவில் ஒரு முதல் முறையான முன் தீர்வாகும். இது நக்கீரன் சட்டபோராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக